பா.ரஞ்சித்தின் நீலம் சேனலில் வந்திருக்கும் ஸ்நேகா பெல்ஸினின் இந்த உரை Pro-Choice மற்றும் Pro-life. அதாவது கருக்கொல்லாமைக்கும் கருக்கலைக்கும் உரிமைக்கும் இடையேயுள்ள அரசியலைப் பற்றி விளக்குகிறது.
ஸ்நேகா வழங்கியுள்ள நல்ல தெளிவான உரை. Pro-Life vs Pro-Choice என்பவற்றை தனி மனித சுதந்திரம் என்கிற கோணத்தில் பார்த்திருக்கிறார்கள்.
மனிதன் மட்டுமல்ல. இந்த உலகமே, சமூகங்களே இயங்குவதன் அடிப்படைச் செயல் தான் இனப்பெருக்கம். அது ஒரு சமூகச் செயலாக பார்க்கப்பட வேண்டிய தேவை இருக்கிறது.
கருக்கொல்லாமை ஆரம்ப காலங்களில் கருவில் இருக்கும் குழந்தை ஒரு உயிர்: அதை அழிக்க நினைப்பது ஒரு உயிர்க் கொலை என்கிற பார்வையோடு பார்த்தது. அதனாலேயே பல மதங்கள் கருக்கலைப்பை தடை செய்தன. பின்னாட்களில் அது ஒரு இயக்கமாகவும் ஆனது.
மேலும் அது பின்னோக்கி தேய்ந்து கருக்கொல்லாமை(Pro-Life) ஐ பயன்படுத்தும் வலதுசாரிகள் அதை பெண்ணின் மீதான அதிகாரத் திணிப்பாக ஆக்கி, பெண் உடலின் மேலான ஆணுடைய ஆதிக்கத்தை நிறுவும் கருவிகளாக ஆக்கிக் கொண்டனர். மதங்களும் கருவுறுதலை புனிதப்படுத்தி பெண்ணின் மேல் ஆதிக்கம் செய்யும் கருவியாக கருக்கொல்லாமையை பயன்படுத்த ஆரம்பித்தனர்.
இந்த கொரோனா காலத்தில் விரும்பாத கரு உருவாகி அதை அபார்ஷன் செய்ய பல லட்சம் பெண்கள் முயன்ற போது அபார்ஷன்கள் செய்வதை அனுமதிக்க அரசு மறுத்துள்ளதும், பாலியல் வன்முறையில் உண்டான கருவைக் கலைக்க கோர்ட்டே அனுமதி மறுத்ததுமான ஜனநாயக கேலிக்கூத்துகள் பெண்கள் மேல் சட்டம் என்கிற பெயரிலேயே Pro-life வன்முறையை செய்துள்ளன என்பதை புள்ளிவிவரங்களுடன் விளக்குகிறார்.
முதலாளித்துவம் பெண்களை ஒரு கூலி குறைந்த உழைப்பாளிகளாக பார்க்கிறது.
ஆண்களுக்கும் பெண்களுக்குமிடையேயான வேலைப் போட்டியில் ஆணும் பெண்ணும் தனித் தனி ஆளாக ஆக்கப்படுகிறார்கள்.
குடும்பமாக அவர்கள் இணைந்து வாழ்வது என்பது எந்தவித இணைப்பும், பந்தமும் இல்லாமல் ஆக்கப்படுகிறது.
திருமணம், ஒருவரை ஒருவர் சகித்துக் கொள்ளுதல், மேடு பள்ளங்களில் இணைந்து இருத்தல் என்கிற மனித உறவுகள் ஏற்படுத்தும் பிணைப்பை உடைத்து, மனிதனை மேலும் மேலும் தனிமைப் படுத்த இந்த வித Pro-Choice சார்பான பேச்சுக்கள் பயன்படும் என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம்.
கருவுறுவதையும் அதை வளர்ப்பதையும் சமூக விஷயமாகக் கருதாமல், பெண்ணின் தனிப்பட்ட சுதந்திரம் மட்டுமே சார்ந்த Pro-Choice ஆக பார்ப்பதும் ஒரு வகையான வெற்று தனிமனித வாதமே. அதற்கு ஒரு சமூகப் பொறுப்பு ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்தே வழங்கப்பட வேண்டும். டி.என்.ஏ டெஸ்ட் சரியாக , கருவின் தந்தையான ஆண் யாரென்பதை அடையாளப்படுத்திவிடும் என்பதால், ஒரு கரு உருவாவதின் பொறுப்பை, ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்து சுமத்துவதன் மூலம் Pro-life என்பதற்கு ஒரு சமூக ரீதியான தீர்வை தர முடியும்.
அதே நேரம் pro-life என்கிற பெயரில் வலதுசாரி சிந்தனைகள் பெண்ணின் உடல், சுதந்திரம் மேல் ஆதிக்கம் செய்யும் சூழலை தடுக்க வேண்டியதும் முக்கியம் என்பதால், இந்த வலதுசாரி ஆதிக்கச் சூழலில் Pro-Choice ஐ நாம் நிபந்தனையின்றி ஆதரிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். அது பெண்ணின் விடுதலையை மையப்படுத்தி இருப்பதால்.
Pro-life மற்றும் Pro-Choice இரண்டும் வெறும் தனிப்பட்ட பெண்ணின் சுதந்திரம் அல்லது சுமை என்பதாக பார்க்கப்படாமல் சமூக அமைப்பின் அடிப்படை செயல்பாடுகளில் ஒன்றாக வைத்துப் பார்க்கப்படும் போது இரண்டுமே தேவைப்படும் விஷயங்களாக ஆகும்.