அன்பு நிறைந்த நண்பர்களுக்கு,
வணக்கம்.
சன் நியூஸ் தொலைக்காட்சியின் தலைமை ஆசிரியராக (Editor-in-Chief) பொறுப்பேற்கவிருக்கிறேன் என்ற செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் பெருமகிழச்சி அடைகிறேன். அளவற்ற ஆதரவை அள்ளி வழங்கிய அனைவரின் கரங்களையும் நெகிழ்ச்சியோடு பற்றிக் கொள்கிறேன்.

அறமும், உண்மையும் மக்கள் நலனுமே ஊடகப் பணியின் முதன்மையான நெறிகள் என்பதில் எனக்குள்ள அசைக்கமுடியாத நம்பிக்கையை மீண்டும் அழுத்தந்திருத்தமாக வெளிப்படுத்த விழைகிறேன்.

நேயர்களான மாணவர்கள், ஆசிரியர்கள், பல்துறை வல்லுனர்கள், அரசியல் தலைவர்கள், திரைத்துறை மற்றும் இலக்கிய ஆளுமைகள், உயர் அதிகாரிகள், நீதித்துறையினர், சக பத்திரிகையாளர்கள் என்று பல்வேறு தளங்களிலிருந்து நீண்ட ஆதரவுக்கரங்கள் சற்றும் எதிர்பாராதவை. தொலைபேசியிலும் சமூகவலைதளங்களிலும் வாஞ்சையும் அன்பும் பொழிந்த ஒவ்வொருவருக்கும் என் நன்றி.

சமூக, அரசியல், பண்பாட்டுத் தளங்களில் தமிழ்நாடு ஒரு தனித்துவமான மாநிலம் என்பதை அறிவுப்பூர்வமாகவும் அனுபவ ரீதியாகவும் நன்கறிவேன். ஆனால் இந்த உண்மையை, உணர்வுப்பூர்வமாக கண்டது இந்தத் தருணத்தில்தான்!

நேரலைகளிலேயே மூழ்கிப் போயிருந்த ஊடகவியலாளனுக்கு அரண் சேர்க்கவும் உரம் ஊட்டவும் தன்னிச்சையாக மக்களிடம் எழுந்த அன்பலை, என்னைத் திக்குமுக்காடச் செய்தது. நெகிழ்ந்துபோனேன்.

தனிப்பட்ட ஓர் ஊடகவியலாளருக்குக் கிடைத்த ஆதரவு என்பதைவிட, அவர் பிரதிநிதித்துவப்படுத்தும் இதழியல் அறத்துக்கு மக்கள் தரும் அங்கீகாரம் என இதை எடுத்துக்கொள்வதே பொருத்தமானதாக இருக்கும் என்று கருதுகிறேன். எளிய மக்களின் நலனை முன்னிறுத்தி, தங்கள் மனசாட்சியின் குரலாக ஒலிக்கும் ஒருவருக்கு தமிழ் மக்கள் தங்களுடைய பேராதரவைத் திரட்டி அளித்திருக்கிறார்கள் என்றே உணர்கிறேன்.

என்னுடன் இணைந்து நின்ற அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. வாய்ப்பளித்த சன் குழுமத்துக்கும் திறமையையும் தொழில் நேர்த்தியையும் எப்போதும் அங்கீகரிக்கும் திரு. கலாநிதி மாறன் அவர்களுக்கும் என் நன்றி.

நடுநிலை வழுவாது, உண்மையின் பக்கம் நின்உ, ஊடக அறம் பேணி, சமரசமின்றி மக்களுக்காகத் தொடர்ந்து இயங்குவேன்; மக்களுக்கான இதழியலைத் தொடர்ந்து உயர்த்திப் பிடிப்பேன் என்று மீண்டும் உறுதி ஏற்பதே, நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கும் வெளிப்படுத்திய அன்புக்கும் காட்டும் நன்றி என உணர்கிறேன். நன்றி.

வற்றா அன்புடன்
மு.குணசேகரன்
07.08.2020

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.