மத்திய பாஜக அரசு மாநிலங்களின் கல்வி உரிமையைப் பறிக்க , பளபளக்கும் சில விளம்பரங்களோடு, கொரோனா காலத்தில் நாடாளுமன்றத்தில் விவாதமே நடத்தாமல் வெளியிடும் அடுத்த அவசரச் சட்டம் இந்த புதிய கல்விக் கொள்கையாகும்.
இது சம உரிமை மற்றும் சம நீதிக்கு எதிரான சட்டமாகும். இதை எதிர்ப்பதற்கான பின்வரும் காரணங்களைப் பட்டியலிடுகிறது பச்சைத் தமிழகம் கட்சி.
[1] கல்வி பொதுப்பட்டியலில் இருக்கக்கூடாது, மாநிலங்கள் பட்டியலில் மட்டுமே இடம்பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துவோம். பிற மாநில மக்களிடமும் இதைப் பரிந்துரைப்போம்.
[2] ‘நாடு முழுக்க ஒரேவிதமானக் கல்வி’ என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று தெளிவாகச் சொல்வோம். எங்கள் தொன்மை, எங்கள் வரலாறு, எங்கள் கலாச்சாரம், எங்கள் இலக்கியம், எங்கள் சிறப்புக்களை எங்கள் குழந்தைகளுக்குச் சொல்லிக்கொடுக்க உன் பாடப்புத்தகங்களும், உன் ஆசிரியர்களும், உன் அதிகார அமைப்பும் எப்படி எங்களுக்கு உதவும் என்று கேள்வி கேட்போம். ‘Unity, Yes, Uniformity, No’ என்று ஆணித்தரமாகச் சொல்வோம்.
[3] மூன்று மொழியோ, முப்பது மொழியோ, மக்கள் தாமாகத் தேர்ந்து படித்துக்கொள்ளட்டும். தமிழகக் கல்வி நிறுவனங்களில் தமிழும், ஆங்கிலமும் மட்டுமே என்கிற ஆணித்தரமான நிலைப்பாட்டை எடுப்போம்.
[4] மூன்றாம் வகுப்பு, ஐந்தாம் வகுப்பு, எட்டாம் வகுப்பு என்று எந்தப் பொதுத் தேர்வையும் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
[5] தொழிற்கல்வி என்கிற பெயரில் ‘குலக்கல்வித் திட்டத்தை’ புகுத்த அனுமதிக்கமாட்டோம். பார்ப்பனக் குழந்தைகள் பூசை, புனஸ்காரங்கள் செய்வதற்கானத் “தொழிற்கல்வியும்” கற்பிக்கப்படுமா என்று கேட்போம்.
[6] இவ்வளவு “நேர்த்தியான” கல்வித் திட்டம் அமுல்படுத்தப்பட்டப் பிறகு, கல்லூரிகளில் சேருவதற்கு எதற்கு நுழைவுத் தேர்வு என்று கேள்வி கேட்போம். அப்படியானால், உன்னுடைய முறையில் உனக்கே நம்பிக்கை இல்லையா என்று கேட்போம்.
[7] நூறு அந்நிய நாட்டு பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி வழங்கினால், இங்கேயிருக்கும் கல்லூரிகள் அனைத்தும் படிப்படியாக தன்னாட்சி கொண்ட பல்கலைக்கழகங்களாக மாறினால், கல்வி இன்னும் பெரிய வணிகமாகுமே? அங்கே ஏழை பாழைகள், கிராமப்புற இளைஞர்கள் எப்படிப் படிக்க முடியும்? அங்கெல்லாம் இடஒதுக்கீடு கடைபிடிக்கப்படுமா என்று கேள்வி கேட்போம்.
[8] ‘தரப்படுத்துதல்’ என்கிறப் போர்வையில் எங்களை ‘தரைப்படுத்தும்’ சூழ்ச்சி இது என்று உரக்கச் சொல்வோம்.
[9] ஏற்கனவே ‘பணம், பணம், பணம்’ என்று வியாபாரமாகிவிட்ட கல்வி, ஐந்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முதல் நீட் நுழைவுத்தேர்வு வரைக்கான தனி வகுப்புக்கள், சிறப்பு வகுப்புக்கள் என்று இன்னும் பணமயமாகிவிடுமே என்று எதிர்த்து நிற்போம்.
[10] இறுதியாக, தோழர்களே, மக்களுடைய ஒத்துழைப்பு இல்லாமல் எந்த அரசாலும், எந்தக் கொள்கையையும் அமுல்படுத்த முடியாது என்பதைத் தெளிவாக உணர்வோம்.
[11] தமிழகத்தில் விரைவில் நம்முடைய வாக்குக்களைச் சேகரிக்க வரவிருக்கும் கட்சிகளிடம், வேட்பாளர்களிடம் இந்த கல்விக் கொள்கை பற்றிய அவர்கள் நிலைப்பாடு என்ன என்று கேட்போம். அவர்களிடம் லஞ்சம் வாங்காமல், கொஞ்சம் நம் குழந்தைகளின், பேரக்குழந்தைகளின் நலன்களைப் பற்றியக் கேள்விகள் கேட்போம். நம்மோடு நிற்பார்களா என்று தெரிந்துகொண்டு வாக்களிப்போம்.
பச்சைத் தமிழகம் கட்சி
யூலை 31, 2020