இந்துத்துவா காணொளிப் பதிவர் மாரிதாஸ் போன்றவர்களின் ஆர்எஸ்எஸ் அரசியலால் நியூஸ் 18 சேனலில் இருந்து திராவிட சிந்தனை கொண்ட குணசேகரன், செந்தில் மற்றும் ஹசீப் முகமது ஆகியோர் நீக்கப்பட்டனர் அல்லது விலகும்படி கேட்டுக் கொள்ளப்பட்டனர்.
பின்னர் நியூஸ் 18 நிர்வாகம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வதாக அறிவித்தாலும், மத்திய பாஜகவுக்கு ஆதரவாக நிலைப்பாடு எடுத்த, ரிலையன்ஸ் அம்பானியின் சேனலான நியூஸ் 18ல் தொடர்ந்து இருப்பது அவர்களால் இயலாததாகிப் போனது.
குணசேகரன் சன் டிவி நியூஸ் சேனலில் தலைமைப் பதவியில் பணிக்கு அமர்த்தப்பட்டு, இந்துத்துவாவாதிகள் முகத்தில் கரியைப் பூசியது சன் நியூஸ். சன் நியூஸ் கார்ப்பரேட் நிறுவனமானாலும் கொஞ்சம் இந்துத்துவாவாதிகளை பகைத்துக் கொள்ளாமல் இருக்கும் ‘நடுநிலை’ பாத்திரத்தையே தேர்ந்தெடுக்கும் நிறுவனம். அதில் குணசேகரன் எவ்வளவு தூரம் தனித்து இயங்க அனுமதிக்கப்படுவார் என்பது பெரும் கேள்விக் குறியே.
இது ஒரு புறமிருக்க, செந்தில் வேல் கலைஞர் டிவிக்கு வரும்படி அழைக்கப்பட்டாலும் அவர் அந்த அழைப்பை ஏற்க தயங்கியுள்ளார். மற்றொரு கார்ப்பரேட் ஊடகமாக மாறிவரும் கலைஞர் டிவியில் , தன்னால் நினைத்த அளவு வெளிப்படையாகச் செயல்பட முடியுமா , அல்லது திமுக ஆதரவு என்ற எல்லைக்குள்ளே தான் நிற்கவேண்டி வருமா என்கிற குழப்பமும் அவருக்கு எழுந்திருக்கலாம். அதற்கேற்றார் போல கலைஞர் டிவியில் சுதந்திர தினத்தன்று ஆர்மி என்று தேசபக்தி புல்லரிக்கும் படத்தை போடுகிறார்கள். கலைஞர் வசனம் எழுதிய ஆதிசங்கரரைத் திரையிடுகிறார்கள். திராவிடக் கருத்துக்கள் மருந்துக்குக் கூட கண்ணில் படுவதில்லை.
இந்த நிலையில் செந்தில் வேல், கடந்த 15 ஆம் தேதியன்று “தமிழ்க் கேள்வி” என்கிற புதிய யூட்யூப் சேனலைத் தொடங்கியுள்ளார். அதன் தொடக்கமாக அதில் ஒரு காணொலியைப் பகிர்ந்துள்ளார். அதைக் கீழே இணைப்பில் காணுங்கள்.
அதில் செந்தில்வேல் பேசிய உரையின் எழுத்துருவாக்கத் தொகுப்பு கீழே..
“திருநெல்வேலியில் ஒரு சாதாரண ஏழை குடும்பத்தை சார்ந்தவன்தான் நான். ஒருவேளை உணவிற்கு எனது குடும்பமே கஷ்டப்பட்டது. 12ம் வகுப்பு முடித்த பிறகு படிப்பை நிறுத்திவிட்டு கூலி தொழிலுக்கு சென்றுவிட்டேன். மரம் வெட்டியுள்ளேன், பழ வியாபாரம் செய்துள்ளேன்.
ஒருமுறை 3 மாதங்கள் உழைத்து 2 மாத சம்பளத்தை வீட்டிற்கு கொடுத்துவிட்டு சென்னைக்கு புறப்பட்டு இங்கு வந்தது வரை என் வாழ்க்கை முழுக்க கஷ்டம், துன்பம், கவலை மட்டுமேதான். கடுமையாக போராடி என் படிப்பை தொடர்ந்தேன், ஊடகத்திலும் இணைந்தேன்.
ரூ.8000 சம்பளத்தில் ஆரம்பித்து இன்று பல லட்சங்கள் வரை சம்பாதிக்கிறேன். சத்தியம் டிவியில் பணியாற்றியபோது பொங்கல் பண்டிகை அன்று பிரபலங்களை வைத்து நிகழ்ச்சி நடத்திய சேனல்களுக்கு மத்தியில் திருநங்கைகளை வைத்து நான் நிகழ்ச்சி நடத்தினேன். ஏனென்றால் ஆரம்பம் முதலே நான் குரலற்றவர்களின் குரலாக இருப்பதில் பேரார்வம் கொண்டவன். அதற்கு அடிப்படை காரணம் நான் கடந்து வந்த பாதை.
கூடன்குளம் அணு உலைக்கு எதிராக மக்களோடு கைகோர்த்து குரல் கொடுத்தேன். கதிரா மங்கலத்திற்கு எதிரான சாமானியர்களின் போராட்டத்தில் பங்குபெற்றேன். சென்னை பெருவெள்ளம் வந்தபோது முழுக்க நான் ஊடகத்திலேயே இருந்துதான் மக்களுக்கான குரல்களை நாட்டிற்கு ஒளித்துவந்தேன். அன்றைய தினம் என் மனைவி, பிள்ளைகள் என்ன ஆனார்கள் என்பதுகூட தெரியாது. ஆலப்பாக்கம் பகுதியில் இருந்த எனது மொத்த வீடும் மழைநீரால் நிரம்பியிருந்தது பின்னர்தான் தெரியவந்தது.
பல ஊடக நண்பர்களோடு இணைந்து போராட்டத்தில் மரணித்த மக்களுக்காக.. கடற்கரையில் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்திய நிகழ்வின்போது சுமார் 2,500 பேர் திரண்ட மக்களில் ஒருவனாக நானும் இருந்திருக்கிறேன். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது இரவு பகலாக போதிய தூக்கமின்றி மக்களின் போராட்ட குணத்தை அரசாங்கத்திற்கு உணர்த்த பெரும்பாடுபட்டேன். இன்னும் ஏராளம் ஏராளம்..
இதையெல்லாம் நான் இங்கு பெருமைக்காக பதிவு செய்யவில்லை. இதை இங்கே நான் சொல்லக்காரணம்.. மக்களுக்காக குரல் கொடுத்த என் மீது என்ன தவறு? அதற்காக ஏன் என்னை எதிர்க்கிறீர்கள்?
நான் உள்ளிட்ட எந்த நெறியாளரும் எந்த விவாத மேடைகளிலும் கொச்சையான இழிவான வார்த்தைகளை உபயோகித்ததில்லை. எங்கள் கருத்திற்கு பதிலளியுங்கள் அல்லது எதிர்கருத்து கூறுங்கள். ஆனால் குரல்வளையை நெறிப்பது எந்த விதத்தில் நியாயம்?
நான் போடும் பந்தை துணிவிருந்தால் சிக்ஸ், ஃபோர் என அடியுங்கள், வரவேற்கிறேன். ஆனால் பந்தை அடிக்காமல் பேட்டால் அந்த பவுலரை தாக்குவது இம்மி அளவு கூட நியாயமில்லை. கேட்ட கேள்விக்கு பதில் இல்லாதவர்கள்தான் குரல்வளையை நெரிக்கும் வேலையை பார்ப்பார்கள்.
தற்போது News18 சேனலில் காலத்தின் குரல் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு பழ வியாபாரி சமீபகாலமாக உள்ள பிரச்சினைகளை அறிந்து என்னை கண்டு “எங்களுக்ககாக குரல் தரும் உனக்காக நான் நிப்பேன் சார், நீ எதற்கும் பயப்படாத” என சென்னை தமிழில் எனக்கு ஆறுதல் தருகிறார். நெல்லையில் இருந்து என் கிராம மக்கள் “எலேய் மக்கா! உனக்காக நாங்க இருக்கோம்ல” என ஊக்கப்படுத்துகிறார். இந்த மக்களுக்கு நான் எப்படி துரோகம் செய்வேன்??
இப்போதும் நான் நினைத்தால் என் பணியை தொடர்ந்து லட்சங்களை சம்பாதிப்பேன், கார் வாங்குவேன், இஷ்டப்பட்டதை உண்பேன். ஆனால் எதுவுமே எனக்கு ஒட்டாது. உண்டாலும் செரிக்காது. ஏற்கனவே கூறியபடி குரலற்றவர்களின் குரலாகவே இருக்க விரும்புகிறேன்.
என் பணியை தொடரலாம் என News18 நிறுவனம் கண்ணியமாக மரியாதையுடனே எனக்கு கோரிக்கை வைத்தார்கள். ஆனால் மக்களுக்கான குரல் அங்கு இல்லாத காரணத்தால் நான் அங்கு பணியாற்ற விரும்பவில்லை. எனவே அதிலிருந்து ராஜினாமா செய்துவிட்டேன்.
கட்சி சார்ந்த ஊடகத்திலும் பணியாற்ற விரும்பவில்லை. ஏனெனில், அனைத்து தரப்பினரின் தவறை அங்கு சுட்டிக்காட்ட முடியாது. கலைஞர் டிவி, ஜெயா டிவி போன்ற ஊடகத்திடம் இருந்து ஆரம்பத்திலேயே அழைப்பு வந்தும் அதை நிராகரித்துவிட்டேன்.
எனது பணி போவதை குறித்து எனக்கு எந்த கவலையும் இல்லை. நான் இழப்பதற்கும் ஒன்றும் இல்லை. ஊடகமே என்னை ஒதுக்கினாலும்கூட ATM வாசலில் வாட்ச்மேன் வேலைபார்த்து மீதமுள்ள நேரத்தில் மக்களுக்கான ஆதரவு குரல் தருவேன்.
இருப்பினும் இப்போதைய சூழ்நிலையில் யாருக்கும் பணிந்துபோகாமல் உண்மையை உரக்கச்சொல்ல ஒரு வழி இருக்கிறது என்றால் அது ‘யூடியூப் சேனல்’ மட்டும்தான். அதில் எனது பணியை தொடரலாம் என முடிவெடுத்து “தமிழ் கேள்வி” எனும் சேனல் உருவாக்கியுள்ளேன். இதற்கு மக்களான உங்கள் ஆதரவு எனக்கு வேண்டும். அதேசமயம் இதில் நான் பிழைசெய்தால் என் தலையில் நீங்கள் கொட்டவேண்டும்.
இதில் அரசியல், அதிகார வர்க்கம் மூலம் என்னை யாராலும் மிரட்டவோ, அடிபணியவோ செய்ய முடியாது. அதற்கு அச்சப்படும் ஆளும் நானல்ல. என்மீது அக்கறை கொண்டு என்னை விசாரித்த அனைத்து மக்களுக்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்.”
நெறியாளர் செந்தில்வேல்.