நம் பாரதப் பிரதமர், 15 நாட்களுக்கு முன்பு, லடாக்கில் போய் ராணுவ வீரர்கள் முன்பு திருக்குறளை வாசித்து அதன் பெருமையை விளக்கிக் கொண்டிருந்த அதே வேளையில், சிபிஎஸ்சி பாடத்திட்டத்தில் இருந்து திருக்குறளை தூக்கினார்கள் மத்திய அரசு கல்வித் துறையினர்.
இது மாதிரி ஒரு புறம் பெருமையாகப் பேசிக் கொண்டே இன்னொரு பக்கம் அழிக்க ஏற்பாடு செய்வதன் பெயர் ‘அணைத்துக் கொல்லுதல்’ என்கிற போர்முறையாம். மஹாபாரதத்திலும், சாணக்கியனின் அர்த்த சாஸ்திரத்திலும் சொல்லப்பட்டிருக்கும் ‘சிரித்துப் பேசி கழுத்தறுக்கும்’ டெக்னிக் இது. அது தமிழுக்கு நடந்து வருகிறது சமீபகாலமாக.
மும்மொழிக் கல்வித் திட்டத்திற்கு தமிழகத்தில் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், அண்மையில் சென்னை விமான நிலையத்தில், திமுக எம்.பி. கனிமொழி இந்தி தெரியாது என்று சொன்னதால், நீங்கள் இந்தியர்தானே சி.ஐ,எஸ்.எப். பெண் அதிகாரி கேட்டார். “இந்தி பேசினால் தான் இந்தியரா?” என்ற கேள்வி அனைவருக்கும் எழுந்தது.
அதை உறுதி செய்வது போல மேலும் மேலும் நிகழ்வுகள் நடந்தவண்ணம் இருக்கின்றன. சென்ற வாரம் சித்த, ஆயுர்வேத, ஹோமியோ மருத்துவங்களின் மத்திய அரசு கூட்டமைப்பான ஆயுஷ் நடத்திய காணொலிக் கருத்தரங்கில் தொடர்ந்து ஹிந்தியிலேயே அதன் தலைவர் பேசிக் கொண்டேயிருந்தார். தென் மாநிலங்களிலிருந்து கலந்து கொண்ட மருத்துவர்கள், தங்களுக்கு ஹிந்தி புரியவில்லை என்றும், ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து சொல்லுங்கள் என்று கேட்டபோது அதை மறுத்த அவர், ஹிந்தி தெரியாவிட்டால் கான்பரன்சை விட்டு வெளியே போய்விடுங்கள் என்று திமிராகப் பதிலளித்துள்ளார்.
நேற்று முன் தினம், மத்திய அரசு இந்தியாவில் உள்ள திரைப்படத்துறை சங்கங்கள் அனைத்தையும் காணொலிக் காட்சியின் மூலம் கூட்டி, திரையரங்குகள் திறப்பது, ஷூட்டிங்குகள் நடத்துவது , படங்களை வெளியிடுவது போன்றவை சம்பந்தமான நெறிமுறைகளைப் பற்றி விவாதித்தது. அந்த கூட்டத்திற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த எந்த அமைப்பும் வேண்டுமென்றே அழைக்கப்படவில்லை.
குஜராத் மாநிலத்தில் குஜராத்தி மொழியில் வருடத்திற்கு பத்து படங்கள் வெளியாவதே அரிதாகிவிட்டது. ஹிந்தி மொழிப் படங்கள் குஜராத்தி மொழிப் படங்களை விழுங்கிக் காலி செய்துவிட்ட காலம் இது. அந்த மாநிலத்திலிருந்து இரு அமைப்புக்களை அழைத்துள்ள மத்திய அரசு, வருடத்திற்கு 800 படங்கள் வெளியாகும் தமிழ்த் திரைப்பட உலகிலிருந்து ஒருவரையும் அழைக்கவேயில்லை.
இந்த விஷயங்களையொட்டி , இயக்குநர் வெற்றிமாறன் ஹிந்தி ஆதிக்கத் திமிரால் தான் பலவருடங்கள் முன்பு அவமானப்படுத்தப்பட்டதை பதிவு செய்தார். கடந்த 2011ம் ஆண்டில் கனடா திரைப்பட விழாவில் பங்கேற்றுவிட்டு இந்தியா திரும்பி்யபோது, டெல்லி விமான நிலையத்தில், இமிகிரேஷன் பிரிவில் இருந்தவர், வெற்றிமாறனிடம் இந்தியில் பேச, இவர் தனக்கு இந்தி தெரியாது என்று சொல்ல, வேண்டுமென்றே அவரை தீவிரவாதி என்று சொல்லி, 45 நிமிசம் அதே இடத்தில் நிற்க வைத்து அவமானப்பத்தியிருக்கிறார்கள். அந்த சம்பவம் பற்றஇ தற்போது தெரியவந்ததும், தமிழர்கள் மேலும் கொதிக்க ஆரம்பித்துள்ளனர்.
இவ்வாறு தமிழக மக்களை பல்வேறு விதமான வழிகளில், நீங்கள் அன்னியர்கள் தான் என்று, வேண்டுமென்றே ஹிந்தியின் பெயரால் ஒதுக்கித் தள்ளி வெறுப்பை வளர்க்க ஆரம்பித்துள்ளது மத்திய அரசு. இந்நிலையில் இதற்கு எதிர்வினையாக திரையுலகில் முதல் எதிர்ப்பை பதிவு செய்துள்ளார் யுவன் ஷங்கர் ராஜா.
நேற்று ட்விட்டரில் தானும் நடிகர் மெட்ரோ சிரிஷ்ஷூம் ஹிந்தி எதிர்ப்பு வாசகங்கள் அடங்கிய டி-ஷர்ட்டுகள் அணிந்து நின்றிருந்த புகைப்படத்தை பகிர்ந்திருந்தார் யுவன்.
யுவன் அணிந்திருக்கும் டிஷர்ட்டில், “i am a தமிழ் பேசும் Indian” என்றும், நடிகர் மெட்ரோ சிரிஷ் அணிந்திருக்கும் டிஷர்ட்டில் “Hindi Theriyathu Poda!!!(ஹிந்தி தெரியாது போடா) என்றும் எழுதப் பட்டிருக்கிறது.
இந்தி திணிப்புக்கு எதிராக துணிவான கருத்தை சொல்லும் இந்த வாசகங்கள் இணையத்திலும், வாட்ஸப்பிலும் ட்ரெண்டாகி வருகின்றன.
யுவன் சங்கராஜவின் இந்த டிவிட்டை திமுக எம்பி கனிமொழி Interesting எனக் குறிப்பிட்டு, தம்ஸ் அப் குறியுடன் ரீடிவீட் செய்துள்ளார்.
இதே போல், நடிகர் சாந்தனுவும் தனது மனைவி கீர்த்தியுடன் ஹிந்தி ஆதிக்கத்தை கண்டிக்கும் டீ –சர்ட் அணிந்தபடி புகைப்படம் வெளியிட்டு ஷேர் செய்துள்ளார். இதில் கீர்த்தி, ‘ இந்தி தெரியாது போடா’ என்று அச்சிடப்பட்ட டீ –சர்ட் அணிந்து போட்டோவை வெளியிட்டுள்ளார்.
தமிழர்களை ஹிந்தியின் பெயரால் கேவலமாக இழிவுபடுத்தும் செயல்களை மத்திய அரசும் , அதன் அமைப்புக்களும் கைவிட வேண்டும்.
இல்லாவிட்டால் எரியும் கொள்ளிக் கட்டையை எடுத்து தலையை சொறிந்து கொண்ட கதை தான் ஹிந்திக்கும், அதை வலுக்கட்டாயமாக திணிப்பவர்களுக்கும் ஏற்படும்.
#TamilSpeakingIndian
#HindiTheriyathuPoda