தமிழ்நாட்டில் ஏழை மக்களும் தங்கள் சந்ததியினரை நன்கு படிக்க வைத்தால் பொறியாளர் ஆக்கிவிடலாம் என்கிற நிலையை ஏற்படுத்தியதில் முதன்மையான பங்கு அண்ணா பல்கலைக் கழகத்தைச் சாரும். இந்தப் பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழ்நாடெங்கும் உள்ள சுமார் 600 பொறியியல் கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளன. பொறியியல் மற்றும் மேல் படிப்புக்களை சாமான்யரும் அடையும் வண்ணம் அதே நேரம் தரத்திலும் சிறந்து விளங்கிய அண்ணா பல்கலைக்கழகம் தற்போது இரண்டாகப் பிரிக்கப்பட இருக்கிறது. ஏன் ?
மத்திய அரசு செய்யும் வேலை இது. அண்ணா பல்கலைக் கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து தருகிறோம் என்று மத்திய அரசு சொல்லியதும் அதன் அடிபொடி மாநில அரசு, பல்கலைக் கழக துணைவேந்தர் சூரப்பா போன்றோர் மத்திய அரசுக்கு தலையாட்டி விட்டனர்.
சிறப்பு அந்தஸ்து தந்தால் அதற்கு நிறைய பணம் , 5 வருடங்களில் 1500 கோடி ரூபாய்கள் செலவிடப்படவேண்டும். சிறப்பு அந்தஸ்து உள்ள பல்கலைக்கழகத்துடன் மற்ற 600 கல்லூரிகளும் இணைக்கப்பட முடியாது. எனவே இந்தக் கல்லூரிகளை இணைக்க ஒரு பிரிவாகவும், சிறப்பு அந்தஸ்து வழங்க இன்னொரு பிரிவாகவும் அண்ணா பல்கலைக் கழகம் பிரிக்கப்பட இருக்கிறது.
சிறப்பு அந்தஸ்து உள்ள அண்ணா பல்கலைக் கழகத்தில் அதிக கட்டணம் வசூலிக்கப்படும். பணக்காரர்கள் மட்டுமே படிக்க முடியும். தொழில்நுட்ப வசதிகள், வெளிநாட்டு பல்கலைக் கழகங்களுடன் தொடர்பு போன்ற விஷயங்கள் இருக்கும். இதுதான் தரமா ?என்றால் பதிலில்லை. விஷயம் என்னவென்றால் தரம் என்கிற பெயரில் பணக்காரர்கள் படிக்கும் இடமாக மாற்ற இப்போது இருக்கும் அண்ணா பல்கலைக்கழகத்தின் அனைத்து வசதிகளையும், இடங்களையும் இரண்டாகப் பிரிப்பார்கள். அப்போது பணக்காரப் பல்கலைக் கழகத்துக்குத்தான் பெரும்பாலான வசதிகளும், இடங்களும் பிரிக்கப்படும் என்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இதனால் நம் மாநிலத்தில் எளியவர்கள் படித்துப் பொறியாளர் பட்டம் பெறுவது என்பது இரண்டாம் தர வரிசைக்கு கொண்டுவரப்படும். தரமற்றதாக ஆக்கப்படும். படிப்படியாக இதுவும் ஒழிக்கப்படும்.
இந்த விஷயங்கள் பற்றி விளக்குகிறார் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.