2002 -03 யில் நாசர் சாரின் ‘பாப்கார்ன்’ படத்தில் உதவி இயக்குநராக பணிபுரிந்த போது படத்தின் இசை அமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் திரு எஸ் பி பி சாரை பாட அழைத்தார்கள்.

சாலிகிராமத்தில் காவேரி தெருவில் அமைந்துள்ள கலசா ரிக்கார்டிங் தியேட்டரில் பாடல் பதிவு நடை பெற்றது. என் இயக்குநர் நாசர் சார் பட வேலைகள் அனைத்திலும் என்னை ஈடுபடுத்தி கற்றுக்கொள்ள வாய்ப்பளிப்பார் , அன்றும் உதவியாளர்களில் நான் மட்டும் பாடல் பதிவுக்குச் சென்றேன். இஞ்ஜினியர் அறையில் அந்த பாடலின் இறுதி வடிவத்தை நாசர் சாருக்கு யுவன் போட்டு காட்டிக் கொண்டிருந்தார்.

சரியாக சொன்ன நேரத்திற்கு எஸ் பி பி சார் வந்தார் உண்மையில் நான் அன்று பெரிதாக அவரை பார்த்துவியக்கவில்லை. காரணம் சினிமாவிற்கு வந்த பின்பு எங்கோ சிறிய ஊரிலிருந்து சினிமா கனவில் வந்த சாமானியனான எனக்கு கோடம்பாக்கம் சினிமாவுக்குள் நுழைந்த பின்பு திரை பிரபலங்களை பார்ப்பது என்பது தினமும் நடக்கும் …. ஒவ்வொருவரையும் பார்த்து வியந்து புகைப்படம் எடுத்து கொண்டிருந்தால் இறுதியில் நட்சத்திர ஆல்பம் மட்டும் தான் கையில் இருக்கும் இயக்குநராக முடியாது என்பதில் தெளிவாக இருந்தேன், இன்றுவரை எவ்வளவு பெரிய திரை பிரபலங்களை சந்தித்து பேச வாய்ப்பிருந்தாலும் புகைப்படம் எடுத்துக் கொள்வதில்லை அவர்களின் அனுபவங்களையும் பண்புகளை மட்டுமே மனதில் பதிந்து வைத்துக்கொள்வேன்.

அன்று.. அந்த ரிக்கார்டிங் தியேட்டரிலிருந்த பத்து பேரில் நான் ஒரு மூலையில் நின்று கொண்டு இசைப் பணியை அவதானித்த படியும் நாசர் சாரின் உத்தரவுக்கு உதவியாளனாகவும் மட்டுமே என் கவனத்தை ஈடுபடுத்திக்கொண்டிருந்தேன் , யுவனுக்கு உதவியாக டூயூன் சொல்லிக் கொடுக்க செளந்தரராஜன் என்பவர் ( இவர் இளையராஜா ஐயாவிடம் பல வருடங்களாக பல புகழ் பெற்ற பாடல்களை பாடகர்களுக்கு கற்றுக் கொடுத்தவர் பின்பு திருவண்ணாமையில் சன்நியாசியாக போனதாகவும் பின்பு காலமாகிவிட்டார் எனக் கேள்வி பட்டேன் இவருக்கு டூயுன் சொல்லி கொடுப்பது தான் தொழில்)பாடலின் டுயூனை பாலு சாருக்கு சொல்லித் தர, பாடலின் வடிவத்தை சில மணித்துளிகளிலேயே உள் வாங்கிக் கொண்டு …’யுவன் நல்ல பண்ணிருக்க…’ என பாராட்ட யுவன் ‘ தேங்ஸ் அங்கிள்..’ என்று கூற… ட்ராக் பாடிய வளரும் பாடகர் ஹரிஸ் ராகவேந்தரைப் பார்த்து கிண்டலாக ‘முயற்ச்சி செய்கிறேன்…’ எனக் கூற அவர் ‘சார்ர்… ‘ என காலில் விழப்போக அவரை செல்லமாக தலையை தடவி ஆசிர்வாதம் செய்து பாராட்டிவிட்டு.. நாசாருக்கு வாழ்த்துகள் கூறி … வாய்ஸ் ரிக்கார்டிங் அறைக்குச் சென்றார் பாலு சார்.
 
உள்ளே சென்றதும் மைக்கை ஆன் செய்து ‘லிரிக் பேப்பர் ப்ளிஸ்..’ என்றார் .. நாசர் சார் ‘அனீஸ் பிரிண்ட் எங்க… ‘ எனக்கேட்க… நான் தயாராக வைத்திருந்தேன் ‘உள்ளே போ…’ என்றார் சொன்னதும் உள்ளே ஓடினேன். சற்று மங்கலான வெளிச்சமும்… வாசனை நிரம்பிய மிதமான குளிர்ச்சியும் கொண்ட அந்த அறையில் கிட்டத்தட்ட 18 வருடங்களுக்கு முன்பு நல்ல குண்டான தோற்றத்தில் இருந்த எஸ் பி பி சாரை மிகவும் அருகில் பார்க்கும் போது யானையும் காண்டா மிருகமும் இணைந்த உருவம் போல காட்சி அளித்தார் அவ்வளவு குண்டு ..
 
நான் தயங்கி பேப்பரை நீட்ட அவர் ‘நீங்க …’ என்றார்‘ நான் அசிஸ்டென் டைரக்டர் சார்… என்றதும் அவர் ‘பேப்பர் வேண்டாம் … எழுதிக்கிறேன்… கொஞ்சம் சொல்றிங்களா..? என்றார். நான் நின்றபடியே வரிகளைச் சொல்லப் போக… உடனே அவர் ‘ …உக்கார்ந்து சொல்லுங்க… ‘ என்றார். அமர்ந்தேன். ஒரு பெரிய டைரியை எடுத்து அதன் பக்கங்களை திருப்பினார். அதில் பல பாடல் வரிகளை காண முடிந்தது..
 
ஒரு பக்கத்தை எடுத்து ‘ படப்பெயர் சொல்லுங்க… என்றார். நான் ‘ பாப் கார்ன்’ என்றதும் ‘அப்படின்னா…’ என்றார். விளக்கினேன்..
அவர் ‘ மியூஸிக் படமா… வெரி குட்’ என்று கூறி விட்டு தேதி, படப் பெயர் இயக்குநர் பெயர் இசை அமைப்பாளர் பெயர், பாடலாசிரியர் பெயர் என எழுதிவிட்டு என்னைப் பார்க்க… நான் பாடல் வரிகளை சொல்ல ஆரம்பிக்க… அவர் ‘இருங்க சார்… கதை என்னன்னு ஜஸ்ட் ரெண்டு லைன்ல சொல்றீங்களா… ‘ என்றார் நான் கொஞ்சம் தயங்க அவர் ‘கதை தெரியுமில்ல..’ என்றார்.
நான் தலையாட்டியபடி கதையை சொன்னேன்… ஞாபகம் வந்தவராக ஏதோ ஒரு ஹிந்தி படத்தைச் சொல்லி அதே போல இருக்கு அதில் குஷ்பு கூட குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார் என்று கூறி ஆனால் உங்கள் கதை வேற என்று அழகாக சமாளித்து விட்டு… தொடர்ந்து இந்த பாடல் யார்பாடுவது எந்த சூழலில் பாடுவது …கதாபாத்திரத்தின் மனநிலை என்ன என… வார்த்தைக்கு வார்த்தை ’சார்..’ போட்டே கேட்டார்… அதுவும் அவ்வளவு தெளிவாக …என்னையும் சுருக்கமாகவும் கூறவைத்தார்… பொதுவாக ரிக்கார்டிங்கிற்கு இது போன்ற பணியை பாடல் ஆசிரியர்களே செய்வது வழக்கம் எங்கள் படத்திற்கு வாலி ஐயா பாடல் எழுதினார் அவர் பிஸ்ஸியாக இருந்ததினாலும் வேற ஏதோ ஒரு காரணத்தினாலோ வர இயலவில்லை.
நாங்கள் இருவரும் பேசிக் கொண்டிருப்பதை வெளிப்புறமிருந்து நாசர் சாரும் யுவனும் கவனித்து கொண்டிருந்ததை என்னால் உணர முடிந்தது. பாடல் பற்றிய தெளிவு பெற்றவுடன் என்னை பாடல் வரிகள் சொல்லச் சொல்லி கிடுகிடுவென எழுதி முடித்துவிட்டு மீண்டும் ‘தேங்ஸ் சார்..’ என சொல்லியவர் மைக்கை நோக்கிச் செல்ல நான் அறையை விட்டு வெளியேறினேன். மீண்டும் இஞ்சினியர் அறைக்கு வந்து அதே மூலையில் நின்று கொள்ள…
 
பாலு சார் வரிகளை பாடலாக மற்றினார்… அந்தத் தேன் குரல், ஒலிக் கோடுகளாக பதிவாகி கொண்டிருந்தது. என் மனப்பதிவில் எஸ் பி பி சார் ஒரு குறுகிய நேரத்தில் வளர துடிக்கும் இயக்குநரான எனக்கு மறக்க முடியாத பாடத்தையும் எடுத்து முடித்திருந்தார்…
 
அந்த பாடம்.. ஒரு பணிவு… வயது வித்தியாசமின்றி பொறுப்பிற்கு மரியாதை.. தொழில் பக்தி அதில் ஒரு நேர்த்தி… பல ஆயிரம் பாடல்கள் பாடியிருந்தாலும் அன்றைக்கு பாடப் போகும் பாடல் மீது அக்கறையும்,  சிரத்தையான உழைப்பும் என பல பாடங்களை கற்றுக் கொடுத்திருந்தார்…
உருவத்தில் ஒரு யானையும் காண்டாமிருகமும் போன்று  காட்சிஅளித்தவரின் முகம் வெகுளியான இளம் மான் போன்றும் ….குரலில் ஆண் குயிலாகவும்…உள்ளத்தில் தேவ குழந்தையாகவும்.. என் மனதில் அழிக்க முடியாத பிம்பமாக பதிந்துவிட்ட அவரின் இறுதி நிமிடம் தாமரைபாக்கம் தோட்டத்தின் புதைகுழியில்.. மண்ணைக் கொட்ட அதே புன்னகை மாறாத இளம் மான் போன்ற முகம் மண்ணால் புதைந்து விடை பெற்றது.
உண்மையில் மிகத் துயரமான பாடலின் இறுதி வரிகளாக முற்று பெற்றது.
மறவேன் எஸ் பி பி சார் உங்களின் பாடத்தை …
 
— முகநூலில் அனீஸ் அப்பாஸ். (திருமணம் என்னும் நிக்காஹ் பட இயக்குனர்)
https://www.facebook.com/anis.abbas.16/posts/3294249220610618

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.