அமித் ஷாவின் `சாவர்க்கர் பாசம்’ அகிலம் அறிந்த ஒன்று. அவரது வீட்டில் நிரந்தரமாகவே ஒரு சாவர்க்கர் வரைபடம் உண்டு. எப்போதும், அதன் முன்னால் அமர்ந்தபடிதான், போட்டோவுக்கு போஸே கொடுப்பார் மனிதர்.
ஆக, விஷயம் தெளிவாகிறது. சாவர்க்கரை அதிகாரபூர்வமாக அங்கீகரிப்பதற்கான வேலைகள், வேகமெடுத்துவிட்டன.
ஏற்கெனவே, `ரூபாய் நோட்டில் சாவர்க்கர் படத்தைப் பொறிக்க வேண்டும்’ என்ற கோரிக்கை வேறு நிறைய ஆண்டுகளாக நிலுவையில் இருக்கிறது.
அதுவும் இனி மேலெழுந்து வரக்கூடும். இதன் ஆபத்தை நாம் எந்தளவுக்கு உணர்ந்திருக்கிறோம் என்று தெரியவில்லை. ஏனென்றால், சாவர்க்கருக்கு அளிக்கப்படும் அங்கீகாரம் என்பது, வெறுமனே அவருக்கான அங்கீகாரம் மட்டுமல்ல. அது, அவரது கோட்பாட்டுக்கு அளிக்கப்படும் அங்கீகாரமும்கூட.
இந்த நேரத்தில், சாவர்க்கர் யார், அவரது அரசியல் எப்படிப்பட்டது, அவர் பாடுபட்டது யாருக்காக என்பதையெல்லாம், விரிவாகப் பேச வேண்டியது அதிஅவசியமாகிறது.
இல்லையென்றால், நாளைக்கு ரூபாய் நோட்டில் காந்திக்குப் பதில் சாவர்க்கர் சிரிப்பதை, வரும் தலைமுறைப் பிள்ளைகள் பார்க்க நேரிடும். அமித் ஷா வேறு `வரலாற்றை மாற்றி எழுதுவோம்’ என்று பீதி கிளப்பிக் கொண்டிருக்கிறார். ஆகவே,
இப்போது பேசுவதுதான் சரி!.
சாவர்க்கர் ஒரு சிந்தனைவாதி என்பதில் எவரும் சந்தேகம் கொள்ள வேண்டியதில்லை. அவர் சிந்தனைவாதிதான்! ஆனால்,
அவரது சிந்தனைகள் எதை நோக்கி இருந்தன என்பதுதான் முக்கியமானது. அதையே அதிகம் கவனத்தில் எடுத்து விவாதிக்க வேண்டும். அவரது சிந்தனை என்ன. இந்து ராஷ்டிரம்தான்! அந்த இந்து ராஷ்டிரம் எப்படியிருக்கும் அவரே அதை விவரிக்கிறார்… `எவரெல்லாம் இந்து மதத்தைச் சார்ந்தவர்கள் இல்லையோ, அவர்களெல்லாம் இந்தியர்களும் அல்ல’.
ஒரு தேசியத்துக்கு கொடுக்கப்படும் `Motherland, Fatherland’ என்ற கருத்துரு வாக்கங்களைத் தாண்டி, `Holy land’ என்ற கருத்துரு வாக்கத்தை கொண்டுவந்து வைக்கிறார் சாவர்க்கர். அவரது அந்தத் தத்துவத்தின்படி, இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் இந்தியர்கள் அல்லர். ஏனென்றால், அவர்களின் புண்ணியபூமி அரேபியாவிலும் பாலஸ்தீனத்திலும் இருக்கிறது என்பது அவரது வாதம்.
இதைத்தான் 1905 தொடங்கி 1966 வரை வெவ்வேறு வார்த்தைகளில் பேசிக்கொண்டிருந்தார் அவர். அதாவது, அவர் மரணத்தைத் தழுவும் வரை அதிலிருந்து மாறவே இல்லை. கடைசிக்காலங்களில், `இஸ்லாமிய ஆட்சியாளர்கள் இந்து பெண்களைச் சூறையாடியதைப் போலவே, இந்துக்கள் இஸ்லாமியப் பெண்களைச் சூறையாட வேண்டும்’ என்று சொல்லும் அளவுக்குக்கூட அவர் இறங்கியிருக்கிறார்.
மத அடிப்படைவாதத்தில் அவரது மனம் எந்த அளவுக்கு கெட்டித்தட்டிப் போயிருந்ததது என்பதற்கான உதாரணம், அந்த வார்த்தைகள்.
காந்தி ‘Power to people’ என்று சொன்னார் என்றால், சாவர்க்கர் அதிலிருந்து அப்படியே வேறுபட்டு ‘Power over people’ என்று சொன்னார். அதாவது, மக்களின் மீது அரசு மேலாதிக்கம் செலுத்துவதை அப்பட்டமாக ஆதரித்தவர் சாவர்க்கர்.
போதாக்குறைக்கு, இந்தியாவை இந்துக்கள் ஆதிக்கம் செலுத்தும் ஒரு ராணுவ தேசமாக உருவகித்தார் சாவர்க்கர். அதனால்தான் அவருக்கு ஜெர்மனி பிடித்தது.
பின்னாளில், இஸ்ரேலும் அவரது மனதைக் கவர்ந்ததற்குக் காரணம் அதுவே. இந்தியாவை காலனியாதிக்கத்தின் கண்கள் கொண்டு பார்த்தவர் சாவர்க்கர்’ என்று சில ஆய்வாளர்கள் சொல்வது, அதனாலேயே!
இந்துயிஸசமும் இந்துத்துவமும்
இந்துத்துவத்தை கண்டுபிடித்தவர் சாவர்க்கர்தான்!
விவேகானந்தரும் அரவிந்தரும் திலகரும் `இந்துயிஸம் (Hinduism)’ என்று பேசியதை, `இந்துத்துவம் (Hindutva)’ என்ற இடத்துக்கு நகர்த்தியவர் சாவர்க்கர்.
இந்துயிஸத்தை, இந்துமதத்தைப் பின்பற்றுவது, அதைப் பற்றி பேசுவது, அதன் தத்துவங்களை பரப்புவது என்று வரையறுக்கலாம்.
ஆனால், இந்துத்துவம் அப்படியல்ல. அது, இந்துக்களை ஒருங்கிணைப்பது, ஒருங்கிணைத்து ஓர் இந்து சமுதாயத்தைக் கட்டமைப்பது! அதாவது, இந்துயிஸம் இந்துக்களை ஒரு மதமாகப் பார்த்தால், இந்துத்துவா ஓர் இனமாகப் பார்க்கும். அந்த இனத்தின் ஆதிக்கத்துக்குள் அது தேசத்தைக் கொண்டு வரும். அந்தத் தேசத்தில், சிறுபான்மை இனத்தவர்கள் இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்படுவார்கள். அவர்களுக்கென்று எந்த உரிமையும் இருக்காது.
இதை நோக்கியே, அந்த ‘Holy land’ என்ற பதத்தை வெகு சாதுரியமாகப் பயன்படுத்தினார் சாவர்க்கர்.
இந்தியாவை முழுவதுமாக `இந்துமயமாக்குவதே’ சாவர்க்கரின் நோக்கம். அதற்காக, படை உருவாக்குவது, அந்தப் படையை மக்கள் மேல் செலுத்தி அவர்களை ஆளும் அதிகாரத்தை அடைவது, அந்த அதிகாரத்தின் வழியே, நாடு முழுவதும் ஒற்றைத்தன்மையைக் கொண்டுவருவது என்று, தெளிவாக வரைபடம் வரைகிறார் சாவர்க்கர்.
`Hinduise all politics, Militarize Hinduism’ என்ற பதத்தை அவர் அடிக்கடி பயன்படுத்துகிறார். இந்த ஒருங்கிணைத்தலை செய்ய அவருக்கு ஒரு எதிர்த்தரப்பு தேவைப்பட்டது. அதனால்தான், இந்து அல்லாதவர்களை, அதாவது இஸ்லாமியர்களை, கிறிஸ்துவர்களை ‘Others’ என்று அழைத்து,
`Self’ எனப்படும் இந்துக்களின் எதிரிகளாகக் கட்டமைக்கிறார் அவர். ஜைனர்கள், சீக்கியர்கள், பௌத்தர்களைக்கூட அவர் ஓரமாகவே நிறுத்துகிறார். அதுவும், அன்பையும் சமத்துவத்தையும் போதித்த பௌத்தத்தை, இஸ்லாம் கிறிஸ்துவத்துக்கு இணையாக வெறுக்கிறார்.
அவருடைய, ‘Hindutva : Who is a Hindu’ புத்தகம், ஏறக்குறைய ஹிட்லரின் ‘Mein kampf’ புத்தகத்துக்கு இணையானது!
சாவர்க்கரின் இந்து ராஜ்ஜியத்தின் இன்னொரு ஆபத்து, அது இந்து சமுதாயத்தையே பிளவுபடுத்திப் பார்க்கிறது என்பது. இதற்கு, சாவர்க்கர் அவ்வளவு பெரிய சனாதனவாதியும் அல்ல. கடவுள் நம்பிக்கையும்கூட அவருக்கு குறைவுதான்.
Agnostic வகையைச் சேர்ந்தவர். அவரின் மனைவியும் மகனும் இறந்தபோதுகூட, அவர் மதச்சடங்குகள் ஏதும் செய்யவில்லை. ஆனால், சாவர்க்கர் கோயில்கள் கட்ட குரல் கொடுத்திருக்கிறார். 1939-ல் டெல்லியில் சிவன் கோயில் ஒன்று இடிக்கப்பட்டபோது, அதை எதிர்த்தவர்களுள் சாவர்க்கர் முக்கியமானவர்.
அதில் கிடைத்த வெற்றியைப் பெருமளவில் கொண்டாடியவர் சாவர்க்கர். `இது போன்ற நடவடிக்கைகளே இந்து மக்களை ஒருங்கிணைக்கும்’ என்று அருகிலிருப்பவர்களிடம் சொல்லி மகிழ்கிறார்.
கடவுளையே வணங்காதவர், கோயில் கட்டுமானங்களை ஏன் ஆதரித்தார் என்பதை முக்கியமாகப் பார்க்க வேண்டும். காரணம் அதுவேதான். அது, அவருக்கு ஓர் அரசியல் ஆயுதம்!
இந்துத்துவத்தின் தந்திரமே அதுதான். அதற்கு, மதம் என்பது மக்களை அடக்கியாளும் ஓர் அரசியல் கருவி மட்டுமே. அதைக் கடந்து யோசிப்பதற்கு இந்துத்துவத்தில் எந்த இடத்தையும் ஏற்படுத்தி வைக்கவில்லை சாவர்க்கர்.
சாவர்க்கரின் இந்து சமுதாயமும் எப்படிப்பட்டது தெரியுமா? உயர்சாதி இந்துக்கள் ஆதிக்கம் செலுத்துவதாகவே அது இருக்கும். ஏனென்றால், இந்து சமுதாயத்தின் அடித்தளமாக `வர்ணப் பாகுபாடு’ இருக்க வேண்டும் என்று தெளிவாகச் சொல் கிறார் சாவர்க்கர்.
அந்த இந்து சமுதாயத்தின் முக்கிய மொழிகளும்கூட இந்தியும் சம்ஸ்கிருதமும்தான். கடவுளர்களும்கூட கிருஷ்ணனும் ராமனுமே. `பழங்குடி மக்கள் தங்களின் குலதெய்வத்தை துறந்துவிட்டு, ராமவழிபாட்டுக்கு மாற வேண்டும்’ என்பதை மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார்
சாவர்க்கர். `வறண்டு கிடந்த இந்து மதத்தை, சாதிதான் செழிப்பாக்கியது’ என்று சொல்லுபவராகவும் இருந்தார் அவர்.
அவரது தீண்டாமை ஒழிப்பு முழக்கங்கள் எல்லாமே, வெறும் பாவ்லா மட்டுமே. ஆங்கிலத்தில் `Escapism’ என்று அதைச் சொல்வார்கள். வெற்று, தப்பித்தல்வாதம்! இது போதாதென்று, கறுப்பு நிறத்தவர்களை இந்துக்களாக ஏற்றுக்கொள்வதிலும் அவருக்கு தயக்கம் இருந்தது.
இந்து பெண்களைப் பற்றியும் எங்கும் பெரிதாகப் பேசுவதில்லை சாவர்க்கர். `அவர்களின் கடமை அடுப்பங்கறை, குழந்தைகளைப் பார்த்துக்கொள்ளுதல் மட்டுமே’ என்பது சாவர்க்கர் கொண்டிருந்த எண்ணம்.
இத்தகையவரைத்தான், தனது அணிகலனாக இந்தியத் தாய் சூட வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள்.
இவற்றையெல்லாம் விலக்கிவிட்டுப் பார்த்தாலும், அவரை அங்கீகரிப்பதற்கு மூன்று இடையூறுகள் இருக்கின்றன.
முதலாவது, அடிமைப்படுத்திய ஆங்கிலேயனிடமே `நான் உங்கள் சேவகன்’ என்று அவர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார்.
இரண்டாவது, `இங்கே இரண்டு தேசங்கள் இருக்கின்றன’ என்று ஜின்னாவுக்கு பாயின்ட் எடுத்துக்கொடுத்ததும்கூட அவரேதான்.
மூன்றாவதுதான் மிக முக்கியமானது. அதாவது, தேசப்பிதா காந்தி கொலைக்குத் தூண்டுதலாக இருந்ததாக அவர் மீது குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
1911-ம் ஆண்டு ஜூன் மாதம், அந்தமான் செல்லுலார் சிறையை வந்தடைகிறார் சாவர்க்கர். நாசிக் மாவட்ட நீதிபதி ஜாக்சன் கொலைக்கு, அவர் தூண்டுதலாக இருந்தார் என்பது வழக்கு. அப்போது, `ஆபத்தான கைதி’ என்று அவருக்கு அடையாளம் இடப்பட்டது உண்மைதான். `D’ என்பது அந்த கோட்வேர்ட். ஆனால், சாவர்க்கர் ஒன்றும் அவ்வளவு ஆபத்தானவராக ஆங்கிலேயருக்கு இருக்கவில்லை என்பதுதான் முரண்பாடு.
சாவர்க்கர் 1924-க்கு முன்பு மன்னிப்புக் கடிதம் எழுதினார் என்பதுதானே, நாம் அறிந்தது. ஆனால், சிறையில் அடைக்கப்பட்ட சில மாதங்களிலேயே, ஆங்கிலேயருக்கு மன்னிப்புக் கடிதம் எழுத ஆரம்பித்துவிட்டார் சாவர்க்கர். 1911-லேயே அவர் ஒரு கடிதம் எழுதினார். அது இப்போது கிடைப்பதில்லை. ஆனால், 1913 அவர் அனுப்பிய மற்றொரு கடிதத்தில் அந்த முந்தைய கடிதத்தைக் குறிப்பிடுகிறார். கடிதத்தில், `அடிபணிதல்’ வாசகங்கள் பளிச்சென்று இருக்கின்றன.
`To : The home member of the government of India’ என்று தலைப்பிடப்பட்டிருக்கும் அந்தக் கடிதத்தில், `சிறைக் கொடுமைகளை என்னால் தாங்க முடியவில்லை. எண்ணெய் ஆலையில் போட்டு வதைக்கிறார்கள். அரசு கருணை காட்டி என்னை விடுவித்தால், நான் அரசியலமைப்பின் தீவிர ஆதரவாளனாகச் செயல்படுவேன் என உறுதி கூறுகிறேன். எந்தச் சூழ்நிலையிலும் அரசுக்கு சேவகம் செய்ய நான் தயாராக இருக்கிறேன். எங்களுக்கு அன்னையாக இருக்கும் அரசே கருணை காட்ட வில்லையென்றால், இந்த மகன் வேறு எங்கே சென்று நிற்பேன்…’ என்று சொல்கிறார் சாவர்க்கர்.
சாவர்க்கரைப் போலவே, பகத்சிங்கும் ஒரு கடிதத்தை பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு எழுதினார். லாகூர் சிறையில் இருந்து 1931-ம் ஆண்டு அவர் அனுப்பிய கடிதம் அது. அதில், `உங்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பு, எங்களை போர்க்கைதிகளாக வகைப்படுத்துகிறது. ஆம், நாங்கள் போர்க்கைதிகள்தான். ஆகவே, எங்களை நீங்கள் தூக்கிலிடக்கூடாது. மாறாக, துப்பாக்கித் தோட்டாக்களால் சுட வேண்டும்’ என்று,
அறிவித்தான் அந்த 23 வயது இளைஞன்.
அடுத்து, `இந்தப் போர் தொடரும்’ என்று அறிவித்துவிட்டு, `எங்களைக் கொல்லப்போகும் ராணுவ அதிகாரிகளை எப்போது அனுப்புகிறீர்கள்’ என்ற கேள்வியோடு அந்தக் கடிதத்தை முடிக்கிறார் அவர்.
கடிதத்தில் ஓர் இடத்தில், குறித்துக்கொள்ளுங்கள். முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் நாள்கள் எண்ணப்படுகின்றன. ஒருநாள் இங்கு, சோசியலிஸ சமுதாயம் மலரும்’ என்று கர்ஜிக்கிறான், அந்த மாவீரன்.
கடிதம் முழுவதுமே, அப்படித்தான். அதிகமும் தேசத்தைப் பற்றித்தான் பேசுகிறார் பகத் சிங். இதற்கு லாகூர் சிறையும் ஒன்றும் சொகுசு சிறையல்ல. ஆனாலும், பகத்சிங் அதைப் பற்றியெல்லாம் கவலைகொள்வதில்லை.
உதிரம் முழுவதும் விடுதலை வேட்கை ஓடும் ஒருவனின் வார்த்தைகள் எப்படியிருக்குமோ, அப்படியிருக்கின்றன பகத் சிங்கின் வார்த்தைகள்.
உறைவிட்டெழும் வாளென, நாண் தொட்டு புறப்படும் அம்பென பாய்கின்றன, அவன் சொற்கள்!
அப்படியே சாவர்க்கரின் வார்த்தைகளையும் பார்க்கவும். `நான் இப்படியெல்லாம் கஷ்டங்களை அனுபவிக்கிறேன்… கருணை காட்டுங்கள்… நல்ல படியாக நடந்துகொள்வேன்’ என்றெல்லாம் அந்நியனிடம் பணிகிறார் சாவர்க்கர்.
இவர் எப்படி பாரதத்தின் ரத்தினம் ஆவார்? `நீங்கள் என்னை விடுவித்தால், இந்தியாவில் உங்கள் புகழ் பெருகும்’ என்றெல்லாம்கூட ஆங்கிலேயர்களிடம் உருகியிருக்கிறார் சாவர்க்கர்.
1924-ல் அவரது விடுதலைக்குக் காரணமான மன்னிப்புக் கடிதம், இன்னும் உக்கிரமானது. `என்னை விடுவித்தால் நான் உங்களுக்கு நல்ல சேவகனாக இருப்பேன்’ என்று அதில் பட்டயமே எழுதித் தருகிறார் சாவர்க்கர்.
`நான் எவ்வளவு நன்றாக நடந்துகொள்ள முடியுமோ, அவ்வளவு நன்றாக நடந்துகொள்கிறேன்…’ என்றும்கூட வாக்குறுதி அளிக்கிறார். வெளிவந்த பின், அவர் அதைத்தான் செய்தார். சிறையிலிருந்து வெளியேவந்த பிறகுதான் `Hindutva : Who is a Hindu’ புத்தகத்தையே எழுதினார்.
அது, இந்தியாவை பிரித்தாளத் துடித்துக்கொண்டி ருந்த பிரிட்டிஷாருக்கு ஒரு கையேடாகவே உதவியது.
ஜின்னாவுக்கும் அது ரெஃப்ரன்ஸாக மாறியது.
1926-ல் சாவர்க்கரைப் பற்றி ஒரு புத்தகம் வெளிவந்தது. அவரது வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் அது. பெயர், `Life of Barrister Savarkar’. அதை எழுதியவரின் பெயர் சித்திரகுப்தன். விநோதம் என்னவென்றால், அந்த சித்திரகுப்தனே சாவர்க்கர்தான். ஏனென்றால், அந்தச் சித்திரகுப்தன் அதற்கு முன்னரும் சரி, பின்னரும் சரி எந்தப் புத்தகமுமே எழுதவில்லை.
எழுதிய ஒரே புத்தகம் சாவர்க்கருடைய வரலாறு மட்டும்தான். சுயவரலாறு எல்லோரும் எழுதுவதுதான். ஆனால், அதை அவர்களின் பெயரில் எழுதுவது அல்லவா உலக வழக்கம்! தனது படத்தை தானே வணங்கிய நித்யானந்தாவைப்போல, தன்னைப் பற்றி தானே புகழ்ந்து எழுதியவர் சாவர்க்கர்.
இதுதான் அவரது நேர்மை!
`அவர் ஏன் மன்னிப்புக் கேட்டார் தெரியுமா? தேசப் பணிக்காகவே அதைச் செய்தார்’ என்கிறார்கள் சிலர். அப்படி மன்னிப்புக் கேட்டு வெளியேவந்து சாவர்க்கர் செய்த மாற்றங்கள் என்று எதுவுமில்லை. ஆங்கிலேயனை எதிர்க்கும் எந்தச் செயல்களையுமே அவர் முழுவீச்சில் செய்யவும் இல்லை.
மழைக்கு பயந்து எலி வளைக்குள் ஒடுங்கிக்கொள்வதைப்போல, ஒடுங்கிக் கொண்டார்.
ஆங்கிலேயன் இந்தியாவைவிட்டு விலகும் வரை, அவருக்கு மழைக்காலம் போகவே இல்லை. காந்தி வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை ஆரம்பித்தபோது, அதிலிருந்து விவரமாக விலகிநின்றவர் சாவர்க்கர். இப்படி இன்னும் எத்தனையோ சொல்லலாம்.
காந்தி – சாவர்க்கர். யார் தேசபக்தர் ?
`காந்தி 4 வருடங்கள்தான் சிறையில் இருந்தார். ஆனால், சாவர்க்கர் 14 வருடங்கள் சிறையில் இருந்தார். அப்படியென்றால், யார் பெரிய தேசபக்தர்’ என்றும் கேட்கிறார்கள். இதில் இருக்கும் தகவல் சரி, ஆனால், பார்வை தவறு. காந்தி ஒரே முறையாக 4 வருடங்கள் சிறையில் இருக்கவில்லை. மொத்தம் பதினொரு முறை அவர் சிறைக்குச் சென்று திரும்பினார்.
தென்னாப்பிரிக்கச் சிறைகளும் அதில் அடக்கம். ஒன்றை நோக்கவும். ஒவ்வொரு முறையும் ஒரு போராட்டம், அதில் விசாரணை, அதற்குப் பிறகு தண்டனை என்று சிறை சென்றவர் அவர். அவர் சிறை சென்றபோதெல்லாம், மக்கள் கொதித்தெழுந்தார்கள். காந்தியை விடுவிக்கக்கோரி போராடினார்கள். அவரும் தன்பங்குக்கு சிறை சீர்திருத்தம் என்று களமிறங்கினார்.
ஆக, பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு கண்முன்னால் இருந்த ஒரே வழி, காந்தியை விடுவிப்பது மட்டும்தான். ஒரு தடவை, நான்கு நாள்களுக்குள் மூன்றுமுறை காந்தி கைது செய்யப்பட்டு திரும்பத் திரும்ப விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
அந்தளவுக்கு ஆங்கிலேய அரசுக்கு நெருக்கடிகளை உருவாக்குபவராக இருந்திருக்கிறார் காந்தி!
தென்னாப்பிரிக்காவில் காந்தி சிறைத்தண்டனை முடிந்து வெளியே வந்தபோது, காந்தியை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் வாசலில் திரண்டு நின்றார்கள் என்பது வரலாறு. அவர் பின்னால் எப்போதுமே மக்கள் இருந்தார்கள். ஏனென்றால், அவர், அவர்களின் மனங்களில் இருந்தார்.
75 வயதிலும்கூட சிறைக்குச் செல்லும் துணிவை, அவருக்கு அளித்தது அந்த மக்களின் அன்புதான்!
ஆனால், சாவர்க்கர் விவகாரம் அப்படியல்ல. அவருக்காக யாரும் இங்கே கொதித்தெழவில்லை.
சாவர்க்கரை விடுவிக்கக்கோரி ஒரு போராட்டம்கூட இங்கே நடக்கவில்லை. ஏன், அவரது தரப்பினரேகூட அவரை மறந்துவிட்டிருந்தார்கள்.
சாவர்க்கருக்கும் மக்கள் செல்வாக்குக்கும் காத தூரம். சாவர்க்கர் என்றொருவர் இருக்கிறார் என்பதையே மக்கள் அறிந்திருக்கவில்லை. அறியும் அளவுக்கு சாவர்க்கரும் மக்களுக்காக எதுவும் செய்யவில்லை. அவர் பேசியதெல்லாம் வன்முறை, வெறுப்பு, பிரிவினை மட்டும்தான். சிறைக்குள்ளேயும் அவர் அதைத்தான் செய்தார்.
கைதிகளை இஸ்லாமியர், இந்துக்கள் என்று பிரித்துப் பார்த்து வேலையைக் காட்டினார். இது, அவர் எழுதிய அந்தமான் சிறை அனுபவங்கள் புத்தகத்திலேயே பதிவாகியிருக்கிறது. `இஸ்லாமியர்களின் தொழுகை நேரத்தில், சங்கநாதம் எழுப்புங்கள் என்று இந்துக்களை அவர் தூண்டினார்’ என்று, அவரது ஆதரவாளர்களே பதிவு செய்திருக்கிறார்கள்.
எல்லாவற்றுக்கும் மேலே, `நான் நெருப்புடன் விளையாடுகிறேன் என்று எனக்குத் தெரியும். ஆனால், அதை நான் தொடர்ந்து செய்வேன்’ என்று, ஆங்கிலேயனின் நீதிமன்றத்தில் நெஞ்சம் நிமிர்த்தி அறிவித்தவர் காந்தி!
ஜின்னாவுக்கு முன்பே, இரண்டு தேசங்கள் கோட்பாட்டை முன்மொழிந்தவர் சாவர்க்கர்தான். நன்றாகக் கவனிக்கவும். ஜின்னாவை வழிமொழிய வில்லை சாவர்க்கர். அவர்தான் முன்மொழியவே செய்கிறார்.
அந்த `Holy land’ கருத்தாக்கத்திலேயே, இரண்டு தேசங்களுக்கான அடித்தளம் போடப்பட்டுவிட்டது. அதையே, பின்னாளில் அரசியல்வெளியில் விரித்தெடுத்தார் ஜின்னா.
அதாவது, கல்லை உரசி நெருப்பைப் பற்றவைத்தார் சாவர்க்கர். ஜின்னா அதை ஊதிப் பெரிதாக்கினார். அவ்வளவுதான்.
உண்மையில் 1939-ம் ஆண்டு லாகூர் மாநாட்டில்தான், `இரண்டு தேசங்கள் (Two Nations)’ எனும் தீர்மானத்தையே போடுகிறது, முஸ்லிம் லீக். ஆனால், 1937-ம் ஆண்டே, `இரண்டு தேசங்கள்’ தீர்மானத்தை முன்மொழிந்துவிட்டது, இந்து மகா சபா. சாவர்க்கர் அப்போது அதன் தலைவர்.
1937-ம் ஆண்டின் முற்பகுதியில், அகமதாபாத்தில் நடந்த இந்து மகாசபா கூட்டத்தில் பேசிய சாவர்க்கர், `இங்கே இரண்டு தேசங்கள் இருக்கின்றன. ஒன்று இந்துக்களுடையது, இன்னொன்று முஸ்லிம்களுடையது’ என்று பிரகடனம் செய்தார். அந்தப் பிரகடனமே பின்னர் தீர்மானமானது.
அடுத்து காட்சிக்கு வருகிறார், மாதவ சதாசிவ கோல்வால்கர். சாவர்க்கரின் சிஷ்யப்பிள்ளை இவர். கோல்வால்கர் என்ன சொல்கிறார் தெரியுமா?
`இந்துப் பெரும்பான்மை அடையாள அரசியலே உண்மையான தேசியவாதம். அது அல்லாத எந்த அரசியலும் இந்தியாவுக்கு விரோதமானது’ என்று இன்னொரு குண்டைத் தூக்கி வீசுகிறார்.
இவர்களின் இதுபோன்ற கூற்றுகளுக்குப் பிறகுதான், ஜின்னா அதிக நம்பிக்கை கொள்கிறார். `அவர்களே சொல்லிவிட்டார்கள். அப்புறம் என்ன?’ என்று பிரிவினைக்கத்தியை இன்னும் ஆழமாக இந்தியாவின் நெஞ்சில் ஜின்னா இறக்க ஆரம்பித்தது 1940-களுக்குப் பிறகே!
இன்னொரு தகவல். 1945-ம் ஆண்டு இன்னும் எல்லையைக் கடக்கிறார் சாவர்க்கர். `ஜின்னாவின் இரண்டு தேசங்கள் எனும் கருத்தாக்கத்தில் எனக்கு எந்த முரண்பாடும் தெரியவில்லை. நாம் இந்துக்கள் ஒரு தேசம், முஸ்லிம்கள் இன்னொரு தேசம்’ என்கிறார்.
இங்கே நாம் இன்னொன்றை பார்க்க வேண்டும். இன்றுவரை பெரியாருக்கும் அண்ணாவுக்கும் ஏன் பாரத ரத்னா மறுக்கப்படுகிறது?
எம்.ஜி.ஆரால் அடைய முடிந்த அந்த விருதை அவரின் ஆசான்களான அவர்களால் ஏன் அடைய முடியவில்லை?
இதற்குக் காரணமாகச் சொல்லப்படுவது ஒரே ஒரு விஷயம்தான். அதாவது, `அவர்கள் பிரிவினை பேசினார்கள்’ என்பது. பெரியாரும் அண்ணாவும் பேசியது பிரிவினை என்றால், சாவர்க்கர் பேசியதற்கு பெயர் என்ன? பெரியார், அண்ணாவுக்கு ஒரு நியாயம், சாவர்க்கருக்கு ஒரு நியாயமா?’அதெப்படி ஒரே விஷயத்தில் இரண்டு நியாயங்கள் இருக்க முடியும்’ என்பதே நாம் எழுப்பும் கேள்வி!
காந்தி கொலையில் சாவர்க்கர் பங்கு
கடைசியாக, காந்தி கொலை! காந்தி கொலையில் சிக்கியவர்கள், மொத்தம் 9 பேர். நாதுராம் கோட்சே, அவரின் சகோதரர் கோபால் கோட்சே, நாராயண் ஆப்தே, விஷ்ணு கர்கரே, மதன்லால் பஹ்வா, ஷங்கர் கிஸ்தயா, தத்தாத்ரேயா பர்சுரே மற்றும் விநாயக் தாமோதர் சாவர்க்கர். இன்னொருவர் இருக்கிறார். அவர் திகம்பர் பாட்ஜே.
இந்த பாட்ஜே மிகவும் முக்கியமானவர். ஏனென்றால், இவரது வாக்குமூலம்தான் கோட்சேவுக்கும் சாவர்க்கருக்கும் இருந்த தொடர்பை, தெள்ளத்தெளிவாகக் காட்டியது.
பாட்ஜேவின் வாக்குமூலம் இது… `1948 ஜனவரியில் நாங்கள் இருமுறை சாவர்க்கரை சந்தித்தோம். முதல் சந்திப்பு ஜனவரி 14-ம் தேதி நடந்தது. நான், நாதுராம், ஆப்தே மூவரும் பாம்பேயில் இருக்கும் சாவர்க்கர் சதனுக்குச் சென்றோம். இரண்டாவது மாடியில் அவரது அறை இருந்தது. நான் கட்டடத்துக்கு வெளியே நின்றேன். நாதுராமும் ஆப்தேவும் உள்ளே சென்றனர். சிறிது நேரம் கழித்து இருவரும் வெளியே வந்தனர். `காந்தியையும் நேருவையும் முடிக்க வேண்டும் என்று அவர் சொன்னதாக கோட்சே என்னிடம் சொன்னார்’.
`Gandhi and Nehru should be finished’ என்ற வார்த்தையையே வாக்குமூலத்தில் சொல்கிறார் பாட்ஜே. அந்த ஜனவரி 14-ம் தேதிதான், கோட்சேவின் கைக்கு துப்பாக்கியும் வந்து சேர்கிறது.
அடுத்த சந்திப்பு, ஜனவரி 17-ம் தேதி நடக்கிறது. இப்போதும் அதே மூவர்தான் செல்கிறார்கள். இந்த முறை பாட்ஜே, சதனுக்குள் நுழைந்து, முகப்புப் பகுதியில் நிற்கிறார். 10 நிமிடம் கழித்து கோட்சேவும் ஆப்தேவும் மாடி அறையில் இருந்து வெளியே வருவதை, பாட்ஜே கவனிக்கிறார். அவர்களுக்கு முன்னால் நின்றபடி ஒரு மனிதர் பேசிக்கொண்டிருக்கிறார். அவரது முகம் பாட்ஜேவுக்கு சரியாகத் தெரியவில்லை. ஆனால், குரல் நன்றாகக் கேட்கிறது. அந்த நபர், மராத்தியில் பேசுகிறார். `வெற்றியுடன் திரும்புங்கள்’ என்று, அவர் இருவர்களிடம் சொல்லும் வார்த்தை பாட்ஜேவின் காதில் விழுகிறது. அடுத்து, ஜனவரி 20-ம் தேதி, காந்தியைக் கொல்ல ஒரு முயற்சி நடக்கிறது. அதைச் செய்தது, மதன்லால் பஹ்வா. `விஷ்ணு கர்கரேவால் சாவர்க்கரிடம் அறிமுகம் செய்து வைக்கப்பட்டவன் அவன்’ என்பது, சாவர்க்கரின் உதவியாளர்களான ராமச்சந்திர காசரும் விஷ்ணு தம்லேவும் அளித்த வாக்குமூலம். ஆனால், அந்த முயற்சி தப்புகிறது. பஹ்வா கைது செய்யப்படுகிறான். ஜனவரி 30-ம் தேதி காந்தி கொல்லப்படுகிறார். கோட்சேவின் துப்பாக்கியிலிருந்து புறப்பட்ட மூன்று குண்டுகள் அதைச் செய்கின்றன.
பாட்ஜேவை `நம்பகமான சாட்சி (Trustful Witness)’ என்றே வரையறுக்கிறார், விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி ஆத்ம சரண். ஆனால், அவரது சாட்சியத்தை உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள், கிடைக்காமல் போகின்றன. இதன் அடிப்படையிலேயே, சாவர்க்கர் விடுவிக்கப்படுகிறார். உண்மையில், கோட்சேவுக்கும் சாவர்க்கருக்கும் இருந்த உறவு குரு – சிஷ்யன் வகையிலானது. இந்து மகாசபா கூட்டங்களுக்கு, கோட்சேவையும் ஆப்தேவையும் அழைத்துச் செல்வதில், அதிக ஆர்வமாக இருந்திருக்கிறார் சாவர்க்கர். ஆனால், காந்தி கொலைக்குப் பிறகு, இருவருக்கும் இடையே விரிசல் உண்டாகிறது. காரணம், சாவர்க்கரின் சந்தர்ப்பவாத வாக்குமூலம்! கோபால் கோட்சேவின் வழக்கறிஞர் இனாம்தார் நாதுராமின் அப்போதைய மனவோட்டம் என்னவாக இருந்தது என்பதைப் பதிவு செய்கிறார். `நாதுராம் சிறையில் தனிமைப்பட்டுக்கிடந்தார். அவருக்கு அப்போது தேவைப்பட்டது அவரது கையை அன்பாகத் தொட்டு உரையாடக்கூடிய அவரது குருவின் சொல். ஆனால், அது நடக்கவில்லை. அந்த வருத்தத்தை சிறையில் என்னை சந்தித்தபோது பகிர்ந்துகொண்டார் நாதுராம்’ என்கிறார் அவர்.
1964 அக்டோபரில் கோபால் கோட்சே விடுதலையானார். அடுத்த மாதமே, அவருக்கு ஒரு வரவேற்பு விழா நடக்கிறது. அதில், `காந்தியைக் கொல்வதன் அனுகூலங்களை எனக்கு விளக்கினான் நாதுராம்’ என்று சொல்கிறார் கோபால் கோட்சே. விவகாரம் மீண்டும் வெடிக்கிறது. நீதிபதி ஜேஎல் காபூர் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டு, காந்தி கொலை மறு விசாரணை செய்யப்படுகிறது. இது நடந்தது 1965 மார்ச் மாதம். அடுத்த வருடம், பிப்ரவரி மாதம் சாவர்க்கர் இறக்கிறார். உணவையும் தண்ணீரையும் மறுத்து வலுக்கட்டாயமாக அவர் அந்த மரணத்தைத் தேடிக்கொள்கிறார். அவர் அந்த முடிவை எடுக்க முக்கியமான காரணம், காபூர் கமிட்டியால் அவர் முற்றிலுமாக சுற்றி வளைக்கப்பட்டிருந்தார் என்பது. இன்னும் கொஞ்சநாள் இருந்திருந்தால், காபூர் கண்டிப்பாக சாவர்க்கர் கையில் விலங்கு மாட்டியிருப்பார். காபூர் அறிக்கையின் ஆறாம் அத்தியாத்தில், `Background of the accused’ என்றொரு பகுதி இருக்கிறது. அதில், காந்தி கொலையில் சாவர்க்கருக்கு இருந்த பங்கு, விரிவாகவே பேசப்படுகிறது.
காந்தி மீதான சாவர்க்கரின் பகைக்கு மிக முக்கியக் காரணம், அவரது அகிம்சை! வாழ்வு முழுதுமே, `Hindu Masculinity (இந்து வீரம்)’ என்பது குறித்து தீவிரமாகப் பேசுகிறார் சாவர்க்கர். ஒன்று தெரியுமா? சாவர்க்கர் பசுவழிபாட்டை கடுமையாக எதிர்த்தவர். அதற்குப் பின்னால் இருந்தது, பன்மைத்துவத்தைப் பேணும் அக்கறை என்று தவறாக நினைக்க வேண்டாம். `பசுவை வணங்கினால் பசுவைப் போலவே நாமும் சாந்தமாகிவிடுவோம்’ என்று அவர் எண்ணியதே, அதற்குக் காரணம். அந்த அளவுக்கு அகிம்சை அவருக்கு ஆகாத ஒன்றாக இருந்தது. அவர் ஆரம்ப காலத்தில் அங்கம் வகித்த, அபினவ் பாரத் அமைப்பு, அடிப்படையிலேயே வன்முறையைப் போற்றும் அமைப்பு. அதிலிருந்து கிளைத்து எழுந்து வந்தவர் அவர்! இந்துக்களை வீரம்மிக்க ஒரு சமுதாயமாகவே அவர் உருவகித்தார். `பள்ளிகளில் படிப்பைவிட உடற்பயிற்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என்று அவர் குரல் கொடுத்தது, அதற்காகவே. கனவு வெளியில், வேதகாலத்திலேயே வாழ்ந்துகொண்டிருந்த மனிதர் அவர். ஆகவே, அகிம்சை அவருக்கு பிடிக்கவில்லை.
இப்படிப்பட்டவர், வீரம்செறிந்த நேதாஜியுடன் இணைந்திருக்கலாமே என்ற கேள்வி, சிலருக்கு எழலாம். அந்தக் கேள்வி நியாயமான ஒன்று. ஆனால், அங்கேதான் ஒரு விஷயம் இருக்கிறது. அதாவது, காந்தியைப்போலவே, நேதாஜியும் உடையாத, மதச்சார்பு இல்லாத ஒரு இந்தியாவை கனவு கண்டவர். நேதாஜியின் அகிம்சையைக் காந்தி சந்தேகித்தாரே ஒழிய, அவரது மதச்சார்பற்ற தன்மையை அவர் எப்போதுமே சந்தேகித்ததில்லை. நேதாஜியின் படையில் இஸ்லாமியர்களும் அதிகளவில் பங்கெடுத்ததற்கு, அவரது மதச்சார்பற்ற தன்மையே காரணம். அது, சாவர்க்கரின் பிரித்தாளும் கொள்கைக்கு உவப்பானதாக இல்லை. அதுவும் இல்லாமல், சாவர்க்கர் களவீரரும் அல்ல. அவர் எப்போதுமே பின்னால் இருந்து இயங்குபவர். தூண்டிவிடுவதில் சமர்த்தர். `Man in the chair’ என்போம் அல்லவா, அதே போன்றவர்.
இன்னொன்று தெரியுமா? அவர், இந்தியாவில் வைத்து கைது செய்யப்படவில்லை. லண்டனில் வைத்துதான் கைதானார். வில்லியம் கர்சனின் கொலையாக இருக்கட்டும், ஜாக்சனின் கொலையாக இருக்கட்டும், அவர் நேரடியாகச் செயலாற்றவே இல்லை. அதற்குரிய அத்தனை உதவிகளையும் செய்தார், திட்டங்களை வகுத்தார். `20 துப்பாக்கிகளை அவர் லண்டனிலிருந்து இந்தியாவுக்கு அனுப்பினார்’ என்கின்றன, தரவுகள். ஆனால், எங்குமே காட்சிக்கு வராமல் சாமர்த்தியமாக ஒதுங்கிக் கொண்டார் சாவர்க்கர். அந்தமான் சிறையிலும்கூட தூண்டிவிடும் வேலையை கச்சிதமாகச் செய்திருக்கிறார். சக கைதிகளை உண்ணாவிரதத்துக்குத் தூண்டிவிட்டுவிட்டு, அவர் உணவருந்த சென்ற நிகழ்வும்கூட நடந்திருக்கிறது.
ஆகவே, இதுதான் சாவர்க்கர்! இவைதான் அவரது அரசியல்! மக்களைப் பிரித்தாளும் சித்தாந்தம், களத்துக்கு வராமல் பின்னே இருந்து இயங்குவது, மாட்டிக்கொண்டால் சீடனாகவே இருந்தாலும் கழட்டிவிடுவது என்று இருந்தவர் சாவர்க்கர். அவரது சித்தாந்தத்தாலோ, அவரது செயற்பாடுகளாலோ இந்தியாவுக்கும் எந்தப் பயனுமில்லை. இவ்வளவு எடுத்துச் சொன்ன பிறகும், `சாவர்க்கருக்கு பாரதரத்னா கொடுத்தால் என்ன தப்பு’ என்று கேட்பவர்களிடம் சொல்வதற்கு ஒன்றுமில்லை. குறைந்தபட்சம் ஒன்றை மட்டுமேனும் உணர்வோம். சாவர்க்கர் முன்னே எழுந்துவரும் ஒவ்வொருமுறையும் அசோகர் புதைக்கப்படுகிறார், அவரது தத்துவம் புதைக்கப்படுகிறது. ஒன்றை யோசிப்போம். அகிலத்தின் எத்தனையோ நாடுகளில் ஜனநாயகம் வெறும் கனவாக மட்டுமே இருக்கும் சூழலில், இந்தியா மட்டும் எப்படி அதை இன்னும் தக்கவைத்திருக்கிறது? காற்றடித்தாலும் மழையடித்தாலும், இந்தியாவின் ஜனநாயக தீபம் மட்டும் தொடர்ந்து ஒளிர்வது எப்படி. காரணம் எளிது. ஏனென்றால், இந்தியாவின் மரபிலேயே ஜனநாயகப் பண்புகள் இறுக்கிக் கட்டப்பட்டிருக்கின்றன. கட்டியவர், அந்த மகா சக்கரவர்த்தி அசோகர்! அவரும் ஓர் அரசர்தான். ஆனால், மற்ற அரசர்களிடம் இருந்து அசோகர் எங்கே வேறுபடுகிறார் தெரியுமா. மக்களின் மீதான அபிமானத்தில் வேறுபாடுகிறார். மரபை சீரமைத்து முன்னெடுத்துச் சென்றதில், வேறுபடுகிறார். கலிங்கத்தின் தயா நதிக்கரையில் இறந்து மிதந்த மனித உடல்களைக் கண்டு, ‘என்ன செய்துவிட்டேன் நான்…’ என்று வருந்திய குரலில், வேறுபடுகிறார்.
ஆம். இத்தேசம் அசோக தத்துவத்தால் கட்டமைப்பட்டது! `வரலாற்றை நிறைத்து நிற்கும் எத்தனையோ பேரரசர்களின் பெயர்களின் மத்தியில், அசோகர் மட்டுமே ஒரு வீழா நட்சத்திரமென தனித்து ஒளிர்கிறார்’ என்று ஆய்வாளர் ஹெச்.ஜி. வெல்ஸ் விழிவிரித்து கூறினாரே, அந்த அசோகரின் தத்துவத்தால் கட்டமைக்கப்பட்டது! இதை உணர்ந்தே, சிவாஜியை இடதுபக்கமும் அக்பரை வலது பக்கமும் ஒதுக்கிவிட்டு, அசோகரை இந்தியாவுக்கு அடையாளமாக்கினார் நேரு. தர்ம சக்கரம் சுழலும் அந்தச் சிங்கச்சிலையை இந்திய சின்னமாக்கி, `எழுக அவர் வேதம். எக்குடியும் என்குடியே என்றுரைக்கும் அசோகவேதம்’ என்று நேரு அறிவித்தபோது, இந்திய அன்னை துள்ளிக்குதித்து கூத்தாடினாள். சாவர்க்கர் வழிபாடு, அவளின் அந்த சந்தோஷத்தைக் கண்டிப்பாக நிர்மூலமாக்கும். 2,000 ஆண்டுகளாக இந்த மண்ணில் ஊறி நின்றிருக்கும் மகத்துவத்தை, அது 20 வருடங்களுக்குள் அழித்தொழிக்கும்.
அறிக… அசோகரே புதைகிறாரென்றால் காந்தியும் இருக்கப்போவதில்லை. நேருவும் அகன்றிருப்பார். அம்பேத்கரும் கூட கைவிட்டிருப்பார். இது உருவாக்கப்போகும் விளைவை, நம்மால் இப்போது உணர முடியாது. ஹிட்லரின் ஜெர்மனியாக, நத்தேன்யாஹூவின் இஸ்ரேலாக இத்தேசம் மாற்றப்பட்ட பிறகுதான், நமக்கு அந்த உணர்வு எழும். ஆனால், அப்போது எல்லாமே கையைமீறிப் போயிருக்கும். நமக்கான கங்கைகளைத் தேடி நாம் அலையத் தொடங்கியிருப்போம். நாசிக்குள் புகுந்து நம்மை நிலைகுலையச் செய்யும் ரத்தத்தின் வீச்சத்தை நம்மால் கடக்கவே முடியாமல் இருக்கும். அது வீடோ, அலுவலகமோ, பேருந்தோ, ரயிலோ, ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து வெறுமனே அமர்ந்திருப்போம். உண்ணச் சென்றால், தட்டில் இஸ்லாமிய குழந்தையின் உடைக்கப்பட்ட வெள்ளெலும்பு உணவென நெளியும். உறங்கச் சென்றால், கிறிஸ்துவ குழந்தையின் உரிக்கப்பட்ட தோல், படுக்கை விரிப்பென விரியும். அரண்டு ஓடிவந்து வெட்டவெளியில் நின்று, வான்நோக்கி இறைஞ்சுவோம், `அய்யோ… அப்போதே உணரத் தவறிவிட்டோமே…’ என்று. அதைக் கேட்கவும் அப்போது நாதியிருக்காது. கடவுளால் தனித்துவிடப் பட்டிருப்போம். அறத்தால் தள்ளிவைக்கப் பட்டிருப்போம். மனிதர்களை மதத்தாலும், இனத்தாலும் பிரித்து அரசியல் செய்த அரக்கர்களின் பின்னால் நின்ற அத்தனை பேருக்கும் கடைசியில் எஞ்சுவது, தீரா பழிச்சொல்லும், விலகா பெரும் பாவமுமே.
அது நமக்கு உவப்பென்றால், சாவர்க்கருக்கு பாரதரத்னா அளிப்போம். அடுத்து, கோல்வால்கருக்கும். கடைசியாக, கோட்சேவுக்கும்!
நன்றி. விகடன். (விகடனில் வந்த கட்டுரை).
நன்றி: வைத்தியலிங்கம் நடராசன்