=====================================
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் அறிக்கை!
=====================================

தமிழ்நாட்டில் தமிழ்நாட்டு அரசுப் பணிகளிலும், இந்திய அரசுத் துறைகளின் பணிகளிலும் மண்ணின் மக்களாகிய தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு இந்திக்காரர்கள் அதிகமாக சேர்க்கப்படுவதை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதிகள் என். கிருபாகரன் அவர்களும், பி. புகழேந்தி அவர்களும் சுட்டிக்காட்டி கடும் விமர்சனங்கள் தெரிவித்துள்ளனர். மற்ற மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கான சட்டங்கள் – ஏற்பாடுகள் இருக்கும்போது, தமிழ்நாட்டில் மட்டும் ஏன் அது இல்லை என்றும் கேட்டிருக்கிறார்கள்.

இந்த விமர்சனங்களையும் கேள்விகளையும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் 2005லிருந்து தமிழ்நாடு அரசை நோக்கிக் கேட்டு வருகிறது. கடந்த 2018 பிப்ரவரி 3ஆம் நாள், சென்னை சேப்பாக்கம் அண்ணா அரங்கத்தில் இதற்காகவே “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!” என்ற தலைப்பில் பெரும் மாநாடு ஒன்றை நடத்தி, அதில் தீர்மானம் போட்டு, மற்ற மாநிலங்களில் உள்ள மண்ணின் மக்கள் வேலை உரிமைக்கான சட்டங்களைத் தொகுத்து நூலாக வெளியிட்டோம். அந்தத் தீர்மானத்தையும், அந்த நூலையும் 2018 பிப்ரவரி மாதமே தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் நேரில் கொடுத்தோம். ஆனால், தமிழ்நாடு அரசு தமிழர்களின் வேலை வாய்ப்புப் பறிபோவதைப் பற்றி சிறிதும் கவலைப்படாமல் அயல் மாநிலத்தவர்களின் ஆக்கிரமிப்புக்கு ஆதரவாகவே செயல்பட்டு வருகிறது.

இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரத்தைச் சேர்ந்த சரவணக்குமார் என்பவர் ஊட்டியிலுள்ள நடுவண் அரசின் ஆயுதத் தொழிற்சாலையில் கெமிக்கல் பிராசசிங் பணிக்கு நடந்தத் தேர்வில் கலந்து கொண்டு, 40 மதிப்பெண் வாங்கியதாகவும், ஆனால் அவருக்கு வேலை கொடுக்கப்படவில்லை என்றும், அவரை விட மிகக் குறைவாக மதிப்பெண் பெற்ற வெளி மாநிலத்தவர்கள் ஆறு பேருக்கு வேலை கொடுத்ததாகவும் சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்குத் தொடுத்திருந்தார்.

இவ்வழக்கில், தனி நீதிபதி அளித்த தீர்ப்பில் தகுதியுள்ள சரவணக்குமாருக்கு வேலை கொடுக்க வேண்டும் என்றும், அத்தொழிற்சாலையிலுள்ள காலிப் பணியிடங்கள் 12இல் ஒரு பணியிடத்தை இவருக்கு வழங்க வேண்டுமென்றும் தீர்ப்பளித்தார்.

ஊட்டி ஆயுதத் தொழிற்சாலை இந்தத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து, உயர் நீதிமன்றத்தில் இருநீதிபதிகள் அமர்வுக்கு மேல் முறையீடு செய்தது.

இந்த மேல் முறையீட்டை சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதிபதிகள் கிருபாகரன் அவர்களும், புகழேந்தி அவர்களும் 06.10.2020 அன்று விசாரித்தனர். அப்பொழுது, நீதிபதி கிருபாகரன் அவர்கள், “நடுவண் அரசின் பணித் தேர்வில் அனைத்து மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் பங்கேற்கலாம். இதில் வெற்றி பெற்று பணியமர்த்தப் படுபவர்களுக்கு அந்தந்த மாநில மொழி தெரிந்திருக்க வேண்டும். ஆனால், பிற மாநிலங்களில் அந்தந்த மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பணியமர்த்தம் செய்யப்படுகின்றனர். தமிழ்நாட்டில் மட்டும் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

“வடமாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அவர்களின் தாய்மொழியான இந்தியில் இத்தேர்வுகளில் தேர்ச்சி பெற இயலாத நிலையில், தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெறுவதும், பணியமர்த்தம் பெறுவதும் எப்படி? இதுபற்றி நீதிமன்றம் கேள்வி கேட்டால், இது அரசின் கொள்கை முடிவு என்று ஏமாற்றுகிறார்கள்.

“பணித் தேர்வுகள் நேர்மையாகவும், வெளிப்படையாகவும் நடைபெற வேண்டும். தொடர்வண்டித் துறை பணித்தேர்வுகளில், அதிகளவில் மோசடிகள் நடைபெறுகின்றன. தமிழ்நாட்டில் மின் வாரியம், தொடர்வண்டித் துறை எனப் பல்வேறு துறைகளில் பிற மாநிலத்தவர்கள் அதிகளவில் பணியமர்த்தம் செய்யப்பட்டுள்ளனர். இதற்குத் தமிழ்நாடு அரசே பொறுப்பேற்க வேண்டும்” என்று நீதிபதி கிருபாகரன் கடுமையாகப் பேசியுள்ளார்.

அப்போது, நடுவண் அரசின் வழக்கறிஞர் சுப்பையா “மேற்படி ஆயுதத் தொழிற்சாலை பணியில் 140 பணியிடங்களில் 50 விழுக்காடு தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் சேர்க்கப்பட்டுள்ளார்கள்” என்று கூறினார்.

உடனடியாகக் குறுக்கிட்ட நீதிபதி என். கிருபாகரன், “தமிழ்நாட்டுக்கு என்ன பிச்சைப் போடுகிறீர்களா?” என்று கேட்டார். அத்துடன், மேற்படி ஆயுதத் தொழிற்சாலை எழுத்துத் தேர்வு விடைத்தாள்கள் மூன்று நாளில் திருத்தப்பட்டு, அதன் பிறகு அழிக்கப்பட்டுவிட்டன என்று சொல்கிறார்கள் என்று வழக்குத் தொடுத்துள்ள சரவணக்குமார் கூறியுள்ளார். இதுபற்றி அத்தொழிற்சாலையின் பொது மேலாளர் விடையளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை தேதிகுறிப்பிட்டு ஒத்திவைத்துள்ளார் நீதிபதி.

இச்செய்திகள் இன்று (07.10.2020) நாளேடுகளிலும், காட்சி ஊடகங்களிலும் வந்துள்ளன. தமிழ் நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களுக்கான தேர்வுகளில் ஆள் மாறாட்டம் செய்தல், வினாவிடைத் தாள்களை முன்பே பெற்று தேர்வெழுதுதல் போன்ற பல்வேறு ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டே இந்திக்காரர்கள் அதிக எண்ணிக்கையில் வேலையில் சேர்கிறார்கள் என்று நாம் தொடர்ந்து கூறி வருகிறோம். இப்போது உயர் நீதிமன்ற நீதிபதிகளே இந்த மோசடியை வெளிப்படுத்தியுள்ளார்கள்.

தமிழ்நாடு அரசு, இதற்கு என்ன விடை சொல்கிறது? தமிழ்நாட்டு மக்களின் தலைவிதி தங்கள் கையில்தான் உள்ளது எனச் சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சிகள், இந்த அநீதியை மாற்ற – சொந்த மண்ணிலேயே அகதிகளாக விடப்பட்டுள்ள தகுதியுள்ள தமிழர்களைக் காக்க, என்ன தொடர் போராட்டம் நடத்தியுள்ளன?

தமிழ்நாட்டு வேலைகளை இந்திக்காரர்களும், பிற மாநிலத்தவரும் மோசடியாக அபகரித்துக் கொள்கிறார்கள் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சொல்லும் குற்றச்சாட்டுகள் கற்பனையல்ல – உண்மைகள்தான் என்பதற்கு உயர் நீதிமன்றம் கூறியுள்ள விமர்சனமே சான்று!

மண்ணின் மக்களே, பல்வேறு தகுதிகளில் கல்வி கற்று, பயிற்சி பெற்று வேலையில்லாமல் அன்னை மண்ணிலேயே அநாதையாகிப் போன இளையோரே, “தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே!” என்ற நமது கோரிக்கையும், முழக்கமும் சட்டப்படியானது, நீதியானது! இந்த உரிமையை மீட்க வீதிக்கு வாருங்கள்!

1. தமிழ்நாடு அரசுப் பணிகளில் 100 விழுக்காடு தமிழர்களுக்கு வழங்க வேண்டும், 2. தமிழ் நாட்டிலுள்ள நடுவண் அரசுத் துறைகளில் 90 விழுக்காடு வேலைகள் தமிழர்களுக்கு வழங்க வேண்டும். அவற்றில் 10 விழுக்காட்டுக்கு மேல் உள்ள வெளியாரை வெளியேற்ற வேண்டும். 3. தமிழ்நாட்டுத் தனியார் துறை வேலைகளில் 90 விழுக்காட்டுப் பணிகள் தமிழர்களுக்கே வழங்க வேண்டும், 4. மண்ணின் மக்களுக்கான வேலை உரிமைக்கு கர்நாடகம், குசராத்து, மராட்டியம் போன்ற மற்ற மாநிலங்களில் சட்டம் இருப்பதைப் போல், தமிழ்நாட்டுக்கும் சட்டம் வேண்டும் என்று உரிமைக் குரல் எழுப்புவோம்!

இதுவரை இந்திய அரசோ, தமிழ்நாடு அரசோ மண்ணின் மக்களின் இந்தக் குரலுக்கு செவி சாய்க்க மறுத்து வருவதால், தமிழ்த்தேசியப் பேரியக்கம் அயல் மாநிலத்தவரின் ஆக்கிரமிப்புக்கு எதிரான ஒத்துழையாமை இயக்கத்தை 2020 நவம்பர் 1 முதல் தொடங்குகிறது! இது ஓர் அமைப்பு நடத்தும் ஒத்துழையாமை இயக்கமல்ல, தமிழர்களின் ஒத்துழையாமை இயக்கம் – தமிழ்நாட்டு மக்களின் ஒத்துழையாமை இயக்கம் என்ற வடிவில் செயல்பட வேண்டும்!

அயல் மாநிலத்தவர்களுக்கு தனியார் துறை உட்பட எதிலும் வேலை தர மாட்டோம், அயல் மாநிலத்தவர்களுக்குக் குடியிருக்கவோ, வணிகம் நடத்தவோ இடங்களை வாடகைக்கும், விலைக்கும் தர மாட்டோம்! அயல் மாநிலத்தவர் நடத்தும் வணிக நிறுவனங்களில் இயன்றவரை பொருள் வாங்க மாட்டோம்! அயல் மாநிலத்தவரோடு எந்த உறவும் வைத்துக் கொள்ள மாட்டோம் என்ற உறுதி ஏற்பே தமிழர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒத்துழையாமை இயக்கம்! காந்தியடிகள் காட்டிய வழியில், இந்த அறப்போராட்டத்தை சனநாயக முறையில் நடத்துவோம்!

=====================================
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
=====================================
பேச: 9443918095, புலனம் : 9841949462 https://senkettru.wordpress.com/2020/10/07/116453/

Related Images:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.