தேசிய இன ஒடுக்குமுறைக்கும் ஏனைய ஒடுக்குமுறைக்கும் இடையில் ஓர் முக்கிய வேறுபாடு உண்டு.
வர்க்க ஒடுக்குமுறையில் முதலாளி முதலாளியாக நீடிப்பதற்கு கூட தொழிலாளி இருந்தாக வேண்டும். தொழிலாளி வர்க்கம் முற்றாக அழித்தொழிக்கப்பட்டால் முதலாளி என்ற அந்தஸ்த்தை முதலாளி வர்க்கம் இழந்துவிடும்
சாதி ஒடுக்குமுறையில் ஒடுக்கப்படும் சாதி இருக்கும் வரைதான் ஒடுக்கும் சாதி என்ற ஒன்று இருக்க முடியும். சுரண்டிக் கொழுப்பதற்கும் ஆதிக்கம் செலுத்துவதற்கு ஒடுக்கப்படும் சாதியைச் சேர்ந்தவர்கள் இருந்தாக வேண்டும். ஒடுக்கப்பட்ட சாதியினர் முற்றாக அழித்து ஒழிக்கப்படும் அபாயம் இங்கு இல்லை.
பாலின ஒடுக்குமுறையில் ஆணாதிக்கம் நீடிப்பதற்கு பெண்ணினம் இருக்க வேண்டும். பெண்கள் முற்றாக அழித்து ஒழிக்கப்படும் அபாயம் இந்த ஒடுக்குமுறையில் இல்லை.
ஆனால், தேசிய இன ஒடுக்குமுறையைப் பொருத்தவரை ஒடுக்கும் இனம் ஒடுக்கப்படும் இனத்தை முற்றாக அழித்து ஒழித்து நாட்டை விட்டு விரட்டி இலட்சக்கணக்கில் படுகொலைகளை நிகழ்த்தும் தன்மை கொண்டதாக இருக்கிறது.
மேற்படி கருத்து 2009 காலகட்டத்தில் ஈழப் போர் நடந்துகொண்டிருந்த போது ஏதோ ஒரு போராட்டக் களத்தில் கவிஞர் காசிஅனந்தன் பேச நான் கேட்டதாகும். அது எனக்கு சரியாகவே பட்டது.
தேசிய இன ஒடுக்குமுறை 70 இலட்சம் காசுமீரிகளை திறந்தவெளி சிறையில் வைக்கும், 70,000 காசுமீர்களைக் கொல்லும். ஈழத் தமிழர்கள் மீது கொத்துக் குண்டுகளை வீசிக் கொல்லும். கடந்த ஒரு நூற்றாண்டில் அர்மீனியப் படுகொலை தொடங்கி செர்பிய படுகொலை வரை இரத்தம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. தமிழர்களாகிய நாமும் இனப்படுகொலை சக்கரத்தில் சிக்கி சின்னாபின்னமான வரலாற்றுக்குரியவர்கள் ஆகிவிட்டோம்.
அப்படியிருந்தும், இன அழிப்பின் துயரங்கள் பற்றி நம் மக்களை உணரச் செய்வதில் நாம் வெற்றிப் பெறவில்லை. ரோஹிங்கியா இன மக்கள் ஆளில்லா தீவில் குடியேற்றப்படும் கொடுமை நம் கண் முன்னே நடக்கிறது. நம் மக்களைப் பாலஸ்தீனர்களுக்காகப் பரிந்து பேச வைக்க முடியவில்லை.
ஓர் இனப்படுகொலை மிகவும் எளிமைப்படுத்தப்பட்டு இங்கே பேசப்படுகிறது. ஈழத் தமிழர்கள் அடைந்துவரும் துயரம் சொல்லில் விவரிக்க முடியாதது.
–முகநூலில் செந்தில்குமார் தியாகராஜன்.
https://www.facebook.com/story.php?story_fbid=3721336587900739&id=100000733030192