20.10.2020
க.சுவாமிநாதன்.
தென் மண்டல இன்சூரன்ஸ் ஊழியர் கூட்டமைப்பின் துணைத் தலைவர்
ஒரு தரம்…
ரெண்டு தரம்…
மூணு தரம்…
போச்சு 65000 கோடி ரூபா
கேள்வி:
நிதித் துறையில் “சிகை திருத்தம்” (Hair cut) என்று பேசப்படுகிறதே. அதுவும் கோடி கோடியாய் அதில் பணம் சம்பந்தப்பட்டிருப்பதாகவும் சொல்லப்படுகிறதே. அது என்ன?
சாதாரணமாக “ஹேர் கட்” என்றால் சிகை திருத்தகங்கள்தான் நினைவுக்கு வரும். ஆனால் இந்த “ஹேர் கட்” வேறு.
வங்கிக் கடன்களில் சிக்கி கடன் கட்டாமல் திவால் ஆகும் நிறுவனங்கள் ஏலத்திற்கு வரும் அதை வாங்க சில நிறுவனங்கள் முன் வருவார்கள். அல்லது “வராக்கடன்களையே பொட்டலமாக்கி” ( Bundling of loans under NPAs) கடன் மேலாண்மை நிறுவனங்களுக்கு விற்பார்கள். இப்படி செய்யும் போது கடன் கொடுத்த வங்கிகளுக்கு முழுத் தொகை வசூலாகாது. ஏற்கெனவே சிக்கலான சொத்துக்கள் என்பதால் அதை வாங்குபவர்கள் பேரம் பேசி ரேட்டைக் குறைப்பார்கள். இப்படி அடி வாங்கும் தொகையையே “ஹேர் கட்” என்கிறார்கள். இது விளக்கம். ஸ்டேட் பாங்க் கல்விக் கடன்களை விலைக்கு ரிலையன்ஸ் வாங்கியது ஒரு உதாரணம்.
இதற்குள் நிறைய கேள்விகள் உள்ளன. உண்மையிலேயே வராக் கடன்கள் வசூலிக்க முடியாதவையா? அவை வழங்கப்படும் போது உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொள்ளப்பட்டனவா? வசூலிக்க என்ன முயற்சிகள் எடுக்கப்பட்டன? “பொட்டல விற்பனை” (Bundling) முறையாக நடைபெறுகிறதா? மக்களின் சேமிப்பு பெரும் கார்ப்பரேட்டுகள், பெரிய மனிதர்களுக்கு மடை மாற்றம் செய்யப்படும் வழி முறையா?
அண்மைய உதாரணத்திற்கு வருவோம். திவான் ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் திவாலாகியதால், திவால் சட்டத்தின் கீழ் பொது ஏலத்திற்கு வந்தது. ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா தலைமையிலான வங்கிகள் ரூ 85000 கோடிகள் கடனை திவான் ஹவுசிங் நிதி நிறுவனத்திற்கு இதுவரை தந்துள்ளன. ஆனால், இப்போது நஷ்டமடைந்து மூடப்பட்ட அந்த நிறுவனத்தை வாங்குவதற்கான ஏலம் உச்சபட்சமாக ரூ 20000 கோடிகளே என்று இந்து பிசினஸ் லைன் (அக்டோபர் 19, 2020) செய்தி தெரிவிக்கிறது. ஆக “ஹேர் கட்” 65000 கோடி ரூபாய்கள் வரை இருக்கும் என்கிறது அச் செய்தி. தலையையே வெட்டி விட்டு தலை முடி திருத்தம் என்று சொல்வது வேடிக்கை அல்ல. சேமிப்பு செய்த மக்களின் வேதனையே.
இந்த ஏலத்தில் பங்கேற்றவர்களில் அதானி குழுமம் உண்டு. பிரமல் எண்டர்பிரைஸ், அமெரிக்காவின் ஒயாக் ட்ரீ, ஹாங்காங் தனியார் வங்கி எஸ்.சி லோவி ஆகிய நிறுவனங்களும் அடங்கும். இந்த ஏலத்தில் “அதிக” தொகைக்கு, அதாவது 20000 கோடி, கூவி இருப்பது “ஒயாக் ட்ரீ” (Oak Tree) ஆகும். அது அதிகமா? ஒயாக் ட்ரீ க்கு கிடைப்பது அதிகமா? என்பது தனிக் கதை. ஒயாக் ட்ரீ மொத்த நிறுவனத்தையே ஏலத்திற்கு கேட்டுள்ளது. மற்ற நிறுவனங்கள் எல்லாம் டி.எச்.எப்.எல் நிறுவனத்தை கூறு கூறாக ஏலம் கேட்டுள்ளன.
அதானி டி.எச்.எப்.எல் மொத்த வியாபார இலாகாவுக்கு மட்டும் ரூ 3000 கோடிக்கு ஏலம் கேட்டுள்ளார். அதன் மதிப்பு ரூ 40000 கோடிகள் ஆகும். பிரமல் எண்டர்பிரைஸ் டி.எச்.எப்.எல் நிறுவனத்தின் சில்லரை வியாபார இலாகாவை ரூ ஏலத்திற்கு 12000 கோடிகளுக்கு கேட்டுள்ளது. எஸ்.சி லோவிஸ் மிகக் குறைந்த தொகைக்கு, அதுவும் நிபந்தனைகளோடு, ஏலம் கேட்டுள்ளது.
டி.எச்.எப்.எல் நிறுவனத்தின் 2.6 லட்சம் ஃபேக் கணக்குகள் (Fake accounts) பிரச்சினை வெடித்ததால் பல அன்னிய முதலீட்டாளர்கள் ஏலத்திற்கு வராமல் ஒதுங்கி விட்டார்கள்.
மொத்தமாக விற்றாலும், கூறு போட்டு விற்றாலும் ரூ 50000 கோடியில் இருந்து ரூ 65000 கோடி வரை “ஹேர் கட்” ஆகி விடும். மக்கள் சேமிப்பு உதிரும் ரோமங்கள் போல ஆகிவிட்டன தவிர வேறென்ன!
இது குறித்து இந்திய வங்கி ஊழியர் கூட்டமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவர் சி.பி.கிருஷ்ணன் இடம் கேட்ட போது அவரின் விளக்கம் கூடுதல் அதிர்ச்சியைத் தந்தது. அதையும் இங்கு தருகிறேன்.
“வாங்கும் நிறுவனங்கள் ஒத்துக்கொள்ளும் முழுத் தொகையும் உடனே வங்கிகளுக்கு வந்து சேராது. இங்கே ரூபாய் 20,000 கோடிக்கு ஏலம் போகிறது என்றால் அதில் ரூபாய் நான்காயிரம் கோடி வரைதான் உடனே வங்கிகளுக்கு கிடைக்கும். மீதம் உள்ள தொகை வட்டி இல்லாமல் ஐந்து தவணைகளாக 5 ஆண்டுகளில் செலுத்தப்படும். மீதமுள்ள 16 ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஈடாக வாங்கும் நிறுவனம் convertible debenture கொடுக்கும். அது பின்னால் பணம் ஆகிறதா இல்லையா என்பதைப் பற்றி முழு தகவல் இல்லை. ஆக உடனடியாகக் கையில் கிடைப்பது சுமார் வெறும் 4 ஆயிரம் கோடி ரூபாய்தான். மற்றதெல்லாம் வருமா வராதா என்று யாருக்கும் தெரியாது. இப்படித்தான் மக்களின் சொத்து பல்லாயிரம் கோடி ரூபாய் சட்டப்படி சூறையாடப்படுகிறது.”
“ஊர் நெய் கார்ப்பரேட்டுகள் கை” என்கிற புது மொழியை நிதித் துறை சொல்லிக் கொண்டிருக்கிறது.
******
செவ்வானம்