பிறப்பில் சாதி
பார்க்கும் நீங்கள்- பெண்
உறுப்பில் சாதி பார்ப்பதில்லையே ஏன்?
உங்கள் தாயிடம் நீங்கள் பால் குடித்த அதே மார்பகங்கள் தானே எனக்கும்.
நீங்கள் பிறந்து வெளிவந்த அதே பெண் உறுப்பு தானே எனக்கும்.
பிறகு ஏன் இத்தனை வக்கிரம்?
பிறகு ஏன் இத்தனை காமவெறி?
விலங்கினும் கீழான ஈனப்பிறவிகளே என காறிஉமிழக்கூட மனமில்லை எனக்கு.
ஏன் தெரியுமா?
எந்த ஒரு விலங்கும் பிற விலங்கின் அனுமதியின்றி அதைப்புணர்வதில்லை.
என்ன பிறவிகளடா நீங்கள்?
சிதைக்கப்பட்ட என் உடலை இருட்டின் துணையுடன் திருட்டுத்தனமாக எரியூட்டக் காரணமென்ன கற்றோரே?
தகிக்கும் என் கண்களை எதிர் கொள்ளும் திராணி அற்றுப் போய்விட்டதா உங்கள் ஆண்டைகளுக்கு?
நியாயவான்களே!
எரிக்கப்பட்டது சிதைக்கப்பட்ட என் உடல் மட்டுமல்ல.
பெண்களை தெய்வமாகவும் பூமாதேவியாகவும் வணங்குவதாக பீற்றிக் கொள்ளும் உங்களது பாழாய்ப்போன பண்பாடும், கருணையே வற்றிப் போன்ற உங்களது கலாச்சாரமும் கூட தான்.
காறி உமிழ்கிறேன் அவற்றின்மீது. துடைத்துக் கொள்ளுங்கள் வெட்கமின்றி.
அன்று பாஞ்சாலி துகிலுரியப்பட்டபோது பாய்ந்து வந்த அந்த பரந்தாமன் எங்கே?
இந்தப் பேதையின் உடல் வல்லூறுகளின் கைகளில் சிக்கிய
கிளியென சிதைத்து வதைக்கப்பட்டபோது வாராமல் போனதேன் அந்த வைகுண்ட வாசன்?
நான் கதறித்துடித்தபோது கேட்க மறந்து போன அந்தக் கடவுள்களின் செவிகள் செவிடாகிப்போகட்டும்.
நான் பதறித்துடித்தபோது
பார்க்க மறந்து போன
அந்தக் கடவுள்களின் கண்கள் குருடாகட்டும்.
கருணை வற்றிப்போய் – வெறும்
கல்லாக மட்டுமே காட்சிதரும் உங்களுக்கு கடவுள்கள் எனும் பெயர் ஒரு கேடா?
காணாமல் போய் விடுங்கள் இனி நீங்கள் எதற்கு?
அடுத்து என்ன செய்வீர்கள்?
கைதுகள் நடக்கலாம்.
வழக்குகள் நடக்கலாம்.
இறுதியில் ஆதாரம் இல்லை என அனைத்துக் கயவர்களும் விடுதலை ஆகலாம்.
இந்த புண்ணிய பூமியில் தான் பலர்
பண்ணிய பாவங்கள் எதற்குமே ஆதாரங்கள் இருப்பதில்லையே?
அது மசூதியை இடிப்பதாக இருந்தால் என்ன?
என் போன்ற மங்கையரை சிதைப்பதாய் இருந்தால் என்ன?
வாழ்க பாரதம்!
வாழ்க பாரத மணித்திருநாடு.
( என் செல்லம்மாவை கொசு கடித்தாலே பதறிப் போகிறேன் நான். மணீஷாவின் தந்தையாக ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கிறேன். எப்படியெல்லாம் துடித்துக் கொண்டிருப்பான் அந்தத் தகப்பன்?
ஒரு பெண் குழந்தைக்கு தகப்பனாக பதறித்துடிக்கும் வக்கற்ற தந்தையாக : செ. சிவகுமார்)