கடந்த சில நாட்களாக சமூக வலைத் தளங்களில் ரஜினிகாந்த் இனிமேல் அரசியலில் ஈடுபடப் போவதில்லை எனவும், தீவிர அரசியிலில் ஈடுபட்டு கொரோனா தாக்கினால் அவர் உயிருக்கே ஆபத்து ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்ததால் இந்த முடிவை அவர் எடுத்திருப்பதாகவும் தகவல்கள் பரவின.
இதையாெட்டி ஊடகங்களைச் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும் ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக் கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும், அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை. இதைப் பற்றி தகுந்த நேரத்தில் என் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து எனது அரசிய்ல் நிலைப்பாட்டைப் பற்றி மக்களுக்குத் தெரிவிப்பேன்.” என்று தெரிவித்துள்ளார்.
சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டிருக்கும் ரஜினிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் அவர் உயிருக்கே ஆபத்து வருமளவு கடுமையாக இருக்கும் என்பதும் உண்மை தான். இந்தச் சூழலில் பாஜக அவரை கட்சி ஆரம்பிக்கச் சொல்லி அதற்கு அண்ணாமலையை முதல்வர் வேட்பாளர் என்று அறிவிக்க வைத்து, தனியாக கூட்டணி அமைத்து, அல்லு சில்லு கட்சிகளைச் சேர்த்து, அதிமுகவைப் பிரித்து ஆட்சி அமைக்கலாம் என்று திட்டமிட்ட விஷயம் பணாலாகிப் போனது.
எனவே, பாஜக இப்போது அந்த ப்ளானை ட்ராப் செய்துவிட்டு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கூட்டணிக் கட்சிகளையும் பிரித்து, நிறைய பணம் கொடுத்து, தனித்தனியாக நிற்க வைத்து ஓட்டுக்களைப் பிரித்து அதில் பல சீட்டுக்களை ஜெயிக்கலாம் என்று கணக்குப் போடுகிறதாம்.
ரஜினியும் தனக்கு சறுக்கினதுதான் சாக்கு என்பது போல இந்த கெரோனா அச்சுறுத்தலை வைத்து தனது அரசியல் பிரவேசத்துக்கு முழுக்குப் போட்டுவிடுவார் என்கின்றன அவருடைய ஆலோசனைக் குழு வட்டாரங்கள். அப்படி ஒருவேளை முழுக்கு போட்டுவிட்டார் என்றால், ரஜினி மக்கள் மன்றங்கள் என்ஜிஓக்கள் போல தன்னார்வு நிறுவனமாகவே தொடர்ந்து செயல்படும். அதில் அரசியல் பதவிக் கனவுகளோடு ஈடுபட்டிருந்தவர்கள் இனி வேறு எந்த அரசியல் கட்சிக்கு தாவுவது என்று யோசிக்க ஆரம்பிப்பார்கள்.