இந்தியன்- 2ஆம் பாகம் , ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்க லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது. இப்படம் 2018 ஆம் ஆண்டே தொடங்குவதாக இருந்து பின்னர், பல்வேறு தடைகள் வந்து ஒருவழியாக 2019 ஆம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியது.
அதிலும் ஏகப்பட்ட தடங்கல்கள் வந்து கொண்டே இருந்தன. கடந்த பிப்ரவரி 19 ஆம் தேதி இந்தியன் 2 படப்பிடிப்புத் தளத்தில் கிரேன் அறுந்து விழுந்து நடந்த விபத்தில் மூன்று பேர் உயிரிழந்தனர். படப்பிடிப்பு தடைபட்டு நின்றது. அதன்பின் தொடர்ந்து கொரோனா பிரச்சனை வந்துவிட்டது.
கடந்த ஆகஸ்ட் சினிமா போஸ்ட் புரொடக்சன் பணிகள் மட்டும் தொடங்கலாம் என்று அரசு அனுமதியளித்ததும் இந்தியன் 2 படத்தின் பணிகளும் தொடங்கின. ஆனால் செப்டம்பர் 1 முதல் படப்பிடிப்பு நடத்தலாம் என்று அரசு அனுமதி அளித்த பின்பும் இந்தியன் 2 படப்பிடிப்பு தொடங்குவதற்கான எந்த அறிகுறிகள் இல்லை.
கமல் மய்யம் வேலைகளில் பிஸியாக இருந்து அவ்வப்போது அறிக்கைகள் விட்டவர் பிக்பாஸ் நிகழ்சிக்கு ஒப்பந்தமானதும் இந்தியன் 2 வை டீலில் விட்டுவிட்டார். ஷங்கர் வயிற்றில் புளியை கரைக்கும் விஷயமாக பிக்பாஸ் வேலைகளுக்கு நடுவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல் ஒப்பந்தமாக புகைப்படப் படப்பிடிப்பு (photoshoot) வேறு நடந்துவிட்டது. நவம்பர் முதல்வாரத்தில் கனகராஜின் படப்பிடிப்பு தொடங்கவிருப்பதாகவும் செய்திகள் கசிந்தன.
ஏற்கனவே டென்ஷனில் இருந்த ஷங்கர், மேலும் கோபமாகி, கமலிடமே நேரடியாக ‘என்ன நடக்கிறது கமல்ஜி? நம்ம படம் என்னைக்கு ஷூட்டிங் போறது’ என்று கேட்க, புரியாமல் பேசியே பழக்கப்பட்ட கமல் ‘இப்போவும் நடத்தலாம், லோகேஷ் எடுத்த பிறகும் நடத்தலாம், பிக்பாஸ் முடிஞ்சப்புறமும் நடத்தலாம், நடக்காமல் அடுத்தவருடமும் நடத்தலாம்’ என்கிற ரீதியில் சுத்திவிட, டென்ஷனின் உச்சத்திற்குப் போன இயக்குநர் ஷங்கர், நேரே லைகா நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டிஸ் அனுப்பியிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இந்த நோட்டீஸில், இந்தியன் 2 படத்துக்காக சுமார் இரண்டரை ஆண்டுகள் உழைத்திருக்கிறேன். இந்தியன் 2 படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு நடத்துவது குறித்து எந்தத் தகவலும் இல்லை. கமல் அடுத்த படத்துக்குப் போய்விட்டார். நான் மட்டும் சும்மாவே உட்கார்ந்திருக்க முடியாது. எனவே இரண்டு வாரங்களுக்குள் இந்தியன் 2 தொடங்குவது குறித்து உரிய விடை கிடைக்கவில்லையென்றால் நான் வேறு படத்துக்குப் போவேன் என்று லைக்காவிடம் லீகலாகவே விளக்கிவிட்டாராம். ஷங்கர் அடுத்தடுத்து வேறு படங்களை இயக்க ஆரம்பிக்க இந்த நடவடிக்கை அவருக்கு தேவையாகிவிட்டது.
லைக்கா காரர்களிடம் கொட்டிக் கிடக்கும் பணத்திற்கு அவர்கள் ஷங்கரை கூப்பிட்டு இன்னும் கொஞ்சம் சமரசம் பண்ணினால் எல்லாம் ராசியாகிவிடக் கூடும். அடுத்த வருடமே படம் ரெடியாகிவிடும். கமல் தான் அதற்கு மனது வைக்கவேண்டும்.
தேர்தல் வேறு வருகிறது. கமல் மனதில் என்ன கணக்கு வைத்திருக்கிறாரோ?