இதுதொடர்பாக சரவணன் மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி காலியாக உள்ள 12 பணியிடத்தில் சரவணனுக்கு ஒரு இடத்தை வழங்க உத்தரவிட்டிருந்தார். இதனை எதிர்த்து மத்திய அரசு தரப்பில் மேல்முறையீடு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு இன்று நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது,
“மாநிலங்களில் பணியமர்த்தப்படும் அதிகாரிகள் அம்மாநில மக்களுடன் தகவல் தொடர்பு கொள்ளும் வகையில் அப்பகுதி மொழியை அறிந்திருக்க வேண்டும். ஆனால் அவற்றில் தேவையற்ற பல அரசியல் நகர்வுகள் உள்ளன.
வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இந்தி மொழியில் தேர்ச்சி பெற இயலாத நிலையில் தமிழ் மொழியில் அதிக மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று பணிகளில் அமர்வது எப்படி என தெரியவில்லை. இதுதொடர்பாக நீதிமன்றம் கேள்வி எழுப்பினால் கொள்கை முடிவு அதில் நீதிமன்றம் தலையிட இயலாது எனக் கூறப்படுகிறது.
இந்தியாவிற்குள் வசிப்பவர்கள் மத்திய அரசு பணிகளுக்கான தேர்வு எழுதி எங்கு வேண்டுமானாலும் பணியில் சேரட்டும். ஆனால் தேர்வு முறையில் நேர்மையும், வெளிப்படைத் தன்மையும் தேவை. தமிழகத்தில் மின் வாரியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேறு மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பலர் பணியமர்த்தப்பட்டுள்ளனர். உள்ளூர் மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். இதற்கு தமிழக அரசே பொறுப்பேற்க வேண்டும்”
எனத் தெரிவித்தனர்.
மேலும், ஆயுத தொழிற்சாலை பணியிடத்திற்கு நடைபெற்ற எழுத்துத் தேர்வின் விடைத்தாள்கள், முடிவு வெளியான மூன்று நாட்களுக்குள் அழிக்கப்பட்டதாக மனுதாரர் தரப்பில் குறிப்பிடப்படுகிறது. நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்பட்ட 178 பேரின் விடைத்தாள்கள் உள்ளனவா? இல்லையா?
மனுதாரர் குறிப்பிடுவது போல் அவை அழிக்கப்பட்டு இருந்தால், அதற்கான அவசியமும் தேவையும் என்ன? பணியிடத்திற்கான நியமனம் எதன் அடிப்படையில் நடைபெற்றது? என்பது குறித்து நீலகிரி ஆயுத தொழிற்சாலையின் பொது மேலாளர் பதிலளிக்கவேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை அக்டோபர் 12-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.
இது நாள் வரை தமிழ்நாட்டில் பல்வேறு அமைப்புக்கள் மத்திய அரசின் வேலைகளில் தில்லுமுல்லுகள் செய்து தமிழ்நாட்டு இடங்களை வட இந்தியர்கள் ஆக்கிரமிப்பு செய்வது பற்றி போராடிவந்த நிலையில் நீதிமன்றமே இதுபற்றி இப்போது மத்திய அரசை நோக்கி கேள்வி எழுப்பியுள்ளது.