தியேட்டர் முதலாளிகளின் எதிர்ப்புக்கு பணிந்து நான்கு வாரங்கள் கழித்தே இணையங்களில் வெளியிடப்படும் என்று ஒப்புக்கொண்டதால் ‘தலைவி’பட ரிலீஸ் பஞ்சாயத்து ஒரு வழியாக முடிவுக்கு வந்தது.
கங்கணாரணாவத் நடிப்பில் உருவாகியுள்ள தலைவி படம் முன்னாள் முதல்வர் செயலலிதாவின் வாழ்க்கைக் கதையை அடிப்படையாகக் கொண்டது. தொடர்ந்து பிடிவாதமாக மிகமிக சுமாரான படங்களையே இயக்கிவரும் ஏ.எல்.விஜய் இப்படத்தை இயக்கியுள்ளார்.
இப்படம் செப்டம்பர் 10 ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.அதோடு திரையரங்குகளில் படம் வெளியாகி இரண்டு வாரங்கள் கழித்து இணையத்தில் வெளியிடவும் படக்குழு முடிவு செய்திருந்ததாம். ஏனெனில் இப்படம் திரையரங்குகளில், இயக்குநரின் மற்ற படங்களைப் போல் இரண்டு வாரங்களுக்கு மேல் ஓடாது என்று படக்குழு நிச்சயமாக நம்புகிறதாம்.
ஆனால், இதற்கு திரையரங்கு உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
திரையரங்குகளில் வெளியாகும் படங்களை நூறுநாட்கள் கழித்துத்தான் இணையத்தில் வெளியிடவேண்டும் என்பது திரையரங்கு உரிமையாளர்களின் கோரிக்கை.அதன்பின், குறைந்தது ஐம்பது நாட்கள் இடைவெளியாவது வேண்டும் என்று சொல்லிக்கொண்டிருந்தனர்.
இப்போது இந்தப்படத்துக்காக மேலும் இறங்கிவந்து நான்கு வாரங்கள் கழித்து இணையத்தில் வெளியிடுங்கள் என்று கேட்கிறார்களாம்.ஆனால் இரண்டு வாரங்களில் வெளியிடும் முடிவில் படக்குழு உறுதியாக இருந்ததாம். அப்படியானால் படத்தைத் திரையரங்குகளில் வெளியிடமாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சொல்லிவிட்டனர்.
இதனால், நேற்று நடந்த பஞ்சாயத்துக்குப் பின்னர் திரையரங்குகளில் வெளியாகி நான்கு வாரங்களுக்குப் பிறகே தலைவி படத்தை இணையத்தில் வெளியிடுவோம் என தலைவி படக்குழு உறுதிமொழிக் கடிதம் கொடுத்திருக்கிறதாம். இதனால், அறிவித்தபடி செப்டம்பர் 10 ஆம் தேதி இப்படம் வெளியாகவிருக்கிறது.
ஸோ எம்.ஜி.ஆரை அரவிந்த் சாமி கோலத்தில் பார்க்கிற கொடுமையிலிருந்து நீங்க 10ம் தேதிக்கு மேல தப்பவே முடியாது.