திவ்யாவின் இயக்கத்தில் ஊடகமையம் வழங்கும் கக்கூஸ் என்கிற ஆவணப்படம் மனதை அழுத்தும் ஒரு படம். அன்றாடம் நமக்கு சாதாரணமாகத் தெரியும் மனிதக் கழிவு அகற்றுதலை பரம்பரை பரம்பரையாகத் தொழிலாக அருந்ததியரும், சக்கிலியரும், காட்டு நாயக்கர் போன்ற மலைசாதியினரும் மட்டுமே செய்து வருவதையும், அவர்கள் வாழ்க்கை மேம்படவே வாய்ப்பில்லாமல் செய்யும் இந்த முதலாளித்துவ அரசுகளையும் தோலுரிக்கிறது இந்தப் படம்.
இறுதியில் வரும் பாடல் அவர்களுடைய ஆங்காரத்தை உரத்து ஒலிக்கிறது. அவர்களுக்கு வீடு தரக்கூட யாரும் முன்வருவதில்லை. அவர்களுக்கு திருமணத்திற்கு பெண் தருவதில்லை. இப்படியொரு சமூகத் தீண்டாமை மலம் அள்ளுபவர்களின் வாழ்க்கையில் இன்றும் தொடர்கிறது.
இதைவிடக் கொடுமை, நீதிமன்றங்கள் பலமுறை வன்முறையாகக் கண்டித்தும் இன்னும் கையால் மனிதமலத்தை இவர்கள் அள்ள நிர்ப்பந்தப்படுத்தப்படுகிறார்கள். எந்தவித சுகாதாரப் பாதுகாப்பும் இன்றி இவர்கள் பணிபுரியும் நிலையோ மிகக் கொடூரமான ஒரு சமூகத்தை நமக்கு காட்டுகிறது.
படத்தை பார்த்தாலே அவர்களின் வாழ்க்கையில் பூசப்பட்ட மலத்தின் அறுவெறுப்பு நம் மனதில் ஏறும். இனியாவது மலம் அள்ளுபவர்களை கேவலமாக நினைக்காத மனிதனாக ஒருவேளை நீங்கள் மாறக்கூடும்.