கன்னட நடிகை சோனியா அகர்வால் வீட்டில் போதைப்பொருள் சிக்கிய விவகாரத்தில் தன் படங்களை பரப்பிய ஊடகங்கள் மீது வழக்கு தொடர போவதாக தமிழ் நடிகை சோனியா அகர்வால் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
உண்மையான நடிகை இன்னார் என்று தெரிந்தும் கூட தன் படத்தை இணைத்து செய்தி போட்டால் அதிகம் பேர் படிப்பார்கள் என்ற குறுக்கு புத்தி கொண்ட ஃபிராடு ஊடகங்களே அவ்வாறு செய்தி வெளியிட்டதாகவும் அவர் பொறுமியுள்ளார்.
ஒரு செய்தியின் உண்மைத்தன்மை குறித்து ஆராயாமல் எப்படி என் புகைப்படத்தை பயன்படுத்தினீர்கள். தவறான உங்களின் செய்தியால், காலை முதல் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் மூலம் எனக்கும் என் குடும்பத்துக்கும் மன உளைச்சல் ஏற்பட்டது என்று மிகவும் கோபத்துடன் கூறினார்.
வீட்டில் கஞ்சா பதுக்கி வைத்திருந்த குற்றத்திற்காக, பிரபல கன்னட நடிகை சோனியா அகர்வால், அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம், திரையுலகினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சோனியா அகர்வால் என ஒரே பெயரைக் கொண்டிருப்பதால் ஊடகங்கள் பலவும் 7ஜி ரேயின்போ காலனி நடிகை சோனியா அகர்வாலின் வீட்டில் போதைப் பொருட்கள் சிக்கியதாகச் செய்திகள் வெளியிடப்பட்டன. இதனால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இந்த சம்பம் குறித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார் சோனியா அகர்வால், போதைப்பொருள் கடத்தலில் சோனியா அகர்வால் வீட்டில் சோதனை என்றதும், கொஞ்சம் கூட விசாரிக்காமல் இந்த செய்தியின் உண்மைத் தன்மை அறியாமல் என் புகைப்படத்தை பயன்படுத்தி உள்ளார்கள். ஒரு செய்தி வந்தால் அது குறித்து ஆராய மாட்டீர்களா என்று கோபமாக கேட்டார். நான் கேரளாவில் படப்பிடிப்பில் இருக்கிறேன். போதைப்பொருள் வழக்கு தொடர்பான இடைவிடாத கேள்விகளும், தொடர்ந்து வந்த தொலைபேசி அழைப்புகளாலும் தான் மிகவும் வேதனைக்கு ஆளானதாக கூறினார்.
மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில், என் மீது அவதூறு பரப்பியதற்காவும், காலை முதல் தொடர்ந்து தொலைபேசி அழைப்புகள் மற்றும் குறுந்தகவல்கள் மூலம் எனக்கும் என் குடும்பத்துக்கும் மன உளைச்சல் மற்றும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதற்காவும் சம்பந்தப்பட்ட ஊடகங்கள் மற்றும் செய்தியாளர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க உள்ளேன் என்று சோனியா அகர்வால் கூறினார்.
போதை பொருள் விவகாரம் மீண்டும் சூடுபிடிக்க துவங்கியுள்ள நிலையில், அடுத்தடுத்து பல பிரபலங்கள் போதை பொருள் வைத்திருப்பதற்காக கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அந்த வகையில், கடந்த சனிக்கிழமை அன்று, தடை செய்யப்பட்ட போதைப்பொருளான கோகெய்ன் வைத்திருந்த குற்றத்திற்காக பாலிவுட் நடிகர், அர்மான் கோலி என்சிபி அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்தது வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்ட போதைப்பொருள் என்பதால் இது எப்படி அவருக்கு கிடைத்தது? வெளிநாட்டில் இருந்து கடத்திவரும் கும்பல் பற்றி ஏதாவது தகவல் கிடைக்குமா என்கிற கோணத்தில் விசாரணை நடத்தி வருவதாக கூறப்பட்டது.
கன்னட நடிகை சோனியா அகர்வால் வீட்டிலிருந்து சுமார் 40 கிராம் அளவிற்கு கஞ்சா இருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து இவரை போலீசார் கைது செய்துள்ளனர். விஸ்வரூபம் எடுத்து வரும் போதை பொருள் விவகாரம் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.