இந்த கடிதத்தை எப்படி ஆரம்பிப்பது
மிஸ்டர் ஜேம்ஸ் வசந்தன் ?
=====================
நீண்ட நேரம் யோசித்துக் கொண்டிருந்தேன். கடிதத்தை எப்படித் துவக்குவது? நலம் விசாரிப்புகளுக்கு முன்பு அன்பு என்று எழுதுவதா, மரியாதைக்குரிய என்று எழுதுவதா என்ற பெரும் குழப்பம்.
நான் எழுதப்போவது இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தனுக்கு. முன் பின் அறிமுகம் இல்லாதவர் பிறகு எப்படி கடிதத்தை எழுதுவது? இருந்தாலும் அறிமுகம் இல்லாத பலருக்கு உயர்வு நவிற்சி அணியுடன் பல கடிதங்கள் மகளுக்கு பள்ளிப் பாடத்திற்கு எழுதித் தந்துள்ளேன்.
எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு நாளில் இசைஞானி சம்பந்தமாக ஜேம்ஸ் வசந்தன் வெளியிட்ட பதிவு, அறிமுகமில்லாத அவருக்கு அன்புள்ள என கடிதத்தை ஆரம்பிக்க பெரும் மனத்தடையாக மாறி விட்டது.
இந்த உலகில் அனைவரின் மீதும் அன்பும், பெருங்கருணையும் கொண்டவன் என்ற முறையில் அப்படித்தான் நான் கடிதத்தை ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், அதை விட இசைஞானி மீது உள்ள அளப்பறிய காதலால், என்னால் பொய்யாய் கடிதத்தை எழுத முடியவில்லை.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் 15க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்த ஒரு இசையமைப்பாளர் என்ற முறையில் ஸார் என்றே கடிதத்தைத் துவக்கி விடலாம்.
ஜேம்ஸ் வசந்தன் ஸார் எப்படியிருக்கீங்க? உங்களது யூ டியூப் சேனல் வேலை எப்படி போய்க் கொண்டிருக்கிறது. ஒரு காலத்தில் கு.ஞானசம்பந்தன் ஐயா, கவிஞர்கள் குறித்து ஒரு ஜோக் அடிப்பார்.
“கவிதை படிக்கிறவங்கள விட கவிதை எழுதுறவங்க எண்ணிக்கை அதிகமாச்சியிடுச்சு” என்று கலாய்ப்பார். அது போல இப்போது யூடியூப் பார்ப்பவர்களை விட யூடிப்பர்கள் பெருகி விட்டார்கள். எல்லாம் காலக்கிரகம்.
உங்களுடைய இசையமைப்பில் வெளியான முதல் படமான ‘சுப்பிரமணியபுரம்’ படத்தை பத்திற்கும் மேற்பட்ட முறை நான் பார்த்து ரசித்திருக்கிறேன். காதல், துரோகம் என்பதைத்தாண்டி மதுரையை மையப்படுத்திய கதை என்பதை விட இப்படத்தில் இடம் பெற்ற பரமன் (ஜெய்)கேரக்டர், நான் வாழ்ந்த புதூர் பகுதியில் வாழ்ந்த மனிதனுடைய கதை என்பதால் படத்தின் மீதான ஈர்ப்பு அதிகமானது.
இப்படத்தில் உங்கள் இசையில் ஒலித்த,
கண்கள் இரண்டால் உன் கண்கள் இரண்டால்
என்னை கட்டி இழுத்தாய் இழுத்தாய் போதாதென
சின்ன சிரிப்பில் ஒரு கள்ளச் சிரிப்பில்
என்னை தள்ளி விட்டு தள்ளி விட்டு மூடி மறைத்தாய்…
என்ற பாடல் இன்றுவரை என்னால் மறக்க முடியாது. ஏனெனில், இதன் பின் நீங்கள் இசையமைத்த படங்களில் எந்த பாட்டும் மனசில் நிற்கவேயில்லை.
பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் நினைவு நாளை(செப்டம்பர் 25) முன்னிட்டு இசைஞானி வெளியிட்ட வீடியோவில், தனக்கும், பாலுவிற்கும் இருந்த உறவைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பேசியிருந்தார். அதைப் பார்த்து எல்லோரும் கண் கலங்கி விட்டனர்.
ஆனால், அதை விமர்சித்து செய்து நீங்கள் போட்ட பதிவு தான் இந்த கடிதத்தை உங்களுக்கு எழுத காரணமாகி விட்டது.
எஸ்பிபி உயிரோடு இருந்த போது என்னென்னமோ பேசி விட்டு, இறந்த பிறகு, இப்போ என்ன வேண்டிக்கிடக்குது என்ற ரீதியில் ராஜா குறித்த உங்களது இங்கிதமில்லாத பதிவு பலரைக் காயப்படுத்தி விட்டது. இதற்காக அவர்கள் உங்களைப் பற்றி தனிப்பட்ட முறையில் விமர்சனங்களை சமூக வெளியிலும், பொதுவெளியிலும் வைத்தனர்.
இசைஞானியின் பழைய பேச்சை இப்போது நீங்கள் நினைவுபடுத்தியதைப் போல, உங்கள் மீதான பெண் புகார்களை அவர்கள் இப்போது நினைவுப்படுத்தியதை என்னால் ஏற்க முடியவில்லை. யாருடைய தனிமனித வாழ்க்கையிலும் தலையிட சம்பந்தப்பட்டவர்களைத் தவிர வேறு யாரும் தலையிட உரிமையில்லை. உங்கள் உரிமை. உங்கள் தண்டனை. அவ்வளவு தான்.
எஸ்பிபி நினைவு நாளில் ராஜா குறித்த உங்களது பதிவு பெரும் குழப்பத்தை எனக்கு ஏற்படுத்தி விட்டது.
உங்களுக்கு பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் மீது அப்படி என்ன காதல்?
எஸ்பிபியிடம் ராஜா காப்புரிமை கேட்ட விஷயத்தை, அவரது நினைவு நாளில் நீங்கள் நினைவுபடுத்துவதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் ? ராஜா மோசமானவர் என்ற பிம்பத்தைக் கட்டமைப்பது தானே?
1969ம் ஆண்டிலிருந்தே இசையமைப்பாளர்கள், பாடலாசிரியர்களுக்கான காப்புரிமைக்கான இந்தியன் பெர்பார்மிங் ரைட் சொசைட்டி உள்ளது. இது பற்றிய எந்த அறிவும் இல்லாமல், தனது உரிமையைக் கேட்ட ராஜாவை ஏதோ அவர் மட்டும் தான் பாடலுக்கான ஒட்டு மொத்த ஏகபோக உரிமை கொண்டாடுவதாக இட்டுக்கட்டி பலர் எழுதினர். மறந்தும் இந்த தொகையைப் பெற்றுக் கொண்டிருக்கும் மற்ற இசையமைப்பாளர்கள் ராஜாவிற்கு ஆதரவாக வாய் திறக்கவில்லை. ஏன் இந்த பாடலாசிரியர்கள் கூட கமுக்கமாக இருந்து கொண்டனர்.
பாடலாசிரியர், இசையமைப்பாளருக்கான காப்புரிமை என்பது அவர்களது உரிமை. தனது பங்கிற்கு தனது உரிமையை ராஜா கேட்டது அவரது உரிமை.
அதை எஸ்பிபி இறந்து ஒரு வருடமான பின்பும் ராஜா மீது களங்கத்தை சுமத்த வேண்டும் என அவரது நினைவு நாளைப் பயன்படுத்தி பதிவொன்றை வெளியிடுகிறீர்கள். அப்படியென்ன எஸ்பிபி மீது உங்களுக்கு இத்தனை ப்ரியம், கிறக்கம் ?
உங்கள் இசையமைப்பில் எஸ்பிபி எத்தனை பாடல்களைப் பாடியுள்ளார் ? நான் பட்டியலிடவா ஜேம்ஸ் வசந்தன்?
சினிமா உலகில் 2008ம் ஆண்டு நீங்கள் நுழைந்த சுப்ரமணியபுரத்தில் மொத்தம் 5 பாடல்கள். அதில் எத்தனை பாடல்களை எஸ்பிபியை பாட வைத்தீர்கள் மிஸ்டர் ஜேம்ஸ் வசந்தன் ? ஒரு பாடலைக் கூட எஸ்பிபி பாட நீங்கள் வாய்ப்பு வழங்கவில்லை.
2009ம் ஆண்டு பாண்டியராஜ் இயக்கிய பசங்க படத்தில் இடம் பெற்ற நான்கு பாடல்களில் எஸ்பிபிக்கு நீங்கள் வாய்ப்பளித்தீர்களா? இல்லையே…
2010ம் ஆண்டு நாணயம் என்ற தெலுங்கு படத்தில் இசையமைத்தீர்கள். 6 பாடல்களில் ஒரே ஒரு பாடலைத்தானே எஸ்பிபிக்கு பாட வாய்ப்பளித்தீர்கள். அதே ஆண்டு வெளியான போலீஸ் குவார்ட்டர்ஸ் படத்தில் 5 பாடல்களில் ஒரு பாடலையும் எஸ்பிபி பாடவில்லையே?
2010 மார்ச் மாதம் வெளியான யாதுமாகி படத்தில் 5 பாடல்கள். அதிலாவது ஒரு பாடலை எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாட வாய்ப்பளித்தீர்களா ? அதே ஆண்டு டிசம்பர் மாதம் வெளியான ஈசன் படத்திலாவது பாடியிருக்கிறாரா எஸ்பிபி. ஊஹீம்.
இப்படத்திற்கு அடுத்து வந்த( வந்துச்சா?) மருதவேலு படத்தில் உங்கள் இசையில் 5 பாடல்கள் இடம் பெற்றன. அதிலும் ஒரு பாடலையும் எஸ்பிபியை பாட விட்டீர்களா?
2012ம் ஆண்டு வெளியான பாகன் படத்தில் 5 பாடல்கள். இதிலாவது எஸ்பிபி பாடியிருக்கிறாரா எனப் பட்டியலைப் பார்த்தால் ஒரு பாடலையும் அவர் பாடவில்லை.
2013ம் ஆண்டு வெளியான புத்தகம் படத்தில் உங்கள் இசையில் 5 பாடல்கள் இடம் பெற்றன. அதிலும் ஒரு பாடலையும் எஸ்பிபி பாடவில்லை. இதே ஆண்டு தமிழ், தெலுங்கில் வெளியான தாளம் படத்தில் எத்தனை பாடலைப்பாட எஸ்பிபிக்கு வாய்ப்பளித்தீர்கள் ஜேம்ஸ் வசந்தன்? விழா படத்தில் 6 பாடல்கள். எஸ்பிபி பாடிய பாடல் இவற்றில் ஒன்றுமில்லை தானே?
2014ம் ஆண்டு மலையாளத்தில் நீங்கள் இசையமைத்த படத்தில் 8 பாடல்கள் இடம் பெற்றன. அதில் ஒன்றைக்கூடவா எஸ்பிபி பாட திறமையில்லாமல் இருந்தார் ?
மணிவண்ணன் இயக்கத்தில் வெளியான நாகராஜசோழன் எம்.ஏ எம்எல்ஏ படத்தில் ஐந்து பாடல்கள், சண்டமாருதம் படத்தில் 4 பாடல்கள், 2015ம் ஆண்டு வெளியான வானவில் வாழ்க்கை படத்தில் 17 பாடல்கள், 2018ம் ஆண்டு வெளியான அழகு மகன் படத்தில் 4 பாடல்கள், அதே ஆண்டு நீங்கள் இயக்கி இசையமைத்த ஓ ஆனந்த நாட்கள் படத்தில் 5 பாடல்கள். இவற்றில் ஏதாவது ஒரு படத்தில் எஸ்பிபி பாடினாரா மிஸ்டர் ஜேம்ஸ் வசந்தன்? இல்லையே? பிறகு என்ன எஸ்பிபிக்கு நீங்கள் தான் அத்தாரிட்டி போல சீன் காட்டுகிறீர்கள்?
ஆனால், இசைஞானி இசையமைத்த நூறு சதவீத பாடல்களில் 40 சதவீத பாடல்களைப் பாடியவர் எஸ்.பி.பாலசுப்ரமணியம். 1976ம் ஆண்டு பாலூட்டி வளர்த்த கிளி படத்தில் ராஜா இசையில் முதல் பாடல் பாடிய எஸ்பிபி, 2019ம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான தமிழரசன் வரை எத்தனை ஆயிரம் பாடல்களைப் பாடியுள்ளார் என்பது எல்லோருக்கும் தெரியும்.
ஒருவர் இறப்பில் தான்
துவங்குகிறது
அவர் வாழ்ந்த வாழ்வு…
என்றோ நான் எழுதிய இந்த கவிதையை இந்த நேரத்தில் யோசித்துப் பார்க்கிறேன். இசையமைப்பாளர் தோழர் எம்.பி.ஸ்ரீனிவாசன் என்ற மகாகலைஞன் துவக்கி வைத்த காப்புரிமையை, அவர் படங்களில் பாடல்களைப் பாடிய எஸ்.பி. பாலசுப்ரமணியம் அறியாமல் இருந்தார் என்று எண்ணுவது எத்தனை பேதமையோ, அதிலும் சற்றிலும் குறைவில்லாதது எஸ்பிபி நினைவு நாளில் இசைஞானி குறித்த நீங்கள் எழுதிய பதிவும்.
ஒருவன் இறந்து விட்டால் அவனைப்பற்றிய மதிப்பீடுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?
மகாத்மாவை கொலை செய்த கோட்சேவை பற்றிய உங்கள் அபிப்பிராயம் இப்போது என்ன? அதற்கான எஸ்பிபியை கோட்சேவுடன் ஒப்பிடுகிறேன் என்ற தப்புக்கணக்கு போடாதீர்கள் ஜேம்ஸ் வசந்தன்.
காப்புரிமை குறித்த ராஜாவின் கோரிக்கை இன்றும் ஏற்றுக்கூடியது. அதற்காக அவர் எஸ்பிபி மீது கொண்ட கோபம் நியாயமானது. அதனைத் தாண்டி அவர்களிடையே உறவு புனிதமானது. அதை உடைத்துப் பார்க்க நினைத்த உங்கள் குயுக்தி பரிகாசத்திற்குரியது.
காய்ந்த மரம் கல்லடிபடும். வலியைப் பொறுத்தே மீண்டும் பழங்களை படைக்கும். மனிதருக்குக் கொடுக்கும். அது போலத்தான் ராஜா மீது சேற்றை வாரி இறைத்த உங்கள் பதிவும். அதையொட்டி உங்களுக்கு கிச்சு மூச்சுட்ட உங்கள் பதிவை சமூக ஊடங்களில் வெளியிடப்பட்ட உங்கள் அடிப்பொடிகளின் பதிவுகளும்.
அந்த சேற்றையெல்லாம் ஒட்டுமொத்தமாய் ராஜா ரசிகர்கள் சேகரித்துக் கொண்டிருக்கிறோம். அவற்றைக் கொண்டு வெறுப்புக்காட்டில் தனித்து அலையும் உங்களைப் போன்றோர் தாகம் தீர்க்க குவளைகளைக் கட்டாயம் தயார் செய்வோம். ஏனெனில், பகைவனுக்கருள்வாய் என்பது தான் ராஜாவின் பழக்கம்.
அவர் குறித்த பதிவை நீங்கள் அழித்து விட்டாலும் அதற்கான எண்ணம் உங்களுக்குத் தோன்றியதே ராஜா மீதான உங்கள் மன அழுக்கின் அடையாளத்தை வெளிச்சம் போட்டுக் காட்டி விட்டது.
பரபரப்புகளுக்கு பஞ்சமில்லாமல் வாழ நினைக்கிறீர்கள். ஆயினும் எதிர்வினைகளை எதிர்கொள்ள பழகுங்கள் மிஸ்டர் ஜேம்ஸ் வசந்தன். பதிவைப் போட்டு அழித்து விட்டு ஓடாதீர்கள். தட்ஸ் ஆல்.
இப்படிக்கு,
ராஜாவின் கோடிக்காண ரசிகர்களில் ஒருவன்.
முகநூலில்-… ப.கவிதா குமார்.
ஒரு நல்ல நட்புக்கு அடையாளமே திடீர் கருத்துவேறுபாடுதான். அதே நல்ல நட்பில் ஆழமான அன்பிருந்தால் பிரிந்தவர்களை அதுவாகவே சேர்த்துவைத்துவிடும், எவரது பஞ்சாயத்தும் இல்லாமல். அப்படித்தான் பாலுவும் ராஜாவும்
அன்புத்தோழர்…. ஒரு குழந்தை அழகாகவும், வசீகரமாகவும் இருக்கிறது என்பதால் ரோட்டில் போகும் பலரும், பார்க்குமிடத்திலெல்லாம் கொஞ்ச நேரம் கையில் வாங்கிக் கொஞ்சுவதைப் பார்த்திருக்கிறீர்களா? அப்படித்தான் நானும் “கண்கள் இரண்டால்” பாடலை இன்றுவரையிலும் கொஞ்சிக் கொஞ்சி மகிழ்கிறேன். இதைப் பார்க்கும் போது அந்த குழந்தையின் பெற்றோருக்கு ஏக மகிழ்ச்சி உண்டாகும்தானே? அதே மகிழ்ச்சி திரு.ஜேம்ஸ் வசந்தனுக்கு உளப்பூர்வமாக உண்டாக வாய்ப்பே இல்லை. ஏனெனில், அந்த குழந்தையின் உண்மையான அப்பா திரு.இளையராஜா அவர்கள். பலபல ஆண்டுகளுக்கு முன்னால் வெளிவந்த ‘கவிக்குயில்’ படத்தில் ராஜா ஏங்கித் தவமிருந்துப் பெற்றெடுத்த பிள்ளையான “சின்னக் கண்ணன் அழைக்கிறான்..” என்பதில் இருந்துதான் அதன் டிஎன்ஏ-வைத் திருடித்தான் “கண்கள் இரண்டால்..” என்று கைகால்களை ஒட்டி தெருவெங்கும் உலவி விட்டார் இந்த வசந்தன். குறிப்பாக அந்த புல்லாங்குழலிசையைக் கூட மாற்றாமல் அப்படியே அப்பட்டமாக கம்போஸ் செய்திருப்பார். மாற்றம் செய்திருக்கும் பட்சத்தில் அப்பாடலின் ஜீவன் செத்துப்போயிருக்கும். ஆமாம் அது ஒரு ஜீனியஸின் உருவாக்கம். சிதைத்தால் சின்னாபின்னமாகிவிடும்.
இத்தனை இருந்தும் இதுபற்றி பொதுவெளியிலோ, அல்லது தனது நண்பர்களிடத்திலோ ராஜா ஒருவார்த்தை கூட பேசியதாக எனக்கு நினைவில்லை. ஒருமுறை குமுதத்தில் “உங்கள் பாடலை ஹிந்தி உள்ளிட்ட பல மொழி இசையமைப்பாளர்கள் காப்பியடிப்பதை ஏன் கண்டுகொள்வதில்லை?” என ராஜாவிடம் கேட்க, அவரோ..”மனதை சுத்தப்படுத்தவே நேரம் சரியாக இருக்கிறது” என்று பதிலுரைத்தது நினைவிருக்கிறது. ஜேம்ஸ் வசந்தன் அந்த காரியத்தை முழுநேரப்பணியாகச் செய்யவேண்டிய நேரமிது.
பீப் சாங் தொடர்பாக ராஜாவின் கோபத்தில் பலரும் குளிர் காய்ந்தபோது, அவர்களோடு சேர்ந்து தனது வன்மத்தை மிக லாவகமாக வெளிப்படுத்திய வக்கிர புத்திக்கு சொந்தமானவர்தான் இவர் என்பதை இங்கே குறிப்பிட வேண்டியிருக்கிறது.