வோர்ஸ் பிக்சர்ஸ் என்ற பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் பொன். புலேந்திரன் மற்றும் மைக்கேல் ஜாக்சன் இணைந்து தயாரித்திருக்கும் திரைப்படம் ‘அடங்காமை’
இதில் புதுமுக நடிகர் சரோன், அறிமுக நடிகை பிரியா, நடிகர்கள் கார்த்திகேயன், யாகவன், முகிலன், கணேஷ், ராஜா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இப்படத்திற்கு கதை, திரைக்கதையை எழுதி இயக்கியிருக்கிறார் ஆர். கோபால். பி.ஜி.வெற்றி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்திற்கு கீயூரன் மென்டிசன், எம்.எஸ்.ஸ்ரீகாந்த் ஆகிய இருவர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். ஏ.ரமணிகாந்த், ஹெரால்ட் மென்டிஸன் ஆகியோர் பாடல்களை எழுதி இருக்கிறார்கள்.
இப்படத்தின் இசை வெளியீடு சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் திரைப்படத் தயாரிப்பாளர் கே ராஜன் பேசும்போது, “தமிழகத்தில் தயாராகும் திரைப்படத்திற்குத் தமிழில் பெயர் வைத்தால் சலுகைகள் வழங்கப்படும் என்ற திட்டம் கலைஞரின் ஆட்சிக் காலத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. அந்தத் திட்டம் மீண்டும் தற்போது நடைமுறைப்படுத்த வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.
அவர் இது குறித்துப் பேசும்போது, “தமிழில் ஏராளமான தலைப்புகள் உள்ளன. பிற மொழிகளுக்கும் தமிழிலிருந்து தலைப்புகளைத் தாராளமாக அள்ளித் தரலாம். திருக்குறள், கம்பராமாயணத்திலிருந்து ஏராளமான தலைப்புகளை எடுத்து கையாளலாம். கண்ணதாசனின் பாடல்களிலும் தலைப்புகள் கிடைக்கும். இதையெல்லாம் தவிர்த்து, ஆங்கிலத்தில் தலைப்பு வைப்பது ஏன்..? ஆங்கிலத்தில் தலைப்பை தேடுவது ஏன்..? ஆங்கிலத்தில் ஒரு படத்தின் தலைப்பை வைத்தால் அந்தப் படம் ஐநூறு நாள் ஓடுமா..?
டாக்டர் கலைஞர் அவர்கள் இதற்கு ஒரு அற்புதமான திட்டத்தை முன்மொழிந்தார். தமிழில் பெயர் வைத்தால் மானியம் தருவேன் என அறிவித்தார். பல தயாரிப்பாளர்கள் இந்த சலுகையைப் பெறுவதற்காக தமிழில் பெயர் சூட்டினார்கள். ஆட்சி மாறியதும் இது பெரிதாக வலியுறுத்தப்படவில்லை.
திரைப்படத்திற்கு தமிழில் பெயர் வைக்கத் தெரியாதவன் மடையன். கல்வியறிவு இல்லாதவன். ஆங்கிலத்தில் பெயர் வைத்தால் அதை எதிர்த்து நான் போராடுவேன். ஆங்கிலத்தில் படத்தின் தலைப்பை வைப்பவர்களை நான் வருத்தத்துடன் கண்டிக்கிறேன்.
கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய தமிழில் பெயர் வைத்தால் சலுகை வழங்கப்படும் என்ற திட்டத்தை மு. க .ஸ்டாலின் தலைமையிலான அரசு மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். இதனை ஒரு வேண்டுகோளாகச் சமர்ப்பிக்கிறேன்.
சினிமா கலைஞர்களின் வழிவந்த வாரிசான முதல்வர், திரைத்துறை வளமுடன் செயல்படுவதற்கான உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். குறிப்பாக சிறு முதலீட்டு படங்கள் வெளியாவதில் உள்ள சிக்கல்களைக் குழு அமைத்து களைய வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்” என்றார் தயாரிப்பாளர் கே.ராஜன்.