இன்று தமிழ் சினிமாவில் எழுத்தாளராகப் புழங்கிக்கொண்டிருக்கும் ஒரே ஆசாமி ஸாரி ஆசான் திருவாளர் ஜெயமோகன். அவருக்கு சற்றுமுன்னதாக சுமார் ஒரு டஜன் படங்களுக்கும் மேல் பணியாற்றி அத்தனை படங்களையும் மிகச் சிறப்பாக தோல்வியுற இயக்குநர்களுக்கு தோள் கொடுத்தவர் ‘எழுத்தாளர்’எஸ்.ராமகிருஷ்ணன்.
இப்படங்களில் பணியாற்றியபோது காசு விசயத்தில் மிகவும் காரியக்காரராக இருந்து வீடு,தோட்டம், துரவுகளை சம்பாதிக்கவே செய்தார். ஆனாலும் அது அவருக்குப் போதவில்லை என்பதை சில தினங்களுக்கு முன்பு சாய் வித் சித்ரா நிகழ்ச்சியில் பேசியபோது வெளிப்படுத்தியிருக்கிறார்.
அப்பேட்டியில்,…சினிமாவில் நான் பதினெட்டு இருபது படங்களில் பணியாற்றியுள்ளேன். இந்த படங்களிலிருந்து எனக்கு வரவேண்டிய பணம் வந்திருந்துருச்சுனா நான் உண்மையிலேயே சென்னையில் பெரிய வீடு கட்டியிருந்துருப்பேன்.
என்னை இதுவரை ஐந்து இயக்குநர்கள் அழைத்து பேசியுள்ளார்கள். முதல்முறை கதைவிவாதம் வாங்க என்று அழைப்பார்கள். இரண்டாம்முறை செல்லும்போது நம்மை காத்திருக்க சொல்வார்கள். பணம் பற்றி எதுவும் சொல்லமாட்டார்கள். ஏதோ நாம வெட்டியா இருக்கறதுபோல அவங்க நமக்கு வாழ்க்கை கொடுக்கறதுபோல நாமதான் அவங்களுக்கு பணம் கொடுப்பதுபோல நடத்துவார்கள். அதனால இப்போதெல்லாம் சினிமாத்துறை ஆட்கள் என்றால் விலகிவிடுகிறேன். அழைத்தாலும் ஏதாவது காரணம் சொல்லி தவிர்த்துவிடுகிறேன்’ என்று அநியாயத்துக்கு சலித்துக்கொள்கிறார் எழுத்தாளர்.
சினிமாக்காரர்களை சந்திப்பதை இவர் ஏதோ காரணம் சொல்லித் தவிர்த்துவிடுகிறாரா அல்லது சினிமாக்காரர்கள் சரியான ஞானம் பெற்று இவரைத் தவிர்த்துவிட்டார்களா என்பது ‘எழுத்தாளருக்கு நடந்தது என்ன?’என்று ஒரு டப்பா டிவி.சானலில் விவாதிக்கப்படவேண்டிய சமாச்சாரம்.
எழுத்தாளரின் இந்தக் குற்றச்சாட்டில் முதல் மூன்று இடங்களைப் பெறும் பிரபலங்கள் யார் தெரியுமா? ‘பாபா’வில் எஸ்.ராவை மடியில் தூக்கி வைத்துக் கொஞ்சிக்கொஞ்சி கொஞ்சம் கூட பணம் தராத ரஜினி, ‘சண்டக்கோழி’உட்பட சில படங்களில் பயன்படுத்திவிட்டு மதியச் சாப்பாட்டுக்குக் கோழிக்குழம்பு கூட தராத லிங்குசாமி, ‘அவன் இவன்’உட்பட எவன் எவனோ எழுதியதை எழுத்துக்கூட்டிப் படித்துக்காட்டச் சொல்லி பஸ் டிக்கெட்டுக்கூட காசு தராத பாலா.