சூர்யா, ஜோதிகா தம்பதியினரின் 2டி நிறுவனம் தயாரித்திருக்கும் அக்மார்க் வில்லேஜ் கதைதான் இந்த ராமே ஆண்டாலும் ராவணே ஆண்டாலும்.
தென்தமிழகத்தின் ஒரு கிராமத்தில் வசிக்கும் விவசாயிகளைக் கதை மாந்தர்களாக வைத்துக் கொண்டு உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல்வரை அலசி ஆராய்ந்து துவைத்துத் தொங்கப்போட முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் அரசி [ய]ல் மூர்த்தி.
நாயகன் மிதுன்மாணிக்கம், நாயகி ரம்யாபாண்டியன் ஆகிய இருவரும் பெற்ற பிள்ளைகள் போல் வளர்க்கும் கறுப்பன் வெள்ளையன் ஆகிய இரு காளை மாடுகள் திடீரெனக் காணாமல் போகின்றன. அதனால் அவர்கள் அடையும் தவிப்பு, தேடுதல் படலம், கொஞ்சம் அரசியல் என்று போகிறது படம்.
இன்னொரு பக்கம் இந்த மாடுகள் காணாமல் போனதால் தமிழ்நாடு அரசாங்கத்துக்கே அவப்பெயர். ஏன்? எதற்கு? எப்படி? என்பதைச் சொல்லும் படம் என்றும் இதைச் சொல்லலாம்.
மிதுன்மாணிக்கம் வேடத்துக்கு மிகப்பொருத்தம். ஆனால் இன்னொரு வாய்ப்பு கிடைக்கிற பட்சத்தில் அவர் கொஞ்சம் நடிக்கவும் கற்றுக்கொள்ளவேண்டும். ரம்யாபாண்டியனை சோகமே உருவாகக் காட்டி அவருடைய இரசிகர்களை சோறுதண்ணி சாப்பிடவிடாமல் ஆக்கிவிட்டார்கள்.
ஊடகவியலாளராக மிடுக்காக, துடுக்காக நடித்திருக்கிறார் வாணிபோஜன். [துடுக்காக என்பதை துட்டுக்காக என்று மாற்றிப்படித்தால் நிர்வாகம் பொறுப்பாகாது]. தற்கால சூடு சொரணையுள்ள ஊடகவியலாளர்களின் பிரதிநிதியாக அவருடைய வேடம் அமைந்திருக்கிறது. ஆனால் அப்படி சூடு சொரணையுள்ள யாராவது இருக்கிறார்களா என்பதும் கொஞ்சம் ஆராயவேண்டிய சமாச்சாரம்.
நாயகனின் நண்பர் மண் தின்னி என்கிற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிற வடிவேல்முருகன் வாயைத் திறந்தாலே அரசியல்தான். மிக அலட்சியமாக மிகப்பெரிய விசயங்களைப் பேசிக் கடந்து செல்கிறார். நல்ல வாய்ப்புகள் கிடைத்தால் அடுத்த சூரியாக மாறிக்கொள்ள சான்ஸ் உண்டு.
கதையில் வரும் அப்பத்தா முதல் அனைத்து கிராமத்து கதாபாத்திரங்களூம் மனசை அள்ளுகிறார்கள். தன்னந்தனியாகக் குளம் வெட்டும் பெரியவர் கண்களைக் குளமாக்குகிறார்.
இந்நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, விவசாய சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு மற்றும் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் ஆகியோரை நினைவுபடுத்தும் வேடங்கள் படத்தில் இடம்பெற்றிருக்கின்றன. சீமான் தோற்றத்தில் வருகிறவர் பேசும்போது அரங்கம் அதிர்கிறது.
சுகுமாரின் ஒளிப்பதிவு கைப்பிடித்து நம்மை கதை நடக்கும் அந்த கிராமத்துக்கே அழைத்துப்போகிறது.
கிரிஷ் இசையமைத்திருக்கிறார். நடிகை சங்கீதாவின் கணவராக அடையாளப்படுவதிலிருந்து தப்பிக்கக்ம் கிடைத்த ஒரு நல்வாய்ப்பை, ஒரு அருமையான பவுண்டரி லைன் கேட்சை மிஸ் செய்திருக்கிறார். பாடல்வரிகளில் சமுதாய அக்கறையும், விமர்சனங்களும் நிறைந்திருக்கின்றன.
குக்கிராமத்துச் சந்தைகள் வரை ஊடுருவிவிட்ட மார்வாடிகளைக் காட்டி எச்சரிக்கும் அதேநேரத்தில், இந்தி தெரியாது போடா என வேகமாகச் சொல்லி, இது தமிழ்நாடுடா என்று உரத்துச் சொல்லியிருக்கிறது படம்.
கதாபாத்திரங்களும் அதற்குப் பொருத்தமான நடிகர்களும் கூர்மையான வசனங்களைப் பொருத்தமான இடங்களில் பயன்படுத்தியிருப்பதும் இயக்குநர் அரிசில் மூர்த்தியின் பலங்கள். சின்னத்திரையில் தான் வெளியீடு என்பதால் நிச்சயம் பார்க்கலாம்.