கொரோனா ஊரடங்குக்குப் பிறகு ஐம்பது விழுக்காடு இருக்கைகள் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்கிற விதிமுறையோடு திரையரங்குகள் ஆகஸ்ட் 23 ஆம் தேதி திறக்கப்பட்டன.
ஆனாலும், சுமார் இரண்டு வாரங்கள் கழித்து, குறிப்பிடத்தக்க படங்களாக செப்டம்பர் 9 ஆம் தேதி லாபம் படமும் செபடம்பர் 10 ஆம் தேதி தலைவி படமும் வெளியாகியிருக்கிறது.
இவற்றைத் தொடர்ந்து செப்டம்பர் 17 ஆம் தேதி விஜய் ஆண்டனி நடித்துள்ள கோடியில் ஒருவன் படம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், இப்போது வரை அப்படத்தின் வியாபாரம் நிறைவடையவில்லை என்கிறார்கள்.
ஒட்டுமொத்த தமிழ்நாடு திரையரங்கு வெளியீட்டு உரிமையாக படக்குழுவின்ர் நான்கு கோடி சொன்னதாகவும் அவ்வளவு விலை கொடுத்து வாங்க யாரும் முன்வரவில்லையென்றும் சொல்லப்படுகிறது.
அதேபோல, சேலம் பகுதியில் விநியோக அடிப்படையில் முதலில் எழுபத்தைந்து இலட்சம் என்று சொல்லியிருக்கிறார்கள். யாரும் வாங்க முன்வராததால் நாற்பது இலட்சம் என்று இறங்கிவந்திருக்கிறார்கள். அதற்கும் யாரும் முன்வரவில்லை என்று சொல்லப்படுகிறது.
படமும் சுமாராக இருக்கிறது என்கிற செய்தி பரவியதாலேயே விநியோகஸ்தர்கள் வாங்கத் தயங்குகிறார்கள் என்றும் சொல்லப்படுகிறது.
இதுகுறித்து, படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கமல்போராவிடம் கேட்டபோது, நீங்கள் கேள்விப்பட்ட எதுவும் உண்மையில்லை, படத்தின் வியாபாரம் நன்றாகப் போய்க்கொண்டிருக்கிறது, படம் திட்டமிட்டபடி வெளியாகும் என்கிறார்.