தியேட்டர்கள் நாளுக்கு நாள் அநியாய வசூல் கொள்ளைகள் செய்வதாலும், தியேட்டருக்குள் பாப்கார்ன் கூட 150 ரூபாய்க்கு விற்பது போன்ற வாடிக்கையாளர்களை எரிச்சல் படுத்தும் நடவடிக்கைகளாலும், மக்கள் தியேட்டர்கள் பக்கம் எட்டிப் பார்ப்பதை கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க ஆரம்பித்துவிட்டனர். இதில் கொரோனா பாதிப்பு வேறு தியேட்டர்களை மேலும் பாதிப்புக்குள்ளாக்கிவிட்டது.
இந்நிலையில் நடிகர் சூர்யாவின் 2 டி நிறுவனம் அமேசான் ஒடிடி தளத்திற்காக நான்கு படங்களை தயாரித்துள்ளது. இவை நேரடியாக அமேசான் தளத்தில் வெளியாகும். தியேட்டர்களில் திரையிடப்படாது. ‘ஜெய்பீம்’, ‘இராமே ஆண்டாலும் இராவனே ஆண்டாலும்’, ‘உடன்பிறப்பே’, ‘ஓ மை டாக்’ ஆகிய இந்த நான்கு படங்களில் ‘இராமே ஆண்டாலும் இராவனே ஆண்டாலும்’ சமீபத்தில் அமேசான் ஒடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்ற நிலையில், அடுத்த படத்தின் ரிலீஸ் தேதி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜோதிகாவின் 50 வது திரைப்படமாக உருவாகியுள்ள ‘உடன்பிறப்பே’ ஆயுத பூஜை ஸ்பெஷலாக வரும் அக்டோபர் 14 ஆம் தேதி அமேசான் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
‘பாசமலர்’, ‘கிழக்கு சீமையிலே’ ஆகிய படங்களின் வரிசையில் அண்ணன், தங்கை பாசத்திற்கு எடுத்துக்காட்டாக உருவாகியுள்ள இப்படத்தில் ஜோதிகா தங்கையாகவும், சசிகுமார் அண்ணனாகவும் நடித்திருக்கிறார்கள். ஜோதிகாவின் கணவராக சமுதிரகனி நடித்துள்ளார். சூரி முக்கிய வேடத்தில் நடிக்க, மேலும் பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
’கத்துக்குட்டி’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சரவணன் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு டி.இமான் இசையமைக்க, வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
குடும்ப பாசமலர்ப் படமாக உருவாகியுள்ள ‘உடன்பிறப்பே’ வரும் அக்டோபர் 14 ஆம் தேதி ஆயுத பூஜையன்று அமேசான் ஒடிடி தளத்தில் நேரடியாக வெளியாகிறது.
தியேட்டர் உரிமையாளர்கள் தியேட்டருக்கு வரும் வாடிக்கையாளர்களை சந்தோஷப்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை. மேலும் மேலும் அவர்களை எரிச்சலடையச் செய்யும் வகையான செலவுகளை அவர்கள் தலையில் கட்டுவதை இனியாவது நிறுத்த முயல வேண்டும்.