இயக்குநர் வினோத்ராஜ் இயக்கிய ‘கூழாங்கல்’ திரைப்படம் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் பரிந்துரையாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் படம் ஆஸ்கர் பரிந்துரைக்குத் தேர்வு செய்யப்பட்ட செய்தியை தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.
ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் படக்குழுவுக்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
விருதுகளை குவித்த ‘கூழாங்கல்’ திரைப்படம் இன்னும் திரையரங்குகளில் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், சர்வதேச அளவில் பல விருதுகளை இந்தப் படம் குவித்துள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு நெதர்லாந்தின், ரோட்டர்டாம் 50வது சர்வதேச திரைப்பட விருது விழாவில் பங்கேற்று, ‘டைகர்’ விருதையும் இது வென்றது.
தன் படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு தேர்வாகியுள்ளது குறித்து பேசிய இயக்குநர் வினோத்ராஜ், “இந்த ‘கூழாங்கல்’ படத்தின் கதையே என் ஊர் மக்களையும் அவர்கள் வாழ்வியலையும் சார்ந்ததுதான். இது அவர்களுக்கான வெற்றியாக பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார். மேலும்,” படம் ஆஸ்கர் விருது பட்டியலில் தேர்வாகியுள்ளது என்ற செய்தி எனக்கு இன்று தான் தெரிய வந்தது. உடனே சென்னை கிளம்பி வர சொல்லியிருக்கிறார்கள். அங்குதான் வந்து கொண்டிருக்கிறேன்” என்றார்.
பல விருதுகளை படம் வாங்கி விட்டது. எப்போது திரையரங்குகளில் பார்க்கலாம் என்று கேட்டபோது, சிரித்தவர், “மிகவும் எளிமையான படம் இது. அதிக எதிர்ப்பார்ப்பு பயத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது என்பது உண்மைதான். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பல சர்வதேச விருதுகளை படம் வென்றது. ஆனால், கொரோனா இரண்டாவது அலையின் காரணமாக என்னால் நேரில் செல்ல இயலவில்லை. பின்பு, ரோமானியா, ரஷ்யா நாடுகளின் விருதுகளுக்கு படம் இட்டுச் சென்றது,”
“இந்த ஆண்டு டிசம்பருக்குள் படத்தை வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியிட நிறைய அழைப்புகள் வந்தன. ஆனால், படத்தை முதலில் தியேட்டருக்கு எடுத்துச் செல்லலாம் என தயாரிப்பாளர் விக்னேஷ் சிவன் சொல்லியிருக்கிறார். தியேட்டரா, ஓடிடியா என்பது குறித்தும், படத்தின் வெளியீடு குறித்தும் அடுத்தடுத்து அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளிவரும்” என்றார் வினோத்ராஜ்.
இதேபோல, கடந்த ஆண்டு இந்தியா சார்பில் மலையாள படமான ‘ஜல்லிக்கட்டு’ தேர்வானது.