நகைச்சுவை நிரம்பிய பேச்சாற்றல்….!
விடுதலைப்போராட்ட வீரரும், ஜனநாயக மாதர் சங்கத்தினை தமிழகத்தில் தோற்றுவித்த மூத்த தோழர்களில் ஒருவருமான ” அம்மா” என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப் படும் தோழர் கே.பி.ஜானகி அம்மாள் அவர்கள் எட்டயபுரத்தில் அன்று மாலையில் பேசப் போவதாக தகவல் வந்ததும், வழக்கம் போல சைக்கிள் வாகனங்களில் நண்பர்கள் ஏழெட்டுப் பேர் எட்டயபுரம் புறப்பட்டோம்.
பின்னிரவில் திரும்புவதற்கு சைக்கிள் தான் எப்பவும் வசதியாக இருக்கும். மேலும், முகங்களைப் பார்த்து எதையாவது விவாதம் செய்து கொண்டே நின்று, நின்று செல்வதற்கும் சைக்கிள் பயணமே எங்களுக்குப் பிடித்திருந்தது.
எட்டயபுரம் ஊர் எட்டியதுமே தேநீர் கடையில் சற்று ஓய்வெடுத்தபடியே சூடான சாயாவைக் குடித்துக்கொண்டும், முறுக்கைக் கடித்துக் கொண்டும் விவாதத்தினைத் தொடர்ந்தோம். பின்னர் சைக்கிள்களை உருட்டிக் கொண்டே கூட்ட மேடையை நெருங்கினோம்.
அப்போது கிடைத்த செய்தியைக் கேள்விப் பட்டு அனைவரும் மிகுந்த ஏமாற்றமடைந்தோம். தோழர் கே பி ஜானகி அம்மா வர இயலாத நிலையில், மாற்று ஏற்பாடாக, ஒரு இளைஞர் அனுப்பி வைக்கப் பட்டிருந்தார்.
மெலிந்த தேகக் கட்டுடனும், தலையில் ஆங்காங்கே முளைத்திருந்த இளநரையோடும் எளிமையான தோற்றத்திலிருந்த அவருக்கு அப்போது 25 வயது இருக்கும்.
அன்றிரவு ஆற்றிய அவரது உரையில் கலை இலக்கியம் அரசியல் பொருளாதாரம் விரவிக் காணப்பட்டது. மகாகவி பாரதி குறித்த சுவாரசியமான தகவல்களை அள்ளித்தந்த அந்த இளைஞரின் அன்றைய அசத்தலான பேச்சு திரண்டிருந்த கூட்டத்தினரை ஆவேசப்படுத்தியது.
திரும்பும் வழியில் நாங்கள் எங்களுக்குள் எதுவும் பேசாது அன்றையக் கூட்டத்தின் பேச்சை அசை போட்டவாறே வாகனங்களை அழுத்தினோம். வித்தியாசமான உரையினைத் தந்த அந்த இளைஞரின் பெயரும் வித்தியாசமாகவே எங்களுக்குப் பட்டது
மதுரை நன்மாறன் என்ற அவரது இலக்கியநயமிகுந்த பேச்சுதான் அந்த வாரம் முழுவதும் எங்களது திண்ணை விவாதத்தில் பெருமளவுக்கு ஆதிக்கம் செலுத்தியது.
சோசலிஸ்ட். வாலிபர் முன்னணி என்ற இளைஞர் அமைப்பை தமிழகத்தில் உருவாக்கிய முன்னணித் தலைவர்களில் ஒருவரான தோழர் நன்மாறன் அக்காலத்தில் நூற்றுக் கணக்கான இளைஞர்களோடு ,வேலையின்றி வாடும் இளைஞர்களுக்கு வேலை கொடுக்க அரசினை வலியுறுத்தி சைக்கிள் பேரணியாக சென்னை மாநகரம் நோக்கி சைக்கிள் பயணம் மேற்கொண்டவர்.
எளிமையான தோற்றத்தில் சிந்தனையைத் தூண்டும் நகைச்சுவை நிரம்பிய அவரது பேச்சாற்றல் தமிழகத்தின் இளைஞர்களை மட்டுமல்ல குன்றக்குடி அடிகளார், சாலமன் பாப்பையா போன்ற அறிஞர் பெருமக்களையும் மணி ரத்தினம் , பாரதிராஜா போன்ற திரையுலக ஜாம்பவான்களையும் மிகவும் ஈர்த்திருந்தது.
சோசலிஸ்ட் வாலிபர் முன்னணி பின்னர் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் என்ற அகில இந்திய அமைப்புடன் இணைந்த போது திண்டுக்கல்லில் 1981 இல் மாநில மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் பங்கேற்று சிறப்புரையாற்ற குன்றக்குடியிலிருந்து வருகை தந்திருந்த அடிகளார் பயணியர் விடுதியில் சில நிமிடங்கள் இளைப்பாறிவிட்டு புறப்பட ஆயத்தமானார் .
சில மாதங்களுக்கு முன்புதான் திண்டுக்கல் இந்திய சமூக விஞ்ஞானக்கழகம் சார்பில் நடைபெற்ற
கூட்டத்தில் அடிகளார் சிறப்புரையாற்றி சென்றிருந்ததால் அதன் அமைப்பாளர் என்ற முறையில் அவருக்கு நன்கு பரிச்சயமாகி இருந்தேன் . அதனால்தானோ என்னவோ, அங்கிருந்து அவரைக் காந்தி மைதானத்தில் நடைபெறும் மாநாட்டு மேடைக்கு அழைத்துச் செல்லும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது .
அடிகளாரின் வாகனம் பயணியர் விடுதியை விட்டு வெளியேறிய சில வினாடிகளில், ரயிலின் வருகைக்காக பாதை மூடப்பட்டதால் சிறிது நேரம் காத்திருக்க வேண்டி வந்தது. நேர ஒழுங்கை எப்போதும் கடைப்பிடிக்கும் அடிகளார் “கூட்டம் ஆரம்பித்து விடுவார்களே…நம்ம நன்மாறன் பேச்சைக் கேட்க வேண்டுமே..?? மேம்பாலம் அமைக்கணும் என்று எத்தனை தடவை மேலவையில் பேசியிருப்பேன் .??!! ” என்றவாறு பதற்றமடைந்து காணப்பட்டார்.
கலை இரவு…
காந்தி மைதானத்தை நெருங்கும் போது ” நன்மாறன் பேசுவது போல் தெரிகிறது மணி. அவரது அருமையான உரையினை இழந்து விட்டேனே ..!!” என்று ஆதங்கப்பட்டர். அந்த அளவுக்கு தோழர் நன்மாறன் மீது மதிப்பும் மரியாதையும் அடிகளார் வைத்திருந்ததை அன்று என்னால் உணர முடிந்தது.
காரிலிருந்து இறங்கியதும் , வேக வேகமாக மேடையை நோக்கி நடந்த அடிகளார், கூட்டம் அப்போதுதான் துவங்கியுள்ளதை அறிந்து ஆறுதலடைந்தார்.
ஆயிரக்கணக்கில் மக்கள் திரண்ட , மணிக்கணக்கில் நின்றவாறே ரசித்து மகிழக்கூடிய ஒரு நிகழ்வு உண்டென்றால் அது தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் நடத்தும் கலை இரவு என்பதை நாடே அறியும்.
சூரியன் மயங்கும் மாலை நேரத்திலிருந்து பூபாளம் இசைக்கும் அதிகாலை வரை செவிகளுக்கும் அறிவுக்கும் விருந்து படைக்கும் அற்புதமானதொரு கலைவடிவமான கலை இரவில் நடைபெறும் கவின்மிகு கலை நிகழ்ச்சிகளுக்கு நடுவே உரை வீச்சு என்ற அறிவிப்பு கேட்டதும் சற்றே கலைந்து செல்லும் மக்கள் மத்தியில் உரையாற்றுவது அவ்வளவு எளிதல்ல. வீடுகளுக்கோ, தேநீர் அருந்தவோ செல்ல நினைக்கும் பார்வையாளர்களை தக்க வைக்கவும் நிறுத்தி வைக்கவும் நன்மாறன், பாரதி கிருஷ்ண குமார் போன்ற பேச்சாற்றல் மிக்க ஆளுமைகளால் மட்டுமே சாத்தியம்.
திண்டுக்கல்லில் 1995 ஆம்ஆண்டின்
பிற்பகுதியில் இயக்குநர் பாரதிராஜாவின் “கருத்தம்மா” திரைப்படத்துக்கு த மு எ ச சார்பில் பாராட்டு விழா நடத்த முடிவு செய்து , இயக்குநர் பாரதிராஜாவை அழைத்திருந்தோம்.
” பசும்பொன் ” படத்தின் இறுதிக் கட்ட படப்பிடிப்பில் மும்முரமாக இருந்த அவரும் எங்கள் அழைப்பினை ஏற்று வருவதற்கு இசைவு தெரிவித்தார் .
தோழர் நன்மாறன் தலைமையிலான வழக்காடுமன்றமும் , நீதியரசர் அசோக் குமார் தலைமையில் மேல்முறையீட்டு மன்றமும் , கவிஞர் பாலபாரதி, பாரதி கிருஷ்ண குமார் ஆகியோரின் உரைவீச்சும் ஏற்பாடாகியிருந்தன.
வெள்ளமெனத் திரண்டிருந்த கூட்டத்தில் வழக்கத்தைவிட அன்று நன்மாறனின் உரையில் நகைச்சுவை அபரிமிதமாக காணப்பட்டது . நிமிடத்துக்கு ஒருமுறை அனைவரையும் சிரிக்க வைக்க அவர் ஒருவரால் தான் முடியும் ..!
‘ வதந்தி’ பற்றி சுவாரசியமான கதை ஒன்றை தனது உரையின் ஊடே இப்படி சொல்லத் துவங்கினார்.
தீயா வதந்தி பரவுது…
” மதுரை பஸ் ஸ்டாண்டில ஒரு தடவை நின்றுகொண்டிருக்கும் பஸ்ஸுக்குள்ள கிராமத்துக் காரங்க இரண்டு பேர் ஏறி உட்கார்ந்து அவங்க சொந்தக் கதை சோகக் கதையை சத்தம் போட்டுப் பேசிக்கிட்டுருந்தாங்க.
அப்ப அவங்களில ஒருத்தரு ..” மாணிக்கம்…. இப்பல்லாம் அங்க போறதில்லை ” என சொல்ல , உடனே அடுத்த ஆளு ” அப்படியா ..!! போறதில்லையாமா!!?? ” என திரும்ப சொன்னதைப் பின் வரிசையில் இருந்த இரண்டு பேரு அரைகுறையாக் கேட்டுவிட்டு ” இந்த பஸ் போகிற பஸ் இல்லையாம் .. இறங்கு இறங்கு ” ன்னு சொல்லிக்கிட்டே அந்த இரண்டு பேரும் இறங்க ,அதைக்கேட்ட இன்னும் சில பேர் ‘பஸ் போகாதாம்’ என்று சொல்லிக்கிட்டே இறங்க , முதல்ல கதை பேசிக்கிட்டிருந்த கிராமத்துக் காரங்களும் அதைக் கேட்டு. பஸ்ஸை விட்டிறங்க , டீ குடிச்சிட்டு பஸ்ஸை எடுக்க வந்த அந்த பஸ்ஸின் டிரைவர், கண்டக்டர் என்னன்னு கேட்க அவர்களிடமே ” போகாதாம் இந்த பஸ் ..!! ன்னு சொல்ல , அவங்களுக்கே அது நம்ம வண்டிதானான்னு சந்தேகம் வந்து டயரைச் செக் பண்ண ஆரம்பிச்சிட்டாங்களாம்..!! இப்படித்தான் வதந்தி தந்தி மாதிரி வேகமா தீயா பரவுது ..!!”என்று தோழர் நன்மாறன் முடிப்பதற்குள் மேடையிலிருந்த இயக்குநர் பாரதிராஜா குலுங்கிக் குலுங்கி சிரித்ததில் ஒருகட்டத்தில் இருக்கையிலிருந்து கிட்டத்தட்ட கீழே விழும் நிலைக்குப் போய்விட்டார்.
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு விளையாட்டைப் பற்றி விவரிக்கையில் ஆயிரக்கணக்கான மக்களும் மேடையிலிருந்த நீதியரசர் அசோக் குமாரும் வயிறு வலிக்க சிரிப்பதைக் காண முடிந்தது.
பழம்பெரும் நடிகை டி.ஆர். ராஜகுமாரி குறித்துப் பேசுகையில் அறுபதைத் தாண்டிய பெரியவர்கள் கால வாகனமேறி அந்தக் காலத்துக்கே பயணம் செய்தார்கள். மேடையில் அமர்ந்து முன்னிலை வகித்த புரவலர் பெரு வணிகர் திரு ஜி.சுந்தர்ராஜன் என்னிடம் ” எங்க காலத்துக் கதை..!” ன்னு சொல்லிக் குழந்தை போன்று சிரித்ததை நன்மாறன் பார்க்கத் தவறவில்லை.
கூட்டம் முடிந்ததும் மேடைக்கலைவாணரைக் கட்டிப் பிடித்துக் கொண்டு ” பசும் பொன்” படம் முடியட்டும். திண்டுக்கல்லிலேயே 2, 3 நாள் 16 வயதினிலே முதல் பசும் பொன் வரைக்குமான படங்கள் குறித்து விரிவாகப் பேசுவோம் . நானும் கூடவே இருப்பேன். நீங்களும் அவசியம் இருக்கணும், நன்மாறன் ..!!” என்று இயக்குநர் பாரதிராஜா கூறும் அளவுக்கு அன்று அவரை ஈர்த்துவிட்டார் நம்ம நன்மாறன் ..!
வெகுமக்கள் மத்தியில் என்ன பேச வேண்டும், என்ன வடிவத்தில் பேச வேண்டும் என்பதில் தோழர் நன்மாறன் வகுத்துக்கொண்ட பாணியோ தனித்தன்மை(Inimitable style) வாய்ந்தது…!!
1996 ஜனவரி முதல் வாரத்தில் “பாரதிராஜாவின் படைப்புக்களை” முன்வைத்து மூன்று தினங்கள் உள்ளரங்க விவாதமும் இரண்டு தினங்கள் மாலை நேரப் பொது நிகழ்ச்சிகளையும் திண்டுக்கல் த மு எ ச மாவட்டக்குழு ஏற்பாடு செய்திருந்தது.
மாலை நேர முதலாவது பொது நிகழ்வில் மேடைக்கலைவாணர் நன்மாறன் தலைமையில், மதுக்கூர் ராமலிங்கம், நந்த லாலா, பாலபாரதி, முனைவர் குருவம்மாள் ஆகியோர் பங்கேற்ற “சுழலும் சொற்போர்” நிகழ்ச்சி சுவையானதாகவும் சிந்தனையைத் தூண்டும் விதமாகவும் அமைந்தது.
என்னைப் பெத்த அப்பன்….
மேலும் , பார்வையாளர்கள் பகுதியின் முன்வரிசையில் அமர்ந்து மிகவும் ரசித்துக் கொண்டிருந்த இயக்குநர் பாரதிராஜாவை எந்த அளவுக்கு நெகிழவும் மகிழவும் வைத்தது என்றால் , மறுநாள் மாலை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து திரண்டு வந்திருந்த பல்லாயிரக்கணக்கான திரை ரசிகர்கள், ரேவதி, நெப்போலியன் உள்ளிட்ட திரையுலக முன்னணி நடிக நடிகையர் , மணிவண்ணன், பொன்வண்ணன் உள்ளிட்ட திரை இயக்குநர்கள் மற்றும் பிரபல பின்னணிப் பாடகர் எஸ் பி பாலசுப்பிரமணியம் முன்னிலையில், “சுழலும் சொற்போர் “நிகழ்ச்சியை அன்றும் நிகழ்த்துமாறு மேடையில் பாரதிராஜாவே கேட்டுக் கொண்டார்.
தான் ரசித்து மகிழ்ந்ததை தனது ரசிகர்களும் திரையுலகத்தினரும் கேட்டு மகிழட்டும் எனக் கருதியிருக்கக் கூடும். பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் முன் நம்ம நன்மாறன் தலைமையேற்ற “சுழலும் சொற்போர் ” புதிய மெருகுடன் அரங்கேறியது பலத்த கை தட்டல்களுக்கு மத்தியில் ..!
அன்று மதியம் நடைபெற்ற உள்ளரங்க நிகழ்வின் முத்தாய்ப்பாக இயக்குநர் பாரதிராஜாவின் ஏற்புரை உணர்ச்சி மயமாக இருந்தது.
தோழர் நன்மாறன் குறித்துப் பேசுகையில் ” இந்த மனுஷன் என் படங்களை எவ்வளவு நுட்பமாகப் பார்த்து ரசிச்சிருக்காரு..!! இத்தனை நாள் எனக்குத் தெரியாத, தெரிந்திராத பல நுணுக்கங்களை பல விளக்கங்களை அவர் இங்கேயும் பொது நிகழ்ச்சியிலும் பேசக் கேட்கும்போது ரொம்பவும் நெகிழ்ந்து போனேன். எந்த ஒப்பனையுமில்லாத ஒரு கிராமத்து விவசாயி போன்ற தோற்றம் கொண்ட இந்த நன்மாறனைப் பார்க்கும் போது, மறைந்து போன என்னைப் பெத்த அப்பன் நினைவுதான் வருகிறது..!! கிராமத்து வாழ்க்கையின் சூட்சுமங்களை கிராமத்தில் வளர்ந்து வந்த என்னைக் காட்டிலும் அதிகமாகவே புரிந்து வைத்திருக்கிறார் அவர்..! தலை வணங்குகிறேன் …நன்மாறன் .!!…” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போதே உணர்ச்சி வயப்பட்ட இயக்குனரால் மேலே தொடர முடிய வில்லை.
அப்போது பார்வையாளர் பகுதியிலிருந்து கேவல் ஒலி கேட்டு அனைவரும் திடுக்கிட்டுத் திரும்பிப் பார்க்க, ஆசான் எஸ்.ஏ. பெருமாள் உடல் குலுங்கி விம்மிக் கொண்டிருந்தார்.
உணவு இடைவேளையின் போது அவரிடம் “கண்கலங்கினீர்களா தோழர்” என்று நண்பர்கள் விசாரிக்கும் போது “அதெல்லாம் இல்லை… எல்லையற்ற ஆனந்தமப்பா ..!!… இதற்கு எத்தனை காலம் ….காத்திருந்தேன் ..?!. நம்ம நன்மாறனை இந்த அறிவார்ந்த சபையில் அங்கீகரித்துப் பாராட்டும் மகிழ்ச்சியான தருணத்தில் உணர்ச்சி வசப்படுவதை என்னால் அடக்க முடியலைப்பா !!” என்றார்.
பாரதிராஜா மட்டுமல்ல, இயக்குநர்கள் மணிரத்தினம், பாலாஜி சக்திவேல் போன்ற இயக்குநர்களின் இதயங்களிலும் இடம் பெற்றிருப்பவர் அவர் ..!!
“காதல்” படத்தின் 100 ஆவது நாள் கொண்டாட்ட விழாவின் போது, திண்டுக்கல் த மு எ ச மேடையில் மண்ணின் மைந்தன் பாலாஜி சக்திவேல், நடிகை சந்தியா மற்றும் படத்தில் பணியாற்றிய கலைஞர்களைப் பாராட்டி படத்தின் பல்வேறு சிறப்பு அம்சங்களை சிரிப்பு வெடிகளுடன் சிலாகித்து நன்மாறன் அவர்கள் பேசியதை இயக்குநர் பாலாஜி சக்திவேல் உட்பட இவ்விழாவிற்கு வந்த யாருமே மறந்திருக்க முடியாது.
பேசும் வார்த்தைகளுக்கும் வாழும் வாழ்க்கைக்கும் வித்தியாசமின்றி…..
தமிழகத்தில் அரசியல் இலக்கிய மேடைகளில் நகைச்சுவையாகப் பேசுவதற்கு நிறைய பேர் இருந்தாலும், ஆழமான அரசியல் புரிதலோடும் எவர்மீதும் அவதூறு மழை பொழியாமலும், சங்க இலக்கியம் மற்றும் புராண இதிகாசங்களிலிலிருந்தும் வரலாற்று நூல்களிலிருந்தும் நித்தம் நித்தம் புத்தம் புதிய தகவல்களுடனும் அன்றாட அனுபவங்களை சுவையான கதைகள் மூலமும் பண்டிதர் முதல் பாமரர் வரையிலான, இளைஞர் முதல் முதியோர் வரையிலான அனைவரையும் பேச்சுத்திறத்தால் ஈர்க்கும் வித்தையும் கலையும் நன்மாறன் போன்ற ஒரு சிலருக்கு மட்டுமே தெரிந்திருக்கிறது ..!
கலை இரவுகளில் மேடையேறுவதற்கு முன்னால் தன்னை அழைக்கும் வரை மேடைக்குப் பின்னால் வெளிச்சம் இல்லாத இடத்தில் சேரில் அமர்ந்து புகைத்துக்கொண்டே யோசித்துக் கொண்டிருப்பார். என்ன பேசலாம் என்பதை மனதுக்குள் சித்திரமாக வரைந்து கொண்டிருப்பாரோ என்னவோ ..! ?
யாருமே அவரைத் தொந்திரவும்செய்வதில்லை .
கையில் எந்தக் குறிப்பும் இல்லாமல் மணிக்கணக்கில் பேசும் சாமர்த்தியம் அவருக்குண்டு. கையில் வைத்திருக்கும் பையில் படிப்பதற்கு சில புத்தகங்களையும் சிறிய துண்டு ஒன்றும் எப்போதும் வைத்திருப்பார். “உலக சரித்திரம்” புத்தகம் பையில் இருந்ததை ஒரு முறை பார்த்திருக்கிறேன்.
தான் சிரமப்பட்டு வாசித்ததை எளிமையாக மக்களுக்கும் குழந்தைகளுக்கும் சொல்லிவிட எண்ணி வரலாற்று நாயகர்களின் வாழ்க்கையை சிறு சிறு நூல்களாக எழுதியுள்ளார். குழந்தைகளுக்கான பாடல்களையும் தொடர்ந்து எழுதி, பாடலாசிரியர் என்ற சிறப்பும் பெற்றிருப்பவர்.
திருவண்ணாமலையில் நடைபெற்ற த மு எ ச மாநில மாநாட்டில் செம்மலர் ஆசிரியர் எஸ் ஏ பி யுடன் இணைந்து “ஆதவனை அடிமையாக்கியே… ” என்ற பாடலை இனிமையாகப் பாடி பாடகன் என்ற முத்திரையினையும் பதித்தவர்.
சட்டமன்றத்திலும் தனது நகைச்சுவையும் நயத்தக்க நாகரிகமும் கலந்த வாதங்களால் அவையைக் கலகலப்பூட்டி, அரசின் கவனத்தை ஈர்ப்பதில் சமர்த்தர்!
என்னுடன் வங்கியில் பணியாற்றியவரும் தொழிற்சங்கத்தில் மிக்க ஆர்வம் கொண்டவருமான மதுரை ஜெயராமன் அவரது பால்யகாலத்துப் பள்ளித் தோழன்.
அவர் சொல்லித்தான் தெரியும் தோழர் நன்மாறனின் இயற் பெயர் இராமலிங்கம் என்று….!
சட்ட மன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க நன்மாறன் அவர்கள் மதுரையிலிருந்து பேருந்தில் பயணம் செய்து திண்டுக்கல் வந்து கொண்டிருந்தார். நிகழ்ச்சி துவங்கும் நேரமாகிவிட்டதாலும், நிகழ்ச்சி நடைபெறுமிடம் ஸ்டேட் வங்கியின் அருகில் என்பதாலும், பேருந்து நிலையத்துக்கு செல்லாமல் ஸ்டேட் வங்கி பக்கத்திலிருக்கும் நிறுத்தத்தில் அவரை இறங்கச் சொல்லியிருந்தோம்.
முகம் கழுவவும், இயற்கை உபாதையை சரிப்படுத்தவும், நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் வசதி இல்லாததால், அருகிலுள்ள நான்பணி செய்யும் வங்கிக்கு அவரை அழைத்துச் சென்றேன். இரவு நேரமாதலால் முன்புறம் பூட்டியிருந்தது. ஆயுதக்காவலரை அழைத்து திறக்கச் சொல்லி தோழரை உள்ளே அழைத்துச் சென்றேன். ஒரு அதிகாரி மட்டும் பணியிலிருந்தார்.
வேட்டியை மடித்துக் கொண்டு முகம் கழுவ உள்ளே சென்று அவர் திரும்புவதற்குள் அந்த அதிகாரியும் காவலரும் வந்தவர் யாரென்று என்னிடம் வினவ “எனக்கு நெருக்கமானவர். இப்போது அவசரமாக ஒரு இடத்துக்குப் போவதால், நாளை விவரம் சொல்கிறேன் ” என்று மட்டும் சொல்லி சமாளித்து அவரைக் கூட்டத்திற்கு அழைத்துச் சென்றுவிட்டேன்.
மறுநாள் அந்த இருவரிடமும் ,” முந்திய தினம் என்னுடன் வந்தவர் ஒரு சட்டமன்ற உறுப்பினர் “என்று சொன்னதை அவர்கள் முதலில் நம்ப மறுத்தனர் . பின்னர் ஆச்சரியப்பட்டு , ” சொல்லாமல் இருந்துட்டீங்களே சார்..!! ஒரு காபி கூட வாங்கித் தராமல் சரியாக உபசரிக்காம இருந்திட்டோமே …அவர் ஏதேனும் தப்பா நினைச்சிருப்பாரோ?” என்று வருத்தப்பட்டனர் .
காட்சிக்கு எப்போதுமே எளியவரான தோழர் நன்மாறன் வீட்டுக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு அவரது தாயார் மறைவையொட்டி துக்கம் கேட்க நண்பர்களுடன் சென்றிருந்தேன்.
பல ஆண்டுகளாக, அந்த 184 சதுர அடியுள்ள சின்ன குச்சு வீட்டில் அவர் ஒருவரின் வருமானத்தில் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்ததை அன்று நேரடியாகப் பார்க்க நேரிட்டது.
ஆரப்பாளையத்தின் நெருக்கடிமிகுந்த பகுதியில் ஒரு சந்துக்குள் தான் மதுரை கிழக்குத் தொகுதி சட்டமன்ற உறுப்பினரான நன்மாறனின் வீடு இருந்தது. அஞ்சலி செலுத்த வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தெருவுக்குள் நுழையவே மிகுந்த சிரமப்பட்டனர். அவரது வீட்டுக்குள் நுழைந்து விட்டால் மூன்று பேர் மட்டுமே ஒரே நேரத்தில் நிற்க முடியும்.
பாட்டிகாலத்திலேயிருந்து வாடகைக்கு குடியிருந்து வந்த அந்த வீட்டை, வீட்டு உரிமையாளரின் வற்புறுத்தலின் பேரில் நாற்பதாயிரம் ரூபாய்க்கு வங்கியில் கடன்பெற்றும் ,நண்பர்களின் உதவியோடும் விலைக்கு வாங்கிக் குடியிருந்தார். பொருளாதார சிக்கல் காரணமாக அண்மையில் அந்த வீட்டையும் விற்றுவிட்டு வாடகைக்கு வேறொரு வீட்டில் குடி போயுள்ளதாக தோழர் மதுரை பாலன் முக நூலில் பதிவு செய்திருந்ததைப் படித்து அதிர்ந்து போனேன்.
இக்காலத்தில் ஒரு வார்டுக் கவுன்சிலர்கூட தனது பதவிக்காலத்தில் பல வீடுகளுக்கு அதிபதியாகும் காட்சிகளை அன்றாட அரசியலில் பார்த்துவரும் ஒருவருக்கு, இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஒருவர், வாடகைக்கு ஒரு குச்சு வீட்டில் குடியிருக்கும் மேடைக்கலைவாணர் நன்மாறனைப் பார்த்து அதிசயிக்கத்தான் தோன்றும்..!!
தனக்காக, தனது பிள்ளைகளுக்காக யாரிடமும் உதவி கோரியோ வேலை கேட்டோ சிபாரிசுக்குப் போகாதவர்…!! எப்படியும் பொருளீட்டி எப்படியும் வாழலாம் என்று உலவும் அரசியல்வாதிகள் மத்தியில், மேடையில் பேசும் வார்த்தைகளுக்கும் வாழும் வாழ்க்கைக்கும் வித்தியாசமின்றி வாழும் தோழர் நன்மாறன் இடதுசாரி இயக்கத்தின் உன்னத அடையாளம் ( icon ) என்றால் அது மிகையல்ல…!!
மூத்த தோழர்களான கே.பி.ஜானகியம்மாள்,என். சங்கரய்யா , ஏ பாலசுப்ரமணியம் , பி ராமச்சந்திரன் , என் வரதராசன் போன்றவர்களால் செதுக்கப்பட்ட தோழர் நன்மாறன் குடத்திலிட்ட விளக்கு..!!
மேடைக் கலைவாணர்….
திண்டுக்கல் ரோட்டரி மன்றம் சார்பில் பத்தாண்டுகளுக்கு முன்பு அழைக்கப் பட்டிருந்தார் . நினைவுப்பரிசு தரப்பட்டு கவுரவிக்கப்பட்டார் . பின்னர் விழாவின் நிர்வாகியும் வங்கி ஊழியருமான தோழர் பி ஏ பி நாதனின் இரு சக்கர வாகனத்தின் பின்னாலமர்ந்து எங்கள் வீட்டுக்கு வந்தார் .
எனது மாமியார் காலமாகி ஒரு வாரமாகியிருந்த சமயம் . எனது மாமனார் தோழர் அறம் அவர்களிடமும் எங்களிடமும் துக்கம் கேட்டுவிட்டு சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்த அவரை, மதுரைக்கு வழியனுப்ப பேருந்து நிலையம் அழைத்து சென்றேன்.
மதுரை செல்லும் பேருந்துக்குள் ஏறிய அவர் கீழேயிறங்கி அவசரமாக தனது பையைத் திறந்து அவருக்கு தரப்பட்ட நினைவுப்பரிசை என் கையில் கொடுத்துவிட்டு, ” வீட்டில் வைத்தே கொடுக்க எண்ணினேன் .. மறந்திருச்சு.. என் வீட்டுக்குத்தான் வந்திருக்கீங்களே …! ஆளு உட்காரவே இடமில்லை.. இதையெல்லாம் எங்க கொண்டு வைக்க..? சொல்லுங்க.. மணி..! என்று பரிதாபமாகக் கூற , ” உங்களுக்கு தரப்பட்ட நினைவுப்பரிசை நான் பெற்றுக் கொள்வது முறையல்ல.. அது உங்களிடம்தான் இருக்க வேண்டும் ” எனக் கூறி அந்த நல்லவரை வழியனுப்பி வைத்தேன் விழிகளில் நீர் வழிய .!!
மேடையில் நின்று தனது நகைச்சுவை உரையால் குலுங்கக் குலுங்க அனைவரையும் சிரிக்கவைக்கும் மேடைக் கலைவாணர் அன்று கண்ணீர் சிந்த வைத்தார் என்னை..!!
உடல்நலக் குறைவு ஏற்படும் போது மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் வரிசையில் நிற்கும் அவரைக் காணும் பொழுதில் முன்னாள் அமைச்சர் கக்கன் அவர்களையும், சட்டமன்றத்தில் பத்தாண்டுகள் பதவி வகித்துவிட்டு மதுரைக்கு புத்தகங்களும் துண்டும் கொண்டிருந்த பையுடன் திரும்பிய பொழுதில் தோழர் நிருபன் சக்கரவர்த்தி அவர்களையும் நினைவுபடுத்தும் நன்மாறன் அனைவருக்கும் நல்ல முன்மாதிரி..!!
— ஆர் எஸ் மணி
( “ நெஞ்சிருக்கும் வரை” நூலிலிருந்து…)