முன்ன ஒரு காலத்தில் பிரபல டான்ஸ் மாஸ்டராக இருந்து பின்னர் தொலைக்காட்சி நடனப்போட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்று பார்வையாளர்களை தனது தீர்ப்புகளால் கிழி கிழியென்று கிழித்த டான்ஸ் மாஸ்டர் கலா தற்போது நடிகையாகவும் களம் இறங்குகிறார். அந்த புண்ணிய காரியத்தில் தன்னை இறக்கிய பெருமை நடிகை நயன்தாராவையே சாரும் என்றும் அவர் தகவல் தந்திருக்கிறார்.
முன்னாள் பிரபல நடன இயக்குனரான கலா மாஸ்டர், தமிழ், தெலுங்கு, மலையாளம் உட்பட பல்வேறு மொழி படங்களில் பணியாற்றியுள்ளார். ஐந்தாயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களுக்கு அவர் நடனம் அமைத்துள்ளார். இதுதவிர சின்னத்திரையிலும் மானாட மயிலாட என்கிற நடன நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தினார். சினிமா மற்றும் சின்னத்திரையில் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் அவர், தற்போது முதல்முறையாக நடிகையாக அறிமுகமாக உள்ளார். அதன்படி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகும் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் கலா மாஸ்டர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளாராம்.
நயன்தாரா, விக்னேஷ் சிவன் கேட்டுக் கொண்டதால் நடிக்க ஒத்துக்கொண்டதாகவும், இதைத்தொடர்ந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன் என்றும் கலா மாஸ்டர் அச்சமூட்டுகிறார்.‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்தில் விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சமந்தாவும், நயன்தாரா-வும் நடித்துள்ளனர். அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.