நெதர்லாந்தில் வசிக்கும் தமிழர் அரவிந்த் கணேசன். இவர் ஒரு வ்ளாக்கர். அதாவது யூட்யூபிலும், பேஸ்புக்கின் மூலமும் இணையதள சேனல்கள் நடத்தி வருகிறார். இவர் நெதர்லாந்து. ஐரோப்பா மற்றும் பல உலக நாடுகள் முதல் தமிழ்நாட்டின் மூலை முடுக்குகள் வரை சுற்றுப் பயணம் செய்து சுவராசியமான விஷயங்களை தனது வீடியோ தளத்தில் பதிவிட்டு வருகிறார். இவருக்கு பல்லாயிரக்கணக்கான சப்ஸ்கிரைபர்கள் இருக்கிறார்கள்.
கடந்த வாரத்தில் ஒரு நாள் நெதர்லாந்தில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டிற்கு சென்று தனது வலைத்தளத்திற்காக ஒரு பதிவை எடுக்க ஆரம்பித்துள்ளார். அப்போது அவரைத் தாண்டி சென்ற நபரைப் பார்த்ததும் அவருக்கு ஒரே ஆச்சரியம் கலந்த மகிழ்ச்சி. இன்ப அதிர்ச்சி.
தனியாக நடந்தபடி, கேஷூவலாக பைகளை தூக்கிக் கொண்டு சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த அந்த நபர் வேறு யாருமல்ல நெதர்லாந்து நாட்டின் பிரதமர் மார்க் ரட் தான். ஓடோடிச் சென்று அவரை சந்தித்து உடன் வீடியோ எடுத்துக் கொண்டு, கைகுலுக்கி, கட்டிப் பிடித்து பேசிவிட்டு வந்திருக்கிறார் இந்த நெதர்லாந்துத் தமிழர்.
நம் நாட்டில் பிரதமர் வந்தால் அந்த ஏரியா பக்கமே போகக் கூட முடியாது. நெதர்லாந்தில் பாதுகாப்புப் படை, கருப்புப் பூனைகள், குண்டு துளைக்காத கார்கள் இல்லாமல் பிரதமர் மார்க் ரட் கேஷூவலாக நடந்து போகிறார். இதை எப்படிப் புரிந்து கொள்வது ?
பிரதமர்கள் தங்களைக் கடவுளாக நினைத்துக் கொள்ளும் நம் இந்தியா போன்ற நாட்டிற்கு இப்படி தன் பதவியை வைத்து தலைக்கனம் கொள்ளாமல் எளிமையாய் இருக்கும் தலைவர்கள் கிடைப்பார்களா ?
வலைப்பதிவர் அரவிந்த் நெதர்லாந்துப் பிரதமரை சூப்பர் மார்க்கெட்டில் சந்தித்துப் பேசிய நிகழ்வின் காணொலி கீழே.