நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள டாக்டர் படம் ஒரு வழியாக இன்று வெளியாகிவிட்டது.
சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் முதல்பிரதி அடிப்படையில் தயாரித்துள்ள இந்தப்படத்தை கேஜேஆர் ஸ்டுடியோஸ் வெளியிட்டுள்ளது.
இன்று காலை ஆறு மணிக்கு சென்னையில் படம் திரையிடப்பட்டுவிட்டது. ஆனால், அதிகாலை நான்கு மணி வரை அப்பட வெளியீடு தொடர்பாகப் பேச்சுவார்த்தைகள் நடந்திருக்கிறது.
இப்படத்துக்காக வாங்கிய கடன்களில் பலவற்றைக் கட்டிய பின்பும் கடைசியில் 27 கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அவ்வளவு தொகை இருந்தால்தான் படம் வெளியாகும் எனும் நிலை. தயாரிப்பாளர் கே.ஜே.ராஜேஷ் மும்பை, ஐதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் முயன்றும் கடைசிவரை அப்பணத்தைத் தயார் செய்ய இயலவில்லையாம்.
இந்நிலையில், சிவகார்த்திகேயன் தங்களுக்கு ஒரு படம் நடிப்பதாக ஒப்புக்கொண்டால் அந்தப்பணத்தைத் தரப் பொறுப்பேற்பதாக சில தயாரிப்பாளர்கள் முன்வந்துள்ளனர்.
ஆனால், யாரையும் நம்பாமல் லைகா நிறுவனத்தை அணுகியுள்ளார் சிவகார்த்திகேயன். அவர்கள் சிவகார்த்திகேயனுக்கு உதவ முன்வந்து, லைகா நிறுவனர் சுபாஸ்கரனிடம் லைகாவின் தமிழகத்தலைவர் தமிழ்க்குமரன் இத்தகவலைச் சொல்ல, உடனே அவர், சிவகார்த்திகேயனுக்கு வேண்டியதைச் செய்துகொடுங்கள் என்று சொல்லியிருக்கிறார்.
அதன்பின், லைகா தமிழகத் தலைவர் தமிழ்க்குமரன், சிவகார்த்திகேயன் மற்றும் மதுரை அன்பு ஆகிய மூவரும் சந்தித்தனராம்.
அப்போது, என்னென்ன சிக்கல்கள் இருக்கின்றன? அவற்றை எப்படித் தீர்ப்பது என்று விரிவாகப் பேசப்பட்டதாகவும், பல இடங்களில் சிவகார்த்திகேயன் சார்பாகத் தாங்கள் பொறுப்பேற்பதாகவும் லைகா தரப்பில் உறுதி கூறப்பட்டதைத் தொடர்ந்து சிக்கலுக்குத் தீர்வு வந்திருக்கிறது என்கிறார்கள்.
அதிகாலை நான்கு மணிவரை தமிழ்க்குமரன், சிவகார்த்திகேயன் மற்றும் மதுரை அன்பு ஆகியோரின் சந்திப்பு நடந்ததாகச் சொல்லப்படுகிறது. அதனால் எல்லாம் சுமுகமாக முடிந்திருக்கிறது.
இதனால் சம்பந்தப்பட்ட அனைவர் மட்டுமின்றி சிவகார்த்திகேயன் ரசிகர்களும் மகிழ்ச்சி அடைந்திருக்கின்றனர்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையரங்குகளில் ஓரளவுக்கு சுமாரான கூட்டம் என்பதால் திரையரங்குக்காரர்களும் உற்சாகமாக இருக்கிறார்கள்.
ஆனால் மதியம் 12 மணி நிலவரப்படி படத்தின் ரிப்போர்ட் மிக சுமார் என்றே வருவதால் சிவகார்த்தியன் இப்படத்தின் கடனை அடைக்க நாலைந்து படங்களிலாவது நடிக்க வேண்டியிருக்கும் என்று நம்பப்படுகிறது.
ப்ளாக் காமெடி என்ற பெயரில் இயக்குநர் வைத்திருக்கும் பல காட்சிகள் சோதனை மேல் சோதனையாகவும் அதுவே ஒரு கட்டத்தில் வேதனையாகவும் மாறிவிடுவதாக ரசிகர்கள் புலம்புகின்றனர்.