திருவனந்தபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் இருந்த .நடிகர் நெடுமுடி வேணு சிகிச்சை பலனின்றி சற்றுமுன்னர் காலமானார்.
பத்திரிகையாளராகத் தனது தொழில் வாழ்க்கையை ஆரம்பித்த நெடுமுடி வேணு 1978ஆம் ஆண்டு திரைத்துறையில் நுழைந்தார். அதற்கு முன் நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருந்தார். இதுவரை கிட்டத்தட்ட 500 திரைப்படங்களுக்கு மேல் நடித்திருக்கும் நெடுமுடி வேணு 3 தேசிய விருதுகளையும், 6 மாநில விருதுகளையும் வென்றுள்ளார்.
தமிழில் மோகமுள், ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘பொய் சொல்லப் போறோம்’, ‘சர்வம் தாள மயம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். ‘இந்தியன் 2’ திரைப்படத்திலும் நடித்துள்ளார்.
தற்போது 73 வயதான நெடுமுடி வேணு சமீபத்தில் கோவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டு மீண்டிருந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை உடல்நலம் குன்றியதால் அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்தியா முழுமையுமே பல லட்சக்கணக்கான ரசிகர்களைக் கொண்டுள்ள நெடுமுடி வேணு மிகவும் அற்புதமான நடிகர் ஆவார். இவரது மறைவுக்கு சமூக வலைதளங்களில் திரைக் கலைஞர்களும் ரசிகர்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.