திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் திரையுலகை தங்கள் ஆக்டோபஸ் கரங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து பாடாய்ப்படுத்துவார்கள் என்பது யாரும் மறந்துபோகாத பழைய சங்கதி. தற்போது மீண்டும் தங்கள் அட்ராச்சிட்டிகளை ‘அண்ணாத்த’ படத்தின் மூலம் அரங்கேற்றம் செய்து வருகிறார்கள்.
சிம்புவின் ‘மாநாடு’படத்துக்கு செயற்கையான பஞ்சாயத்துகளை உருவாக்கி முடக்கிவிட்ட வகையில் தற்போது தீபாவளிக்கு ரஜினிகாந்த் நடித்துள்ள ’அண்ணாத்த’ மற்றும் விஷால் நடித்துள்ள ’எனிமி’ ஆகிய படங்கள் மட்டுமே திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன. இவ்விரு படங்களில் அண்ணாத்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட்ஜெயண்ட் நிறுவனம் வெளியிடுகிறது. இதனால், தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான திரையரங்குகளில் அண்ணாத்த படத்தை மட்டும்தான் திரையிட வேண்டும் என்று நேரடியாகவே வற்புறுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
இதையொட்டி’எனிமி’ படத்தின் தயாரிப்பாளர் வினோத் வெளியிட்டுள்ள ஒரு ஆடியோவில், ஓடிடி தளத்தில் எங்கள் எனிமி படத்தை வெளியிட நல்ல வாய்ப்பு இருந்தபோதும் திரையரங்குகளில்தான் படத்தை வெளியிடவேண்டும் என்கிற உறுதி எடுத்தோம். அதன்படி நவம்பர் 4 தீபாவளி நாளில் திரைக்கு வரவிருக்கிறோம். ஆனால் எங்களுக்குப் போதுமான திரையரங்குகள் கிடைக்காது என்கிற சூழல் இருப்பதாக அறிகிறேன்.
இதனால், நான் சார்ந்திருக்கும் சங்கம் சார்பானவர்கள் எங்களுக்கு 250 திரையரங்குகள் கிடைக்க உதவவேண்டும்.
தீபாவளி போன்றதொரு பெரிய பண்டிகையின்போது இரண்டு படங்கள் வந்தாலும் இரண்டும் இலாபம் சம்பாதிக்கும் வாய்ப்பு இருக்கிறது. சூப்பர் ஸ்டார் படமாக இருந்தாலும் 900 திரையரங்குகளில் திரையிட்டால் இரண்டாவது நாளே கூட்டம் குறைந்துவிடும் என்பதுதான் எதார்த்தம்.
இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.
அவர் நேரடியாக அண்ணாத்த படத்துக்கு 900 திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யவிருக்கிறார்கள் எங்களுக்கு நூற்றுச்சொச்சம் திரையரங்குகள்தாம் கிடைக்கும்போல் தெரிகிறது என்று சொல்லவில்லையென்றாலும் அவர் பேச்சின் சாரம் அதுதான்.
அவருடைய இந்தக் குரல்பதிவு திரையுலகினரிடையே வேகமாகப் பரவி வரும் நிலையில் இதே ரெட்ஜெயெண்ட் நிறுவனத்தால் தீபாவளிக்கு வரவிடாமல் முடக்கப்பட்ட மற்ற தயாரிப்பாளர்களின் ஆடியோ ஆதங்கங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கலாம்.