அபிஷேக் எனும் குட்டி உலக நாயகன்
பிக்பாஸில் இந்த ஞாயிறு அன்று கமலுக்கே tough கொடுப்பதற்கு ஒருவர் தோன்றி உள்ளதை கவனித்தேன். அவர் வேறு யாருமல்ல அபிஷேக் தான். “யாரெல்லாம் பிக்பாஸின் முந்தைய பருவங்களை பார்த்துள்ளீர்கள்?” என கமல் கேட்க பாதிக்கு மேல் பங்கேற்பாளர்கள் தாம் பார்க்கவில்லை என்கிறார்கள். அவர்களில் அபிஷேக் தான் ஏன் பிக்பாஸை பார்க்கவில்லை என்பதற்கு ஒரு வித்தியாசமான காரணத்தை தந்தார்:
“நான் உங்களோட தீவிரமான விசிறி. நான் உங்களோட சினிமா குறித்த தேடலில் இருக்கேன் சார். அதனால நீங்க பிக்பாஸை தொகுக்கிறீங்க என்பதாலே நான் பிக்பாஸைப் பார்க்கல.”
உங்களுக்கு ஏதாவது புரிந்ததா? கமலுக்கும் புரியவில்லை. அவர் விளக்கம் கேட்க அதற்கு அபிஷேக் அதே வரிகளை திரும்பவும் சொல்லி விட்டு “உங்களை பெரிய ஸ்கிரீனில் மட்டும் பார்க்க விரும்புறேன்” என்றார். உடனே கமல் பிக்பாஸ் மேடையை காட்டி “இதுவும் பெரிய திரை என்று தான் நினைக்கிறேன்.” என்றார். அது அபிஷேக்குக்கோ வேறு யாருக்குமோ புரியவில்லை. கமல் அடுத்து “என்னை ஆரம்பத்தில் இருந்தே குழப்புகிற ஆட்களில் நீங்களும் ஒருவர்” என்று அபிஷேக்கை நோக்கி சொன்னார். அதில் அந்த “ஆரம்பத்தில் இருந்தே” என்பதும் யாருக்கும் புரியவில்லை. இப்படி ஒட்டுமொத்தமாக இந்த உரையாடல் மிக மர்மமான ஒன்றாக மாறி விட்டது.
அந்த ஒரு சில நொடிகள் ஒன்றும் புரியாமல் கமல் தட்டுத்தடுமாறினாரே அதை நான் விழுந்து புரண்டு சிரித்து ரசித்தேன். நம்மை எத்தனை முறை இவர் இப்படி தலைசுற்ற வைத்திருக்கிறார், இவருக்கே காலில் டின் கட்ட ஒருத்தன் வந்துட்டாண்டா என நினைத்தேன்.
இந்த விசயம் மட்டுமல்ல, அபிஷேக்கின் மொழியே பிரத்யேகமானது. முழுக்க முழுக்க உருவக மொழியில் நீளநீளமான வாக்கியங்களுடன் பேசுகிறார். “இந்த வண்டு பூவுக்குள்ள புகுந்து தேனைக் குடித்து மயங்கி விழாம கரெக்டா திரும்பி வருங்கிறதை நீங்க பார்க்கத்தான் போறீங்க” என்பது போல சம்மந்தமில்லாத ஒரு இடத்தில் சொல்லுவார். அந்த பிக்பாஸ் வீட்டுக்குள் ஒரு வினோத மிருகத்தைப் போல அவர் இப்போது உலா வருகிறார்.
மற்றொரு விசயம்: அவரை ஒரு எதிர்மறை பாத்திரமாக பிக்பாஸ் சித்தரிக்க தொடங்கி விட்டார். இன்னும் ஒரு மாதத்தில் அவரை மக்களால் வெறுக்க செய்து ஜூலி, காயத்ரி, அர்ச்சனாவுக்கு நேர்ந்ததை இவருக்கும் செய்து விடுவார்கள். யுடியூபில் மணி ரத்னம், கௌதம் மேனன் ஆகியோருடைய கையைப் பிடித்து “லவ் யூ சார்” என்று நிமிடத்துக்கு பத்து தடவை சொல்லி குழந்தைத்தனமாக தெரிந்த பையனை அலட்சியமும் திமிரும் நிறைந்த, சூழ்ச்சிக்காரனாக காட்டி வெளியேற்றப் போகிறார்கள். எப்படியும் ஒருநாளைக்கு 10,000 தருவார்களா? அதுக்குப் போய் ஏன் இவ்வளவு அசிங்கத்தை தலையில் வாரிப் போட்டுக் கொள்ள வேண்டும்?
முகநூலில்…Abilash Chandran