எல்.கே.ஜியில் படிக்கும் குட்டிக்குழந்தையிடம் கூட ஒரு வீட்டு அட்ரஸ் கண்டுபிடிக்கச் சொன்னால் கூகுள் மேப்பை வைத்துக் கண்டுபிடித்துவிடும் இந்தக் காலத்தில் அட்ரஸ் மாறி பொண்ணு பாக்க வந்த மாப்பிள்ளை தொடர்பான ஒரு அரதப் பழசான கதைதான் இந்த ஓமணப்பெண்ணே…
ஐந்து வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் ஒரு கோடி ரூபாய்க்குள்ளான பட்ஜெட்டில் வெளியாகி பாக்ஸ் ஆபீஸில் முப்பது கோடி ரூபாய் வசூலித்த வெற்றிப்படம் ’பெல்லி சூப்புலு’.அதை ரொம்ப லேட்டாக தப்புலு தவறுதலுமாக ரீமேக்கியிருக்கிறார்கள்.
எல்லா காலத்திலும் வெற்றி பெறக்கூடிய மெல்லிய காதல் லைன்தான் இதிலும். இன்ஜினியரிங் படித்த, மற்ற எல்லோரையும் போல, எதற்கும் லாயக்கு இல்லாமல் இருக்கும் நாயகன் திருமணத்தில் வரும் வரதட்சனையை வைத்து வாழலாம் நினைக்க, இன்னொரு பக்கம் நாயகி திருமணத்தில் நாட்டம் இல்லாமல் ஆஸ்திரேலியா செல்லும் ஆர்வத்தில் இருக்கிறாள்.
அந்த சந்தர்ப்பத்தில் அட்ரஸ் மாறி நடக்கும் பெண் பார்க்கும் படலத்தில், ஒரு விபத்தாக மணப்பெண்ணின் அறைக்குள் நாயகன் மாட்டிக்கொள்ள…
இருவருக்கும் முன்னாள் காதல்கள் வேறு இருக்க இந்த முரண்பாடுகளை தாண்டி எப்படி இணைந்தார்கள் என்பதே கதை.
சில வரிக்கதைகளாக கேட்கும்போது சுவாரசியமான படமாக இருக்குமோ என்று தோணலாம். ஆனால் ரெண்டரை மணி நேரத்துக்கு நம்மை தியேட்டருக்குள் பூட்டிவைத்து சித்திரவதை செய்கிறார்கள்.
அந்த காலகட்டத்தில் எஃப்எம் ரேடியோ உச்சத்தில் இருந்தது. இன்றைக்கு இருப்பது போல் சமையல் யூடியூப் நிகழ்ச்சிகள் முன்னுக்கு வராமல் இருந்தன. ஆனால் இன்றைக்கு எல்லாமே நேர்மாறாகி உச்சத்தில் இருப்பது சமையல் யூடியூப் நிகழ்ச்சிகள்தான். ஒரு மதுரைக்கார தாத்தா ஒரு கோடிக்கும் மேல் சப்ஸ்க்ரைபர்கள் வைத்துக்கொண்டு ஒட்டுமொத்த இந்தியாவுக்கு சவால் விட்டுக்கொண்டிருப்பதெல்லாம் இவர்கள் கண்ணுக்குத் தெரியாமல் போனதெப்படியோ?
படத்தின் இன்னொரு பலவீனம் நடிக நடிகையர் தேர்வு. நாயகன் ஹரிஷ் கல்யாணும், நாயகி பிரியா பவானி சங்கரும் பளிச்சென்று ஓங்கு தாங்காக இருக்கிறார்களே ஒழிய கதையைத்தாங்குவதற்கான எந்த முயற்சியிலும் ஈடுபடவில்லை.
காமெடிக்கு என்று பெரிய பட்ஜெட்டில் நடிகர்களை தேடாமல் அன்புதாசன், அபிஷேக் குமாரை ஹரிஷின் நண்பர்களாக வைத்து காமெடியை ஒப்பேற்றி இருக்கிறார்கள். அதுவும் குறைவாகவே இருக்கிறது. ஹரிஷ் மற்றும் ப்ரியாவின் அப்பாக்கள் ஆக வரும் வேணு அரவிந்த், கே எஸ் ஜி வெங்கடேஷ் இருவரும் தெலுங்கு டிவி சீரியல்களை நினைவு படுத்துகிறார்கள்.
பரபரப்பாக ஆரம்பிக்கும் திரைக்கதை ஒரு இளமை விருந்தாக இருக்கப்போகிறது என்று நினைக்க வைக்கிறது. ஆனால், ஹரிஷ், பிரியா இருவரும் மாறி மாறி தங்கள் பிளேஷ் பேக்குகளை ஆரம்பித்து ஒரு கட்டத்தில் அது நீட்டிக் கொண்டே போக ’ஒரே ஏமிரா இதி? என்கிற அலுப்பை ஏற்படுத்துகிறது.
படத்தின் ஒவ்வொரு காட்சியும் அடுத்து இதுதான் நடக்கப் போகிறது என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. அதுவேதான் நடக்கவும் செய்கிறது. அதில் எந்த திருப்பங்களும் சுவாரஸ்யங்களும் இல்லை.
தன் மகளுக்கு கல்யாணம் செய்தே ஆக வேண்டும் என்று பிடிவாதம் பிடிக்கிற கே எஸ் ஜி வெங்கடேஷும், கல்யாணம் ஆனால்தான் மகன் உருப்படுவான் என்று உறுதியாக நம்பும் வேணு அரவிந்தும் ஹரிஷும், பிரியாவும் ஒன்று சேர்ந்து சொந்த தொழிலில் வெற்றி பெற்றதுடன் ஒருவர் மீது ஒருவர் வைத்துள்ள அன்பை வைத்து அவர்களைத் திருமண பந்தத்திலும் இணைக்கும் ஒரு முடிவுக்கு வந்திருக்க முடியும்.
அவர்கள் குடும்பத்தினர் அனைவருக்கும் இது தெரியும் என்றாலும் இரண்டு குடும்பத்தினரும் ஏன் அதை யோசிக்காமல் வேறு வேறு இடங்களில் பெண்ணையும் மாப்பிள்ளையையும் தேடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதும் புரியவில்லை.
படத்தில் இப்படி லாஜிக் பிழையாக 54 சீன்களில் 108 சந்தேகங்கள் எழுகின்றன.
மொத்தத்தில் ‘ஓமணப்பெண்ணே’ நம்மள பாடாப்படுத்துறாங்க அண்ணே…