கோலமாவு கோகிலா படத்தை இயக்கிய நெல்சன் சேவியர் அதே மாவை வைத்துக்கொண்டு, அதே ப்ளாக் ஹியூமரோடு முற்றிலும் புதிய கோலம் ஒன்றைப் போட முயற்சித்திருப்பதுதான் ‘டாக்டர்.
சிவகார்த்திகேயனை போகிற போக்கில் ராணுவ வீரர் என்று சொன்னால் ரசிகர்கள் நம்ப மாட்டார்கள் என்று பயந்தோ என்னவோ,…நாட்டின் எல்லையில் ராணுவ வீரர்களுக்கும், தீவிரவாதிகளுக்கும் நடைபெறும் துப்பாக்கிச்சூட்டில்தான் படம் தொடங்குகிறது.
ராணுவத்தில் மருத்துவராக பணிபுரியும் வருண் டாக்டராக சிவகார்த்திகேயன். இவர் வழக்கமான சினிமா பாணியில்,ஒரு நேர்மையான மருத்துவர்.
நாயகி பத்மினியாக பிரியங்கா மோகன். இவர்களுக்கு நடக்கவிருந்த திருமணம் ஒரு பிரச்சினையால் நிற்கிறது.
ஆனால் சிவா அப்பெண்ணை விடாப்பிடியாக விரட்டுகிறார்.
அச்சமயம், ஒரு கட்டத்தில் பள்ளிக்குப் போன பத்மினியின் அண்ணன் மகள் [ அர்ச்சனாவின் குழந்தை] ஒரு கும்பலால் கடத்தப்படுகிறார். .
அடுத்து என்ன? அந்தச் சிறுமியைக் கண்டுபிடிக்கக் களத்தில் இறங்கி தன்னை பிடிக்காது என்று சொன்ன நாயகிக்கு உதவுகிறார் ஹீரோ.டாக்டர் வருண்.
.அந்த கும்பல் யார்? அவர்களின் நோக்கம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.
அநேக முறை பார்த்துச் சலித்த ஃபார்முலா கதைதான் என்றாலும் தனது வித்தியாசமான ட்ரீட்மெண்டால் ஆபரேசனும் சக்சஸ் ஆகி பேஷண்டையும் பிழைக்க வைக்கிறார்.
சிவகார்த்தியனைப்பற்றி சொல்வதற்கு முன்னால் நாயகி பிரியங்கா மோகனைப் பற்றி சொல்லிவிடுவது உத்தமம். நடிப்பிலும் சரி, தோற்றத்திலும் சரி செம கியூட். ரஜினி,கமல் தவிர்த்து அனைத்து ஹீரோக்களுடனும் ஒரு ரவுண்டு வருவார். சிவகார்த்திகேயன் தனது சிலுமிஷ சேட்டைகளை மூட்டைகட்டிவிட்டு கொஞ்சம் டீஸண்டாக தோற்றமளிக்க முயற்சித்திருக்கிறார்.இந்தப் படம் வரைக்கும் அது ஓகேதான். அடுத்த படத்துக்கு வாரண்டி இல்லை.
இவர்கள் இருவருக்கும் இணையாக படத்தில் ஸ்கோர் செய்து தியேட்டர்களில் அப்ளாஸ்களை அள்ளுகிறார் ரெடின் கிங்ஸ்லி. ரசிக்க வைக்கும் அந்த குறும்புகளுக்கு சபாஷ் பாஸ். யோகிபாபுவும் பின்னிப்பெடலெடுக்கிறார்.
ஒளிப்பதிவாளர் விஜய் கார்த்திக்கு தனி பூச்செண்டு. ஒரு சாதாரண மசாலாப் படத்தை ஹைடெக் படமாக்கியதில் அவருக்குப் பெரும் பங்கு உண்டு. இம்சையமைப்பாளர் அனிருத் வழக்கம்போல் காதுகளுக்குள் கலவரமூட்டுகிறார்.
மற்றபடி ஒரு தடவை நிச்சயம் இந்த டாக்டரை விசிட் பண்ணலாம்.
எழுத்தாளர் சி.எஸ்.கே. தனது முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளபடி,…சிரிக்க விரும்புபவர்கள் டாக்டர் பார்க்கலாம். அப்படிச் சிரிக்க முடியாதவர்கள் டாக்டரைப் பார்க்கவும்.