‘மாநாடு’படத்தின் மாபெரும் வெற்றியால் மகிழ்ச்சிப் பெருக்கில் திளைத்துக்கொண்டிருக்கிறார் சிம்பு. ‘இந்தப் படம் எனக்கு மறு ஜென்மம் மாதிரி. இனி பழைய தவறுகளை மீண்டும் செய்ய மாட்டேன். முக்கியமாக என்னைக் கட்டிப்போட்டு வைத்திருந்த கெட்ட பழக்கங்களை விட்டுவிட்டு நல்ல பிள்ளையாக படங்களில் சின்சியராக நடிக்கப்போகிறேன்’என்று நண்பர்கள் மத்தியில் நெகிழ்கிறாராம்.
அம்மா உஷாவின் வயிற்றிலிருந்து வெளியே வந்த சில நாட்களிலேயே நடிக்க வந்த சிலம்பரசனுக்கு தற்போது 39 வயதாகிறது. குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதே ரசிகர்களைக் கொன்று எடுத்த அவரால் இளைஞராக ஆனபின்னர் ஏனோ வென்று எடுக்க முடியவில்லை.
காரணம் சினிமா மீது அவர் கொண்டிருந்த அலட்சிய மனோபாவம். தனது தனிப்பட்ட எண்டெர்டெயின்மெண்டுகளுக்காக படப்பிடிப்புகளில் கொஞ்சமும் பிடிப்பு இல்லாமல் இஷ்டத்துக்கு வந்து பல தயாரிப்பாளர்களை இந்திபிரச்சார சபா எதிர்த் தெருவில் பிச்சை எடுக்க வைத்தார்.
இதே கஷ்டத்தை மாநாடு தயாரிப்பாளருக்கும் கொடுத்ததால்தான் அப்படமும் 2 வருடங்கள் தாமதமானது. ஆனாலும் பல கெட்ட நேரங்களுக்கு மத்தியில் ஒரே ஒரு நல்ல நேரமும் அவருக்கு இருந்ததால் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டாகிவிட்டது. சிம்புவை வைத்து படம் தயாரித்து தப்பிப்பிழைத்த ஒரே தயாரிப்பாளர் என்ற பெருமையை சுரேஷ் காமாட்சி பெற்றார்.
இந்த வெற்றி சிம்புவின் ஞானக் கண்ணைத் திறந்துவிட்டிருக்கிறது. இதை ஒட்டி தன்னைத் திருத்திக்கொண்டு இனி, ஒழுங்காகப் படப்பிடிப்புகளில் கலந்துகொண்டு படங்கள் நடிக்க முடிவு செய்திருக்கிறாராம். அதிலும் குறிப்பாக குடிப்பழக்கத்தை முற்றிலுமாக நிறுத்தப்போகிறாராம். அதாகப்பட்டது பார்ட்டிகள் நடக்கிற பக்கமே இனி தலைவைத்துப் படுக்கமாட்டேன் என்று தந்தை டி.ஆர்.தாடியில் அடித்து சத்தியம் செய்திருக்கிறாராம்.
இந்தப் பார்ட்டிகள் என்றுஅவர் குறிப்பிடுவது இயக்குநர் வெங்கட் பிரபு, அவரது ப்ரோ ப்ரேம்ஜி அண்ட் கோஷ்டியினரை…ஆக இனி வெங்கட் பிரபு டைரக்ஷனிலும் நடிக்கமாட்டார் போல.