சமீபகாலமாக தமிழ் சினிமாவில் ஜாதிப்பஞ்சாயத்து கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக ‘ஜெய்பீம்’பட விவகாரத்தில் உச்சக்கட்டமாக பல விஐபிகளே கூட தங்கள் ஜாதிப்பாசத்தை வெளிப்படுத்தி எக்ஸ்போஸ் ஆகிக்கொண்டார்கள். பத்திரிகையாளர்களும் இதில் விதிவிலக்கில்லை. அவர்களது வாட்ஸ் ஆப் குருப்களில் ‘குரு நம்ம ஆளு’என்று கொம்பு சீவிக்கொண்டவர்களும் உண்டு.
இந்தப் பஞ்சாயத்துகள் சம்பந்தப்பட்ட படங்களுக்கு பெரும் பப்ளிசிட்டியாகவும் மாறி அப்பட வெற்றிக்கு உதவுவதால் இண்டஸ்ட்ரியில் பலபேர் ஜாதிப் பஞ்சாயத்து கதைகளுடன் களம் இறங்கத் தயாராகி வருகிறார்கள். அவர்களும் முதல் ஆளாய் வரிந்துகட்டிக்கொண்டு நிற்பவர் ஏற்கனவே பலஜதிப்படங்களால் பல கோடிகளைச் சம்பாதித்த நடிகர் சசிக்குமார். அவர் கையிலெடுக்கப்போகும் கதை தேவர் இன மக்கள் குறித்த பல சர்ச்சையான கருத்துக்களைக் கொண்டுள்ள ‘குற்றப்பரம்பரை’.
இதே கதையை தமிழின் முன்னணி இயக்குநர்கள்களான பாரதிராஜா மற்றும் பாலா ஆகிய இருவரும் உருவாக்கப்போவதாக அறிவித்தனர். இதனால் 2016 ஆம் ஆண்டு பெரும் சர்ச்சை எழுந்தது. ஒரே ஜாதியைச் சேர்ந்த அவர்களே தங்களுக்குள் மல்லுக்கட்டிக்கொண்டனர்.
அப்பிரச்சினை புகைந்துகொண்டிருந்தபோதே, வேல ராமமூர்த்தி எழுதிய அந்தக் கதையை வேறு சிலரும் இயக்க ஆர்வம் காட்டி வந்தனர்.
இயக்குநர் பாலா அம்முயற்சியை ஒரு கட்டத்தில் கைவிட, பாரதிராஜா இன்னும் கொஞ்சகாலத்துக்குப் பிடிவாதமாக இருந்து வழக்கம்போல் பத்துப்பதினோராவது முறையாக கைவிட்டார்.
முன்னதாக அப்படத்திற்கு தேனியில் பெரிய அளவில் தொடக்கவிழாவெல்லாம் நடத்தினார்கள்.உசிலம்பட்டி அருகிலுள்ள பெருங்காமநல்லூர் என்ற இடத்தில் இப்படத்தின் பூஜை நடைபெற்றது.. ஆனால் அதோடு அப்படியே நின்று போனது.
இப்போது தமிழ் சினிமாவில் ஜாதிப் பஞ்சாயத்து சப்ஜெக்டுகளுக்கு பெரும் மவுசு ஏற்பட்டுள்ளதால், குற்றப்பரம்பரைக்கு உயிர் கொடுக்கும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறாராம் சசிகுமார். வேலராமமூர்த்தியும் அவருடன் இணைந்து பணியாற்றவிருப்பதாகச் சொல்லப்படுகிறது. சசிகுமார் இயக்கத்தில் அவரே நடிப்பது அல்லது இயக்கம் மட்டும் செய்து வேறு நடிகர்களை நடிக்கவைப்பது என்பது குறித்தெல்லாம் ஆலோசனை நடந்து வருகிறதாம்..ஒளிப்பதிவாளர் வேல்ராஜ் இப்படத்தைத் தயாரிக்கவிருக்கிறாராம்.
துட்டு வருத்துன்னா போதாதா? எத்தனை ஜாதி மக்கள் கட்டி உருண்டாலும் இவங்களுக்கு என்ன கவலை?