நேற்று மதியம் 3 மணிக்குப் பற்றிக்கொண்ட பரபரப்பு நள்ளிரவு 3 மணி வரை நீடித்து ஒருவழியாக இன்று காலை 7.30 மணி காட்சிகள் தொடக்கமாக மாநாடு படம் ரிலீஸானது.
படத்தின் பட்ஜெட் பல மடங்கு அதிகமானதால் ஏற்பட்ட நிதி நெருக்கடியால் மாநாடு படம் சிக்கலிலி சிக்கித் தவித்ததை திரையுலகப் புள்ளிகள் அறிவார்கள். ஆனாலும் பெருமுயற்சி மேற்கொண்டு இப்படத்தை ரிலீஸ் செய்ய தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி முயன்ற வகையில் நேற்று அவருக்கு பெருத்த அவமானமும் தோல்வியுமே மிஞ்சியது.
படத்தின் ரிலீஸ் இல்லை என்று ஆனவுடன் சமூக வலைதளங்கள் முழுக்க தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு ஆதரவாக,…’அண்ணா நாங்கள் உங்களுடன் இருக்கிறோம்…’மாநாடு’தாமதமாக ரிலீஸ் ஆனாலும் நிச்சயம் வெற்றிபெறும்,…திரையுலகப் புள்ளிகளே மாநாடு’ ரிலீஸாக தயாரிப்பாளருக்கு தோள் கொடுங்கள்… என்பது போன்ற கோஷங்கள் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டிருந்தன.
அந்நிலையில் சில நல்ல மனது படைத்த திரை உள்ளங்கள் தயாரிப்பாளருடன் கைக்கோர்த்து நடத்திய பேச்சு வார்த்தையில் நள்ளிரவில் சுமுக முடிவு ஏற்பட்டு படம் ஒரு வழியாக ரிலீஸாகிவிட்டது. இதற்கு முன் ஒதுங்கியிருந்த சிம்புவின் தந்தை டி.ஆரும் படத்தின் சாடிலைட் உரிமையை குறிப்பிட்ட ஒரு விலைக்கு வாங்கிக்கொண்டு தனது பங்களிப்பையும் செய்திருக்கிறார்.