சூர்யா நடிப்பில் வெளிவந்துள்ள ஜெய் பீம் மீதான பாமக கட்சியினரின் வன்மம் நிறைந்த பேச்சுக்கள் அவர்களின் சாதீய வெறி, வன்முறை குணங்களை பறைசாற்றுவதாக வெளிப்படுகின்றன.
பழங்குடியின இருளர் மக்கள் பற்றி பேசும் இப்படம் பொதுமக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. பழங்குடியினர், ஆதிக்கசாதி மற்றும் காவல்துறை அதிகாரத்தால் படும் இன்னல்களை மிகவும் தத்ரூபமாக காட்டியுள்ள இயக்குனரையும், சூர்யாவின் யதார்த்தமான நடிப்பையும் பலரும் பாராட்டி வருகின்றனர்.
பாமக இளைஞரணி செயலாளர் அன்புமணி ஜெய்பீம் படத்தின் ஒரு சில காட்சிகளுக்கு கண்டனம் தெரிவித்து நீண்ட அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். இந்த அறிக்கைக்கு சூர்யா பதில் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார். அப்படத்தில் ஒரு காட்சியில் பின்னணியில் வரும் காலண்டரில் அக்னிச்சட்டி இடம் பெற்றிருப்பதால் அது வன்னியர்களைக் குறிப்பதாக பாமக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
இந்தக் கருத்தைக் கேட்டதும் சூர்யா இயக்குனருடன் கலந்து பேசி அக்காட்சியில் பின்னணியில் வரும் அந்தக் காலண்டர் படத்தை மாற்றச் செய்துவிட்டார். அத்தோடு பிரச்சனை முடிந்திருக்கும் என்று நினைத்தால் அது தான் இல்லை.
இதை சாதி வெறி கிளப்பி தங்களுக்கு வலு சேர்த்துக் கொள்ள பாமக காடுவெட்டி குருவின் மருமகன் சூர்யாவின் அடுத்த படம் வெளியிடப்படும் தியேட்டரைக் கொளுத்துவோம் என்றார். பாமக மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் பழனிசாமி காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தார். இது சம்பந்தமாக சூர்யா மீது புகார் அளித்திருந்தார். சூர்யா பதில் விளக்கம் அளித்திருந்தாலும் வன்னியர் சங்க எதிர்ப்புக் குரலால் அக்காட்சியையும் மாற்றியிருந்தார்.
ஆனாலும் மாவட்டச் செயலாளர் பழனிச்சாமி சூர்யாவை அடிப்பவருக்கு 1 லட்சம் பரிசு என்று திமிராகப் பேசியுள்ளார். தாங்கள் பெரும் பலமுள்ள சாதியினர். தங்களை தட்டிக் கேட்க யாருமில்லை என்கிற தெனாவெட்டில் பேசியிருக்கும் பழனிச்சாமியை பலதரப்பினரும் கண்டித்துள்ளனர்.
ஏற்கனவே பாரதிராஜா, நியாயமான படைப்புகள் தரும் திரைத்துறையினரை இது போன்று மிரட்டுவது நல்லதல்ல என்று அறிக்கை விட்டுள்ள நிலையில், நடிகை ரோகிணி சூர்யாவை மிரட்டும் வகையில் பேசியிருக்கும் பாமக மாவட்டச் செயலாளர் பழனிச்சாமியை கண்டித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
“ஏற்கனவே பாமக தலைவர் சுட்டிக் காட்டியதும், திரைப்படத்தில் நாளேட்டில் வந்த படத்தை மாற்றியிருக்கிறார் சூர்யா. அதற்கு பின்பும், கருத்தை கருத்துக் கொண்டு எதிர்கொள்ளாமல், சூர்யாவுக்கு எதிராக வன்மத்தைத் தூண்டுவதை நான் கண்டிக்கிறேன்” என்று ரோகிணி ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
மற்ற பெரும் நடிகர்கள் எல்லாம் சாதியக் கட்சிக்காரர்களின் வன்முறைக்குப் பயந்து தான் பேசாமல் இருக்கிறார்களா. ரஜினி, கமல், அஜித், விஜய் போன்ற பிரபலங்கள் இன்னும் வாய் திறக்காமல் அமைதியாக வீரம் காத்துக் கொண்டிருக்கும் போது, துணிச்சலாக நின்று சூர்யாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்திருக்கும் நடிகை ரோகிணி நிச்சயம் பாராட்டப்பட வேண்டியவர்.
ஊடகங்களும், பொதுமக்களும் நியாயத்தைப் பேசியிருக்கும் சூர்யாவுக்கு ஆதரவாக என்றும் நிற்பார்கள் என்பதை சாதிச் சங்க கட்சிக்காரர்கள் உணரவேண்டும். சாதி வெறிக் கூச்சல்களால் சாதிக்காரர்கள் வேண்டுமானால் ஆதரிக்கலாம். ஆனால் தற்போது பெரும்பாலான பொது மக்களின் ஆதரவை பாமகவினர் இழக்க நிறையவே வாய்ப்பு உருவாகியிருக்கிறது.
இப்படி பாமககாரர்கள் ஆய்.. ஊய் என்று மிரட்டிக் கொண்டிருக்கும் போதே சூர்யா சத்தமில்லாமல் , ஜெய்பீம் திரைப்படத்தின் மையப் பாத்திரமான செங்கேணியின், நிஜ வாழ்வு மனிதரான ராஜாக்கண்ணுவின் மனைவி பார்வதி அம்மா அவர்களுக்கு, தனது 2D நிறுவனம் சார்பில் ₹15 லட்சம் ரூபாய் வங்கி வைப்பு நிதியாக வழங்கியுள்ளார்.
ஜெய்பீம் வெற்றிக்கும், சூர்யாவின் இந்த மனிதநேயத்தையும் பாராட்டி, நடிகர் சூர்யா அவர்களை நேரில் சென்று தமிழ்நாடு கம்யூனிஸ்ட் கட்சி சிபிஎம் ன் மாநிலச் செயலாளர் தோழர் கே.பாலகிருஷ்ணன் மற்றும் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் சந்தித்து, பாராட்டி, நன்றி தெரிவித்தனர். சமூக நீதி பேசும் திமுக, அதிமுக , மதிமுக போன்ற எந்தக் கட்சிகளும் இதுபற்றி இன்னும் வாய்திறக்கவில்லை.
#ஜெய்பீம்