எழுத்தாளர் Saravanakarthikeyan Chinnadurai முகநூல் பதிவு
ஜெய் பீம்
=========
1) தமிழின் முதல் முழுமையான தலித் படம் என்றே ஜெய் பீமை அடையாளப்படுத்தத் தோன்றுகிறது. இருளர் என்ற பழங்குடி இனம் எப்படி குற்றச் சமூகமாக முத்திரை குத்தப்பட்டு சுரண்டி அழிக்கப்படுகிறது என மிகுந்த நம்பகத்தன்மையுடன் காட்டுகிறது. மிக முக்கியமான, மிக அழுத்தமான முயற்சி.
2) விசாரணை, கர்ணன், மேற்குத் தொடர்ச்சி மலை ஆகிய படங்களை அடிப்படைக் கதையிலும் சில காட்சிகளிலும் இப்படம் நினைவூட்டினாலும் அவற்றிலிருந்து எங்கே விலகுகிறதெனில் இது ஓர் உயிருள்ள சினிமாவாகத் திரண்டு நிற்கிறது; வெறும் தகவல் தொகுப்பாகவோ, குறியீட்டுக் களஞ்சியமாகவோ எஞ்சவில்லை.
3) பழங்குடிகளுக்கு நிகழும் அத்தனை வன்கொடுமைகளுக்கும் எதிராக இப்படம் இரண்டே போராட்ட முறைகளைத்தான் முன்வைக்கிறது. ஒன்று நீதிமன்றத்தில் நிகழும் சட்டப் போராட்டம். அடுத்தது மக்கள் ஒன்றிணைந்து தெருவில் இறங்கி நடத்தும் போராட்டம். பல பா. ரஞ்சித் படங்களைப் போல், கர்ணன் போல், அசுரன் போல் வன்முறையைத் தீர்வாகச் சொல்வதில்லை. ஆக, இது ஓர் ஆக்கப்பூர்வ வழிமுறையை (கிட்டத்தட்ட காந்திய – அம்பேத்கரிய அணுகுமுறை இது) பார்வையாளனுக்குக் கடத்துகிறது.
4) தலித் அல்லாதோர் பங்களிப்பு மற்றும் ஒத்துழைப்பு தலித் விடுதலைப் போரில் முக்கியம் என்பதை மறைமுகமாக அடிக்கோடிடுகிறது. உதாரணமாக வக்கீல் சந்துரு, ஐஜி பெருமாள்சாமி, ஆசிரியை மைத்ரா, கான்ஸ்டபிளாக வருபவர், ஹேபியஸ் கார்பஸ் வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் எனப் பலரைச் சுட்ட முடியும். ஒருபக்கம் முழுக்கக் கீழ்மை நிறைந்த பிற சாதிக்காரர்கள் காட்டப்பட்டாலும் மறுபுறம் இவர்களின் இருப்பும் அவசியமும் பதியப்படுகிறது. சொல்லப் போனால் இவர்களே வழக்கின் திசையை நீதியின் பக்கம் திருப்புகின்றனர். எதிர்காலத்தில் தலித் விடுதலைப் போராட்டம் என்பதே தலித் அல்லாதோர் இரு பிரிவாய் நின்று போராடுவதாகவே இருக்கும் என்கிற எண்ணத்தை ஏற்படுத்துகிறது. (Not to say, இதன் பொருள் தலித்கள் அதை வேடிக்கை பார்ப்பர் / பார்க்க வேண்டும் என்பதல்ல.)
5) எல்லாவற்றுக்கும் மேல் ஒரு பழங்குடி / தலித் அல்லாத சராசரித் தமிழ்ப் பார்வையாளனின் மனசாட்சியை உலுக்கி அவனைக் குற்றவுணர்வு கொள்ளச் செய்கிறது படம். அதன் வழி அவனது சிந்தையைத் தட்ட முயற்சிக்கிறது. அதற்காகவே வன்கொடுமைக் காட்சிகள் அதிகமாகவும் நேரடியாகவும் வைக்கப்பட்டிருக்கின்றன என்றாலும் (ஏ சான்றிதழ்) உத்தேசத்தின் அடிப்படையில் மட்டுமின்றி அக்காட்சிகளை நுட்பமாகக் கதையில் கோர்த்த வகையிலும் மிக நியாயமான செருகல் ஆகிறது.
6) தேவர், வன்னியர், கவுண்டர், நாயுடு, இருளர் எனச் சாதிப் பெயர்களை நேரடியாகக் குறிப்பிட்டு வசனம் வைத்த முதல் படம் என்ற வகையிலும் படம் முக்கியத்துவம் பெறுகிறது. பா. ரஞ்சித், மாரி செல்வராஜ், வெற்றிமாறன் படங்கள் கூட செய்யத் துணியாத விஷயம்.
7) படத்தில் heroic moments எவை என யோசிக்கிறேன். செங்கேணியைப் போலீஸ் வீடு வரை கொண்டு வந்து விடும் காட்சி இயல்பாக நம் மனதில் தோன்றக்கூடும். ஆனால் அதை விடவும் உயர்வான காட்சி என நான் கருதுவது – பணம் தருவதாக டிஜிபி அழைத்துச் சமரசம் பேச முனைகையில் செங்கேணி அதற்குச் சொல்லும் பதில்.
லிஜோமோள் ஜோஸும், மணிகண்டனும் நல்ல நடிப்பு. துணை நடிகர்களுக்கான தேசிய விருதைத் தட்டி வரும் வாய்ப்புண்டு. நல்ல ஒளிப்பதிவு, நல்ல வசனம், நல்ல இசை.
9) தர்க்க மீறல்கள், மிகைக் காட்சிகள் எனக் குறைகளும் இதில் உண்டுதான். ஆனால் அவற்றைப் படத்தை எல்லோரும் நன்கு கொண்டாடி முடித்த பின் சாவகாசமாகப் பார்க்கலாம். தவிர, அவை படத்தைக் கொண்டாடத் தடையாக இருக்கவில்லை.
10) ஒரே உறுத்தல் நிஜத்தில் ராஜாகண்ணு வழக்கில் கம்யூனிஸ்ட்களின் போராட்டம் நீதி கிடைக்க முக்கியப் பங்காற்றியது என அறிகிறேன். ஆனால் படம் அதைப் பதிவு செய்யத் தவறுகிறது. மாறாக சந்துரு பாத்திரத்தையே கம்யூனிஸச் சாயமிட்டுச் சித்தரித்து விடுகிறது இத்திரைப்படம்.
11) தமிழில் வெண்ணிலா கபடிக் குழுதான் தலித் ஒடுக்குமுறையைக் காட்டிய முதல் படம் எனக் கருதுகிறேன். அட்டக்கத்தி தலித் பின்புலம் என்றாலும், நல்ல படம் எனினும் அதில் தலித் சிக்கல்கள் நேரடி அங்கமல்ல. பிறகு மெட்ராஸ், கபாலி, காலா, சார்பட்டா பரம்பரை, அசுரன், மாவீரன் கிட்டு, பரியேறும் பெருமாள், கர்ணன், அறம், மேற்குத் தொடர்ச்சி மலை, காக்கா முட்டை, விசாரணை, வட சென்னை என தலித் அரசியலை நேரடியாக / மறைமுகமாக / வலிந்து பேசிய படங்கள் யாவும் mediocre முயற்சிகளே. இச்சூழலில்தான் ஜெய் பீம் முக்கியத்துவம் பெறுகிறது.
12) சில நாள் முன் ஒரு நரிக்குறவர் இனப் பெண் பந்தியில் அனுமதிப்பதில்லை எனப் பேசிய காணொளியை இப்படத்துடன் ஒப்பு நோக்கலாம். உண்மையில் இன்னும் இங்கே எதுவுமே மாறவில்லை. ஆனால் சில மூளை இல்லாத சாதி வெறியர்கள் PCR Act, SC/ST POA Act எல்லாம் தவறாகப் பயன்படுகிறது என வியாக்கியானமாகப் படமெடுக்கிறார்கள்.
13) இப்படம் ஒரு சரித்திரத்தின் தொடக்கம். இயக்குநர் த.செ.ஞானவேலுக்கும் தயாரிப்பாளர் சூர்யாவுக்கும் சல்யூட்.