மற்ற துறைகளில் பொதுமக்கள் மத்தியில் நல்ல பெயர் சம்பாதித்துவரும் திமுக திரைத்துறையைப் பொறுத்தவரை துவக்கத்திலிருந்தே கெட்ட பெயரைத்தான் சம்பாதித்து வருகிறது.காரணம் அனைவரும் அறிந்த சன் பிக்ஷர்ஸ், ரெட் ஜெயண்ட் என்கிற இரண்டு பிராண்டுகள்தான்.
சன் பிக்ஷர்ஸ் முக்கியமான படங்களை மீண்டும் அன்புடன் மிரட்டி வாங்கத்துவங்கியிருக்க, ரெட்ஜெயண்ட் தியேட்டர்களை முழுக்க தன் பிடிக்குள் கொண்டுவரத் துவங்கியுள்ளது.
இந்நிலையில் முற்றிலுமான ஒரு புதுப்பிரச்சினை சிம்பு பட வட்டாரத்தையும் அவரது ரசிகர்களையும் கொதிக்க வைத்துள்ளது. அதாவது ‘அண்ணாத்த’படம் பார்க்கும்போது மக்கள் மீது காட்டாத அக்கறையை ‘மாநாடு’பார்க்கும்போது கொண்டுவந்துள்ளது.
தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை நவம்பர் 18ஆம் தேதி சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டது. அந்தச் சுற்றறிக்கையில் பொது இடங்களுக்கு வருபவர்கள் தடுப்பூசி செலுத்தியிருப்பதைக் கட்டாயமாக்கும் வகையிலான வாசகங்கள் இடம்பெற்றிருந்தன.
1. தெரு அல்லது பொது இடம்.
2. மார்க்கெட், தியேட்டர் அல்லது வேறு பொழுதுபோக்கும் இடம்.
3. பள்ளி, கல்லூரி, விளையாட்டு மைதானம் போன்ற இடங்கள்.
4. ஹோட்டல், ஹாஸ்டல், தங்கும் விடுதிகள், சத்திரங்கள், கிளப்கள்.
5. தொழிற்சாலைகள், கடைகள்…ஆகியவை அதில் குறிப்பிடப்பட்டிருக்கின்றன.
இந்த அறிவிப்பு திரைத்துறைக்கு அதிர்ச்சியூட்டுவதாக அமைந்திருக்கிறது. நவம்பர் 25 ஆம் தேதி சிம்பு நடித்த மாநாடு படம் வெளியாகவிருக்கிறது. இந்நிலையில் இந்த அறிவிப்பு அப்படத்துக்கு எதிராக இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ்காமாட்சி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்,…உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்குதான் முதல்முறை… அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்! என்று சொல்லியிருக்கிறார்.
அப்பதிவில் கருத்துத் தெரிவிக்கும் பலரும் ’அண்ணாத்த’ படம் வெளியாகும் நேரத்தில் இப்படி ஒரு உத்தரவு போடாமல் ’மாநாடு’ படம் வெளியாகும் நேரத்தில் இப்படி ஒரு உத்தரவு போட்டிருப்பது உள்நோக்கம் கொண்டது என்று சொல்லிவருகிறார்கள்.
இது தொடர்பாக, இன்றோ நாளையோ தலைவிரி கோலமாக டி.ஆரும், லேடி டி.ஆரான அவரது மனைவி உஷாவும் பத்திரிகையாளர்களைச் சந்தித்து கொக்கரிப்பார்கள் என்று வெதர்மேனின் வானிலை அறிக்கை தெரிவிக்கிறது.