ஜெய்பீம் படத்தின் நிஜ வாழ்க்கை சம்பவத்தில் பாதிக்கப்பட்ட ராஜாக்கண்ணு படுகொலையில் பார்வதியம்மாவுக்கும் அவரது சமூகத்திற்கும் 13 வருடங்கள் நீதிமன்றத்தில் போராடி வெற்றி வாங்கித் தந்தவர் சி.பி.எம் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த தோழர் கோவிந்தன்.
ஒரு வாரத்திற்கு முன்பாக தோழர் கோவிந்தன் அவர்களுக்கு ஒருவர் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருக்கிறார். ராஜாக்கண்ணு லாக்கப் படுகொலையை வெளிக்கொண்டு வருவதில் அவருடைய செயல்பாட்டிற்காக பாராட்ட வந்திருப்பதாக சொல்லியிருக்கிறார். தனக்கு வேலையிருக்கிறது, எனவே, தற்போது வர சாத்தியமில்லை என்று சொன்ன பிறகு, சென்னையிலிருந்து வந்திருக்கும் வழக்கறிஞர் நான் என்று சொல்லியிருக்கிறார்.
அவ்வளவு தூரமிருந்து வந்த மனிதரின் உணர்வுக்கு மதிப்பளித்து அவரை சந்திக்க வேண்டும் என்று தோழர் கோவிந்தன் அவரை சந்தித்திருக்கிறார். நலம் விசாரிப்புக்கு பின்பு தான் வந்த நோக்கத்தை தெரிவித்திருக்கிறார்.
வழக்கறிஞர்: ஜெய் பீம் படத்துல நம்ம சாதிய ரொம்ப கேவலமாக காட்டியிருக்காங்கன்னு நீங்க சொல்லனும்.
கோவிந்தன்: அப்படி எதுவும் எனக்கு தெரியல.
வழக்கறிஞர்: அப்படித்தான் கேவலமா காட்டியிருக்காங்க. எனவே, அதனை கண்டிக்கிறோம்னு சொன்னீங்கன்னா நல்லது.
கோவிந்தன்: அப்படி எதுவும் இல்லாத போது, எதுக்காக கண்டிக்கனும்.
வழக்கறிஞர்: சரி, நாங்க வழக்கு போடப் போறோம். கோர்ட்டுல வந்து சாதிய இழிவுபடுத்தியிருக்காங்க அப்படின்னு நீங்க சொல்லனும்.
கோவிந்தன்: அப்படி எதுவும் இல்லாத போது எதுக்கு கோர்ட்டுக்கு வரனும்.
வழக்கறிஞர்: சரி. இதெல்லாம் போகட்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக நம்ம சாதி தான் இந்த போராட்டத்தை நடத்துச்சுன்னு சொல்லலாம்ல.
கோவிந்தன்: இல்ல. இது கட்சிதான நடத்துச்சு. சாதி நடத்துச்சுன்னு எப்படி சொல்ல முடியும்?
வழக்கறிஞர்: நீங்க, வழக்கறிஞர் சந்திரசேகரன் எல்லாரும் நம்ம சாதியில்லையா?
கோவிந்தன்: சாதி பிறப்பால வந்தது. வெவ்வேறு சாதியில பிறந்தவங்களும் கம்யூனிஸ்ட்டா இருக்கோம். நாங்க கம்யூனிஸ்ட்டு என்ற முறையிலதான் இந்த பிரச்சனைகளை நீதிக்காக நின்னோம். கட்சி மொத்தமும் நின்னுச்சு.
இந்த உரையாடல் நாகரீகம் கருதி எடிட் செய்யப்பட்டுள்ளது. கோவிந்தன் என்கிற பாலை, கள் ஆக்க வழக்கறிஞர் கடும் முயற்சி எடுத்திருக்கிறார்.
தன்னை பாலாக நினைத்துக் கொண்டிருந்த வழக்கறிஞரை நீங்கள் ‘கள்’ தான் என்று புரிய ⚖️ வைத்து அனுப்பியிருக்கிறார் தோழர் கோவிந்தன்.
பகிர்வு. தோழர் கனகராஜ்/CPM.