நாளை 25ம் தேதி வியாழனன்று ரிலீஸாவதாக இருந்த சிம்புவின் ‘மாநாடு’ அடுத்த ரிலீஸ் தேதி கூட அறிவிக்கப்படாமல் திடீரென்று தள்ளிப்போயிருப்பது திரையுலகினரை மாபெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. லேட்டா வந்தாலும் இந்த ஒரு படமாவது சேதாரமில்லாமல் வந்து சேரப்போகிறதே என்று மலைபோல் நம்பியிருந்த சிம்புவின் ரசிகர்கள் படுபயங்கர அப்செட்டுக்கு ஆளாகியிருக்கிறார்கள்.
பல லட்சக்கணக்கில் தடபுடல் விளம்பரங்கள், அட்வான்ஸ் புக்கிங் எல்லாம் நடந்துகொண்டிருந்த நிலையில், இப்படிப்பட்ட அதிர்ச்சியான திருப்பத்துக்கு என்ன காரணம் என்று திரையுலக வட்டாரங்களில் விசாரித்தபோது பட ரிலீஸ் தள்ளிப்போக முக்கிய காரணமே சிம்புவின் தந்தை டி.ராஜேந்தர்தான் என்று அவரை நோக்கி ஏழெட்டு சுட்டு விரல்களை நீட்டுகிறார்கள்.
இந்தப்படத்தின் பட்ஜெட்டே திட்டமிட்டதை விட [அதுவும் சிம்புவால்தான்] பலமடங்கு எகிறிவிட்ட நிலையில், இதன் ரிலீஸுக்குக் குறுக்கே சிம்புவின் பழைய பட பஞ்சாயத்துகள் வராமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்பு மூலம் டி.ஆருக்குக் கோரிக்கை வைத்திருந்தாராம். அதை முதலில் ஏற்றுக்கொள்வதுபோல் தலையைச் சிலுப்பிய டி.ஆர். கடைசி நேரத்தில்,,,’நான் தலையைச் சிலுப்பினது முடியாதுன்னு…எனக்குத் தெரியும் இந்தப் பேரம் படியாதுன்னு’ என்று ஜகா வாங்கிக்கொண்டு ரிலீஸ் தொடர்பான உதவிகள் எதற்கும் தலைகாட்ட மறுத்துவிட்டாராம்.
மகனின் தொடர்ச்சியான கால்ஷீட் சொதப்பலால் பட்ஜெட் ஏறிப்போன படத்தை ரிலீஸ் செய்ய டி.ஆரே வராதபோது, நான் யாரோ…நீ யாரோ…என்று மதுரை அன்பானவர் உட்பட அனைவரும் ஒதுங்கிக்கொள்ள, ‘மாநாடு’ வேறு வழியின்றி ரத்தாகிவிட்டது.
இனி அடுத்தடுத்து டிசம்பர்,ஜனவரிகளில் பல முக்கியப் படங்கள் ரிலீஸாக கியூ கட்டிக் காத்திருக்கையில் ‘மாநாடு’படத்தின் கதையை நினைத்தால் கவலையாகத்தான் இருக்கிறது.