1984-ம் ஆண்டு ஜனவரி மாதம் 22-ம் தேதி கேரளாவில் நடந்த உண்மைச்சம்பவம் ஒன்றை திரைப்படமாக்கி, மலையாள நடிகர் துல்கர் சல்மான் நடிப்பில் இன்று ரிலீஸாகியிருக்கிறது ‘குரூப்’ சினிமா. 37 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த அந்த சம்பவம் கேரள மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்திருப்பதால் பெரும் சர்ச்சைகளுக்கு நடுவேதான் இப்படமே ரிலீஸாகியுள்ளது.
பல மர்மங்கக் நிறைந்த சுகுமார குரூப்பின் வாழ்க்கைச் சம்பவங்களை அடிப்படையாகக்கொண்ட `குரூப்’ என்ற சினிமாவை ஸ்ரீநாத் ராஜேந்திரன் தயாரித்திருக்கிறார். சுகுமார குரூப்பால் கொலை செய்யப்பட்ட சாக்கோவின் குடும்பத்தினர் இந்த சினிமாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். “ஒரு கொலைகாரனை ஹீரோவாக காட்டக்கூடாது” என சாக்கோவின் மனைவி சாந்தம்மா, மகன் ஜிதின் ஆகியோர் தெரிவித்தனர். இதை அடுத்து ஒரு ஆண்டுக்கு முன்பு குரூப் சினிமா சாக்கோவின் குடும்பதினருக்கு மட்டும் திரையிட்டு காட்டப்பட்டு அவர்களது சம்மதத்துடன் ரிலீஸ் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
சின்னச்சின்ன குற்றச்செயல்களில் ஈடுபடும் ஒரு கிரிமினல் குற்றவாளி ஒரு கட்டத்தில் இண்டர்நேஷனல் ரவுடியாகி, தான் இறந்துவிட்டதுபோல் போலீஸுக்குக் காட்ட தன்னைப்போல் உள்ள ஒருவனை கொலை செய்யும் அளவுக்குப் போகும் நிகழ்வுகள் தான் கதை.
எண்பதுகளில் நடந்த கதை என்பதால் அக்காலத்துக்கேற்ப விதவிதமான உடைகள் மற்றும் தோற்றங்கள் என படம் நெடுக பட்டையைக் கிளப்பியிருக்கிறார் துல்கர் சல்மான். ஆனால் வழக்கமான துல்கரின் கிளாசிகல் டச் நிச்சயாக மிஸ்ஸிங்.
அவருக்கடுத்து முக்கிய வேடத்தில் நடித்திருக்கும்,விசாரணை அதிகாரியாக வரும் இந்திரஜித் அருமையாகப் பொருந்தி ரசிக்க வைத்திருக்கிறார். ஷோபிதாதுலிபலா என்கிற வாய்க்குள் நுழையாத பெயர் கொண்டவர்தான் நாயகி. துல்கரின் காதலியாக மனைவியாக டம்மியாக வந்துபோகிறார். அவரிடம் எந்த வித சிறப்பம்சமும் இல்லாத நிலையில் டைரக்டர் அவரை எப்படி நாயகியாக்கினார் என்பது மில்லியம் டாலர் கேள்வி.
ப்டத்தின் இரண்டாம் பாதியில் ஒரு பரிதாபமான பாத்திரத்தில் ஒரு சில நிமிடங்களே வந்து போகிறார் நம்ம பரத்.இவ்வளவு சின்ன கேரக்டரில் நடிக்க ஒத்துக்கொள்லுமளவுக்கு அவருக்கு எவ்வளவு பிரச்சினைகளோ அய்யோ பாவம்.
நிமிஷ்ரவி ஒளிப்பதிவு கதைக்கேற்ப அமைந்திருக்கிறது.சுஷின் ஷ்யாமின் இசையில் பாடல்கள் காட்சிகளோடு கலந்து ஒலிக்கின்றன. பின்னணி இசை கொஞ்சம் சவ்வுதான்.
கலைஇயக்கம் செய்திருக்கும் பங்லனுக்கு வேலை அதிகம். எண்பதுகளின் மும்பை, கேரளா, தொடர்வண்டி மற்றும் விமான நிலையங்களை காட்சிப்படுத்த கடுமையாக உழைத்திருக்கிறார். அவரது உழைப்பு நிச்சயம் கவனம் ஈர்க்கிறது.
படத்தொகுப்பாளர் விவேக்ஹர்சனும் திரைக்கதை எழுதிய டேனியல் சயூஜ் நாயரும் கே.எஸ்.அரவிந்தும் கூடுதல் கவனம் செலுத்தியிருந்தால் விறுவிறுப்பான படத்தைக் கொடுத்திருக்கலாம். சம்பவங்கள் நடக்கும் வருடங்களைக் கோர்வையாகக் காட்டாமல் முன்னே பின்னே இழுத்துக் குழப்புவதால் அங்கங்கே கொட்டாவி வருவதைத் தடுக்க முடியவில்லை.
நல்ல ஒரு சுவாரசியமான கதையைக் கையிலெடுத்துக்கொண்ட இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரனுக்கு, அதை சுவாரசியான திரைக்கதையாக்கத் தெரியவில்லை. படம் தியேட்டர்களில் ரிலீஸாகியிருந்தாலும் ஓ.டி.டி.யில் மட்டுமே கொஞ்சம் ஓட்டி ஓட்டிப் பார்க்கலாம்.