அம்மா, அப்பா,அம்மம்மா,அப்பப்பா,சித்தி, சித்தித்தி, மாமா,மாமாமா,அக்கா, அக்கக்கா, என்று பக்காவாக சுமார் நாற்பது பேர் கொண்ட கூட்டுக்குடும்பத்தின் செல்லப்பிள்ளை சசிகுமார். பெற்றோரின் அன்புக்கும் உற்றாரின் பாசத்துக்கும்,அண்டை வீட்டாரின் அன்புக்கும்,எதிர் வீட்டாரின் எச்சரிக்கைக்கும் கட்டுப்பட்டவர். தாய் சொல்லை மட்டுமல்ல அந்தக் குடும்பத்தின் அத்தனை பேரின் சொல்லுக்கும் கட்டுப்பட்டவர்.
அய்யா போதும் ராசா கதை எங்களுக்குப் புரிஞ்சு போச்சு…நேரா கிளைமாக்ஸுக்கு வா ராசா என்கிறீர்களா? அதெப்படி?? யாம் பெற்ற இன்பம் இவ்வையகம் பெற வேண்டாமா…
அப்படியாகப்பட்ட உத்தம சீலரான சசிக்குமாருக்குத் திருமணம் செய்ய வீட்டார் முடிவெடுக்கிறார்கள். அந்தநேரம் பார்த்து உலகத்தை மிரட்டும் புவிவெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த ஒரு புதிய யோசனைக்குச் செயல்வடிவம் கொடுக்கவேண்டிய ஒலகமகா வேலை அவருக்கு வருகிறது.
சசிக்குமாராச்சே… என்ன செய்வார்? இந்த வேலைதான் முக்கியம், திருமணம் பிறகுதான் என முடிவெடுக்கிறார். ஆனால், அம்முடிவைத் தைரியமாக வீட்டில் உள்ளோரிடம் சொல்ல முடியவில்லை. குடும்பப்பாசம் அவரைத் தடுக்கிறது.
அதற்காக ஒரு நாடகம் ஆடுகிறார். அது என்ன? அதன் விளைவுகள் என்ன? அதன் விபரீதங்கள் என்ன ? அதனால் அவர் பட்ட கஷ்டங்கள் என்ன? அதற்காக அவர் எத்தனை வில்லன்களை தனது வீரதீர பராக்கிரமத்தால் பந்தாடினார்… என்பதுதான் மீதிப் படம்.
தொடர்ந்து பட்டிக்காட்டான் கேரக்டர்களிலேயே வருவதால் சசிகுமாரின் தோற்றத்தில் மாற்றம் செய்ய முயற்சித்திருக்கிறார்கள். அதாவது கிராமத்துக்காரராக இருந்தாலும் மிக அட்வான்ஸ் நாலெட்ஜ் கொண்டி ஐ.டி.ஊழியராம். எம்.ஜி.ஆர் மாறுவேடம் போட ஒரே ஒரு மச்சம் வைத்துக்கொள்வாரே அவ்வாறு இருக்கிறது இந்த புதிய கெட் அப். அதே போல் நடிப்பிலும்…உங்களுக்கு இந்த நடிப்பு போதும் என்கிற அலட்சியம் படம் முழுக்க பல்லிளிக்கிறது.
நாயகியாக நிக்கிகல்ராணி. இவரைப்பற்றி விளம்பர இடைவேளைக்குப்பின்னர் தனியாகப் பேசுவோம்.
அந்த 40 பேருமே சரியான காமெடி பீஸ்கள்தான் என்றாலும் இன்னும் கொஞ்சம் பிரத்யேகமாக, நகைச்சுவையோ நகைச்சுவை என சதீஷ், தம்பிராமய்யா, யோகிபாபு ஆகியோரை நேர்ந்துவிட்டிருக்கிறார்கள். சதீஷையும் யோகிபாபுவையும் ஓரளவு சகித்துக்கொள்ள முடிகிற அதே நேரத்தில் தம்பி ராமையாவோ மூக்குக்கு மேல் கோபம் வருமளவுக்கு காமெடி செய்திருக்கிறார். ‘மைனா’போல் ஏதோ ஒரு படத்துக்கு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருது வாங்கியதாக ஞாபகம். அதைத் திருப்பி வாங்கவேண்டிய நேரம் நெருங்கிக்கொண்டிருப்பதாகப்படுகிறது.
விஜயகுமார் சுமித்ரா தம்பதிகளின் தலைமையில் மிகப்பெரிய கூட்டுக்குடும்பம். அவர்களுக்கு கூட்டு,பொறியைல்,சாம்பார்,ரசம், தொட்டுக்க ஊறுகாய் வைப்பதுபோல் ஆளுக்கு ஒரு வசனம், ஆளுக்கு ஒரு காட்சி வைப்பதற்கே இயக்குநர் திண்டாடியிருக்கிறார்.
இவர்கள் போதாதென இதே ஊரில், ராதாரவி தலைமையில் ஒரு குடும்பம். அவர்களும் கூட்டம் கூட்டமாக வந்து போகிறார்கள். இவர்கள் எதற்காக வருகிறார்கள்..எதற்காக போகிறார்கள் என்று ரசிகர்களில் யாராவது கண்டுபிடித்துச்சொன்னால் அவர்களுக்கு பொற்காசுகளை பரிசாகத்தரலாம்.
இவ்வளவு துவம்சங்களுக்கு மத்தியில், இந்த ராஜவம்சத்தின் படத்தின் ஒரே ஆறுதலான அம்சம் சித்தார்த்தின் ஒளிப்பதிவு. கிராமத்தைக் காட்சிப்படுத்துவதில் உற்சாகத்தைக் கூட்டியிருக்கிறார்.
இசை சாம்சிஎஸ்…ம்ம்ம்ம் என்னத்தைச் சொல்ல?
புவிவெப்பமயமாதல் எனும் உலகமகா சிக்கலை கூட்டுக்குடும்பம் என்னும் என்னும் கூட்டு பொறியலுக்குள் அடக்க முயற்சித்த வகையில் அறிமுக இயக்குநர் கதிர்வேலுவை எப்படிப் பாராட்டுவதென்றே புரியவில்லை. இந்த புராக்டையும் ஐ.டி.நிபுணர் சசிக்குமாரிடமே ஒப்படைக்கும்படி ஒலக ஜனங்கள் சார்பாகக் கேட்டுக்கொள்கிறோம்.