சில படங்களை இது என்ன வகையான படம் என்று யோசித்து முடிப்பதற்குள் இடைவேளை வந்துவிடும். அப்படி இடைவேளை வரை பார்த்துவிட்டு ஓஹோ க்ரைம் த்ரில்லரோ என்று முடிவு செய்கையில் இடைவேளைக்கு அப்புறம் புது ரூட் எடுத்து பயணிப்பார்கள். அந்த மாதிரியான ஒரு இனத்தைச் சேர்ந்த படம்தான் இந்த ‘வனம்’.
கொஞ்சம் மர்மக்கொலைகள், கொஞ்சம் காதல், ’நெஞ்சம் மறப்பதில்லை’படத்திலிருந்து கொஞ்சம் முன் ஜென்ம பஞ்சாயத்து, கொஞ்சம் ஆதிவாசிகளுக்கான அக்கறை என்று நகர்கிறது இந்த வனம். நாயகன் வெற்றி ஒரு பெயிண்டர். கலைக்கல்லூரியில் படிக்கிறார். ஹாஸ்டலில் அவர் தங்கியிருக்கும் அறை எண் 1013ல் தொடர்ந்து தற்கொலைகள் நடக்கின்றன. அடுத்த தற்கொலை நாமாகத்தான் இருக்குமோ என்று பயந்து அது குறித்த விசாரணையில் இறங்கும்போது, ஒரு ஜமீன்தார் முன் ஜென்மத்தில் ஆதிவாசிப்பெண் ஒருவரை கொலை செய்ததும் அதற்குப் பழி வாங்க அப்பெண் தற்கால கல்லூரி மாணவியாக, நாயகனின் காதலியாக மறுபிறவி எடுத்திருப்பதும் தெரிய வருகிறது. அப்பிறவியில் நடந்த அநியாயத்துக்கு இப்பிறவியில் தீர்வு காண்கிறார்கள்.
‘எட்டுத்தோட்டாக்கள்’,’ஜீவி’ படங்களின் நாயகன் வெற்றிதான் ஹீரோ. நடிப்பில் அவருக்கு இன்னும் கொஞ்சம் ஆர்வம் தேவை. நாயகி ஸ்மிருதி வெங்கட் மிக கியூட்டாக அங்கங்கே சொல்லிக்கொள்ளும்படி நடிக்கவும் செய்திருக்கிறார். பழங்குடிப் பெண்ணாக வரும் அனு சித்தாரா சில காட்சிகளே வந்தாலும் பிரம்மாண்டமான தோற்றத்தால் மனதையும் திரையையும் ஆளுகிறார்.
விக்ரம் மோகனின் நேர்த்தியான ஒளிப்பதிவில் இருந்த சாமர்த்தியத்தை ரான் ஈத்தன் யோஹானின் இசையில் காணமுடியவில்லை. ஏதோ ஒரு குட்டிப்பையனின் கையில் கீபோர்டு கிடைத்தால் அவர் எப்படி வாசிப்பாரோ அப்படி இருக்கிறது இசை.
ஸ்ரீகண்டன் ஆனந்த் எழுதி இயக்கியிருக்கிறார். கொஞ்சம் வித்தியாசமாக கதை சொல்ல முயன்றிருக்கிறார் என்றாலும் விறுவிறுப்பு போதவில்லை. படம் ஜெயிக்க வெறும் டேக்கிங்கும், மேகிங்கும் மட்டும் போதாது. பார்ப்பவர்களின் மனதை டச்சிங்கும் பண்ணவேண்டும் டைரக்டர் சார்.