ஒரு படத்துக்குப் பொதுவாக 200 முதல் 300 பக்கங்களுக்குள் வசனம் எழுதுவார்கள். ஆனால் படத்துக்கு இப்படி ஒரு பெயர் வைத்ததாலோ என்னவோ 2000 பக்கங்களுக்கும் மேல் வசனம் எழுதியிருக்கிறார்கள்.
2016 நவம்பர் 8 ஆம் நாள் அதுவரை புழக்கத்தில் இருந்த 1000 ரூபாய் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாதென ஒர் ஆணவ அறிவிப்பை வெளியிட்டார் பிரதமர் மோடி. அதைத் தொடர்ந்து சில மாதங்கள் இந்திய ஒன்றியத்துக்கே பைத்தியம் பிடித்தது. வழக்கம்போல் பெருமுதலாளிகளும் பெரும் பணக்கார்களும் தப்பித்துக்கொள்ள எளிய மனிதர்கள் எலிகளைப்போல் ஆனார்கள்.
புதிய ரூபாய்த்தாள்களை அறிமுகம் செய்ததுமே அவற்றில் பேனா, பென்சில் ஆகியனவற்றால் எழுதினால் அவை செல்லாது எனவும் அறிவித்தார்கள். அந்த அறிவிப்பால் தனது குழந்தைக்கு மருந்து வாங்கமுடியாமல் தவித்து, அக்குழந்தையை பறிகொடுக்கும் ஒரு குடும்பத்தின் பரிதாபக் கதைதான் இந்த 2000.
அந்த ஒரு சம்பவத்தை ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதுபோல் எடுத்துக்கொண்டு அதிகாரவர்க்கத்துக்கெதிராகப் பெரும் ருத்ரதாண்டவமே ஆடியிருக்கிறது இந்தப்படம்.
படத்தில் பாதிக்கப்பட்ட விவசாயியாக நடித்திருக்கும் அய்யநாதனுக்காக வழக்காடும் வழக்கறிஞராக நடித்திருக்கிறார் பாரதி கிருஷ்ணகுமார். அவர் எடுத்து வைக்கும் வாதங்கள் கேள்விகள் ஒவ்வோன்றும் சம்மட்டி அடி.
இந்திய முழுக்க எவ்வளவு ஏடிஎம் மையங்கள் உள்ளன?, அவற்றைக் கையாள்வது யார்? அவற்றில் பணம் நிரப்பப்படுவது எப்படி? அம்மையங்களில் வரும் அழுக்கு மற்றும் கிழிந்த தாள்களுக்கு எவர் பொறுப்பு? என்பனவற்றோடு ரூபாய்தாள் என்றால் என்ன? என்பது பற்றியும் மிகத் தெளிவாக, விளக்கமாக வகுப்பறையில் பாடம் நடத்தும் நல்லாசிரியரின் பொறுப்புணர்ச்சியோடு நடித்து தோழர்பாலன் என்கிற வேடத்துக்குப் பெருமை சேர்த்திருக்கிறார் பாரதி கிருஷ்ணகுமார்.
அடிப்படையிலேயே மிகச்சிறந்த பேச்சாளர் என்பதால், இந்திய சினிமாவிலேயே அதிக வசனங்கள் எழுதப்பட்ட இப்படத்தை தனது சாமர்த்தியத்தால் சர்வசாதாரணமாக கடக்கிறார் பாரதி கிருஷ்ணகுமார். வீட்டுல அஞ்சாறு கோட்டு வாங்கி வச்சுக்கங்க தோழர்.
அவருடைய உதவியாளர் மற்றும் ஆணவக்கொலையால் மனைவியை இழந்து தவிக்கும் வேடத்தில் நடித்திருக்கும்
ருத்ரன் பராசு பொருத்தமாக நடித்திருக்கிறார்.
இதே கதையின் இன்னொரு டிராக்கில், தமிழகத்தை உலுக்கிய உடுமலை கவுசல்யா – சங்கரை நினைவுபடுத்தும் கதையையையும் ரத்தமும் சதையுமாக படம் பிடித்திருக்கிறார்கள்.
இன்னொரு உதவியாளராக நடித்திருக்கும் ஷர்னிகா, அரசு வழக்குரைஞராக வரும் கராத்தே’வெங்கடேஷ்,நீதிபதிகளாக வரும் ஓவியா,தியாகு ஆகியோர் நிஜமான களப்பணியாளர்கள் என்பதால் பாத்திரங்களுக்கு அவ்வளவு தத்ரூபமாய்ப் பொருந்திப்போகிறர்கள். அவர்கள் நடிப்பில் சிறிதும் சினிமாத்தனம் இல்லை. கதையைப் பற்றி சொன்னது போல் படத்தின் சாதகம், பாதகம் இரண்டுமே இந்த ஓவர் எதார்த்தம் தான்.
ஒளிப்பதிவாளர் பிரிமூஸ் தாஸுக்கு படம் முழுக்கவே கேமராவை அட்டென்சனில் நிறுத்திவிட்டு அவர் ’ஸ்டாண்ட் அட் ஈஸ்’ ஆக நிற்கிற வேலை மட்டும் தான். இயக்குநருக்கும் இசையமைப்பாளருக்கும் சங்கீத ஞானம் கிஞ்சித்தும் இல்லை.
படத்தை எழுதி இயக்கியிருக்கும் ருத்ரனின் மனத் துணிச்சல் அபாரமானது. ஆனால் இதே கதையில் கொஞ்சம் செண்டிமெண்ட் காட்சிகள் கலந்து, திரைக்கதையில் கொஞ்சம் விறுவிறுப்பைக் கூட்டியிருந்தால் தியேட்டருக்கு ஜனங்களை இழுத்திருக்கலாம்.
மற்றபடி இந்த 2000 ரூபாய் நோட்டு, செல்லுபடியாகக்கூடிய தரமான நோட்டுத்தான்.