தமிழ் சினிமாவில் பல்வேறு படங்களுக்கு நடப்பதுபோல், ஒரு ரூபாய் கூட முன் பணம் தராமல் ‘ஜெயில்’படத்தை சொந்தம் கொண்டாடும் ஞானவேல் ராஜாவை, கோர்ட் மூலம் சந்திக்கு இழுக்க முடிவு செய்துள்ளது வசந்தபாலனின் ‘ஜெயில்’படக்குழு.
வசந்தபாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி, ராதிகா சரத்குமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம்’ஜெயில்’.இத்திரைப்படத்தை, க்ரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் சார்பில் ஸ்ரீதரண் மாரிதாசன் தயாரித்துள்ளார்.
இப்படம் டிசம்பர் 9 ஆம் தேதி திரையரங்குகளில் வெளீயாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், இத்திரைப்படத்தை வெளியிடத் தடை விதிக்க கோரி ஸ்டூடியோ கிரீன் தயாரிப்பு நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது அந்த மனுவில், படத்தைத் தயாரித்துள்ள கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் காப்புரிமை, ஒடிடி உரிமை,சாட்டிலைட் உரிமை உள்ளிட்ட விநியோக உரிமைகளை ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்திற்கு வழங்கி அக்டோபர் மாதம் 24 ஆம் தேதி ஒப்பந்தம் போடப்பட்டது.
படத்தின் விநியோக உரிமையை தங்கள் நிறுவனம் பெற்றிருந்த நிலையில், திடீரென தயாரிப்பு நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் ஜெயில் படம் வரும் டிசம்பர் 9 ஆம் தேதி வெளிவர உள்ளதாகவும், தமிழ்நாடு திரைப்பட விநியோக உரிமையை எஸ்.எஸ்.ஐ ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் பெற்றுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது. அதுதவிர தயாரிப்பு நிறுவனம் ஜெயில் திரைப்படத்தின் சாட்டிலைட் மற்றும் ஒடிடி உரிமையையும் விற்க முயற்சி மேற்கொண்டு வருகிறது.
ஒட்டுமொத்த விநியோக உரிமையை தங்களுக்கு வழங்கி ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள நிலையில், தற்போது சட்டவிரோதமாகப் படத்தை வெளியிட முயற்சி நடப்பதால் அதற்குத் தடை விதிக்க வேண்டுமென கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு நேற்று விசாரணைக்கு வந்தபோது, வழக்கு குறித்து ஜெயில் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கிரெய்க்ஸ் சினி கிரியேசன்ஸ் ஒரு வாரத்தில் பதிலளிக்க உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை டிசம்பர் 3 ஆம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளார்.
ஆனால் உண்மையின் இன்னொரு பக்கம் மிகவும் விசித்திரமானது.
ஸ்டுடியோகிரீன் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டது உண்மை.ஆனால், இரண்டு விசயங்களில் ஸ்டுடியோகிரின் சொன்னபடி நடந்துகொள்ளவில்லை என்கிறார்கள்.
ஒன்று, அந்த ஒப்பந்தப்படி படத்தின் விலை சுமார் எட்டுகோடி ரூபாய். அதற்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தம் போட்ட ஸ்டுடியோகிரீன் நிறுவனம், ஒரு ரூபாய் நாணயத்தைக் கூட முன்பணமாகத் தரவில்லையாம். ‘நீ அரிசி கொண்டு வா…நான் யுமி கொண்டு வாரேன்…ரெண்டு பேரும் ஊதி ஊதிச் சாப்பிடலாம்’ என்கிற கதையாக ஒவ்வொரு உரிமையும் விற்பனை ஆகும்போது படிப்படியாகப் பணம் தருவதாகச் சொன்னார்களாம்.
இரண்டு, டிசம்பர் 9 ஆம் தேதி படத்தை வெளியிடவேண்டும் என்று சொன்னதை முதலில் ஒப்புக்கொண்டுவிட்டு அதன்பின் 2022 ஜனவரி மாதம் பொங்கலின்போது வெளியிடலாம் என்று சொன்னார்களாம்.
இவ்விரண்டு விசயங்களும் ஜெயில் படக்குழுவுக்கு ஒத்துவராததால் எஸ் எஸ் ஐ நிறுவனத்துடன் ஒப்பந்தம் போட்டுவிட்டார்களாம். ஆனால் அவர்களோ மூன்றரை கோடி முன்பணம் கொடுத்து ஒப்பந்தம் போட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.
அதோடு டிசம்பர் 9 ஆம் தேதி படம் வெளியாகும் என்றும் அறிவித்துவிட்டார்கள்.
ஸ்டுடியோகிரீன் தொடர்ந்துள்ள வழக்குக்கு உரிய பதிலை நீதிமன்றத்தில் சொல்வோம் ,படங்களை வாங்கி வெளியிடுகிறோம் என்கிற ஸ்டுடியோ கிரீன் ஞானவேல்ராஜா நடத்தும் கூத்துகளையும் அம்பலத்துக்குக் கொண்டுவருவோம் என்கிறது ஜெயில் படக்குழு.