நடிகர் சிம்பு ஒரு வெற்றிப்படம் கொடுத்து மாமாங்கம் ஆகியிருந்த நிலையில், தற்போது மிக வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் மாநாடு படத்தயாரிப்பாளர் மீது அவரது டாடி டி.ஆர். வழக்கு போட்டுள்ளார்.
‘மாநாடு’ சாட்டிலைட் உரிமை விவகாரம் தொடர்பாக டி.ராஜேந்தர் தொடர்ந்த வழக்கில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிலம்பரசன் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மாநாடு’. இதில் எஸ்.ஏ.சி, எஸ்.ஜே.சூர்யா, மனோஜ், கல்யாணி ப்ரியதர்ஷன், பிரேம்ஜி, கருணாகரன் உள்ளிட்ட பலர் சிலம்பரசனுடன் நடித்துள்ளனர். யுவன் இசையமைத்துள்ள இந்தப் படத்தை சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ளார்.
இப்படம் தீபாவளி பண்டிகைக்கு வெளியாகவிருந்து பின்னர் நவ.25ஆம் தேதி வெளியானது. படம் வெளியானது முதலே வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது.
ஆனால் ‘மாநாடு’ படத்தின் ரிலீஸ் அவதற்கு முந்தைய நாள் மாலை படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்படுவதாக தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது ட்விட்டர் பக்கத்தில் திடீர் அறிவிப்பை வெளியிட்டார். இதனால் சிம்பு ரசிகர்கள் பெரும் கவலை அடைந்தனர். இதற்கான காரணம் குறித்து விசாரித்தபோது படத்தின் சாட்டிலைட் உரிமை, மற்றும் ஓடிடி உரிமை விற்பனையாவதில் ஏற்பட்ட சிக்கல்களால் படத்தின் வெளியீடு தள்ளிவைக்கப் பட்டதாக படக்குழு வட்டாரத்தில் கூறப்பட்டது.
அதன் பின்னர் உடனடியாக அந்த சிக்கல்கள் தீர்க்கப்பட்ட பிறகு திட்டமிட்டபடி படம் மறுநாள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில் படத்தின் சாட்டிலைட் உரிமை தொடர்பாக படத்தின் பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி மீது டி.ராஜேந்தர் வழக்கு தொடர்ந்துள்ளார். இது டி.ராஜேந்தர் தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
படத்தின் சாட்டிலைட் உரிமை விற்காமல் இருந்ததால் டி.ராஜேந்தரை ரூ.5 கோடி பொறுப்பேற்றுக் கொண்டு, படம் ரூ.5 கோடிக்கு குறைவாக விற்றால் அதற்கான தொகையையும் டி.ராஜேந்தரே ஏற்றுக் கொள்ளவேண்டும் என்ற நிபந்தனையுடன் பைனான்சியர் உத்தம் சந்த் கடிதம் எழுதி அதில் டி.ராஜேந்தரின் கையெழுத்தையும் பெற்றுக் கொண்டுள்ளார். அதன் பிறகே மறுநாள் படம் வெளியாகியுள்ளது.
படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நேரத்தில் டி.ராஜேந்தரிடம் தெரிவிக்காமலேயே பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவரும் படத்தின் சாட்டிலைட் உரிமையை தனியார் தொலைகாட்சி ஒன்றுக்கு விற்க முற்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக டி.ராஜேந்தர் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கின் பேரில் பைனான்சியர் உத்தம் சந்த் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி இருவருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.