ஒளிப்பதிவாளர் விஜய் ஆம்ஸ்ட்ராங்க் அவர்களின் முகநூல் பதிவு…
இன்று ‘மாநகர காவல்’ திரைப்படத்தின் இயக்குநர், ஏவிஎம் ஸ்டியோவிற்கு எதிரில் இறந்து கிடந்தார் என்ற செய்தி, பரபரப்பாகப்பேசப்படுகிறது. தொண்ணூறுகளின் துவக்கத்தில் பெரிதாகப் பேசப்பட்ட படம் அது. திரைப்படக்கல்லூரி மாணவர்களுக்கு மதிப்பையும், வரவேற்பையும் பெற்றுத்தந்த படங்களில் ஒன்று. வெற்றிப்படமும் கூட… அதன் இயக்குநர் திரு.தியாகராஜன் அவர்களின் மரணம், பெரும் வலியை அனைவருக்கும் தருகிறது. அவரின் ஆன்மா அமைதி கொள்ளட்டும்.
இதைத்தொடர்ந்து, தமிழ்த்திரையுலகின் அவலநிலையைப்பற்றி பலரும் கவலைப்பட்டு பேசிக்கொண்டிருக்கிறார்கள். திறமை வாய்ந்த பல கலைஞர்களை, திரையுலகம் கைவிட்டுவிடும் அவலத்தைப்பற்றி ஆதங்க பதிவுகளைப் பார்க்க முடிகிறது. கடந்த இருபது வருடங்களாக திரைத்துறையில் இருப்பவன் என்ற வகையில் திரைத்துறைக்குறித்த என் பார்வையை பதிவு செய்ய விரும்புகிறேன்.
.*
திரைப்படம் என்பது கனவுகளின் உலகம் என்பது நாம் அறிந்ததுதான். அத்துறையும் ஏறக்குறைய அப்படிதான்… கனவுகள் நிரம்பிய தேசம்… கனவுகள் மட்டுமே நிரம்பிய தேசமும் கூட…!
திரைத்துறையை நோக்கி வருபவர்கள் அத்துணைப்பேருக்கும் கனவுகள் இருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு கனவுகள் மட்டுமே இருப்பதுதான் துயரம். கலை, சமூகப்பார்வை, அரசியல், மனிதம், உணர்வுகள் போன்றவற்றை நம்பி திரைத்துறைக்கு வருபவர்கள் மிகச்சொர்ப்பம் தான். பெரும் பணமும், புகழும் கூடவே கொஞ்சம் மனத்திருப்தியையும் பெற்றுவிடலாம் என்பதே, திரைத்துறையை நோக்கி வருகின்றவர்களில் பெரும்பாலானோருக்கு நோக்கமாக இருக்கிறது.
நான் கண்ட வரை… இங்கே, பெரும் அளவில், இளமையும், தகுதியும் வீணடிக்கப்படுகின்றன. தகுதிகள் இருந்தாலும், வாய்ப்புகளை பெற்றுவிடுவது அத்தனை சுலபம் அல்ல. காரணம்…
மற்றத்துறைகளைப் போன்று, தகுதி படிப்பு, அனுபவம், பயிற்சி, பயிற்சித்தேர்வு என எதுவும் இங்கே இல்லை. அதனால், கனவுகளை மட்டும் சுமந்துக்கொண்டு வந்து விடுகிறார்கள். வாய்ப்புகளுக்கு பெரும் கூட்டமே அலைமோதுகிறது. தகுதியும், தகுதியின்மையும் கலந்த கூட்டம் அது. அதனால், வெற்றி பெற எதையும் செய்யத் துணிகிறது. பொல்லாப்பு / புறம் பேசுதல், அவமதித்தல், வாய்ப்புகளை தட்டிப்பறித்தல், உழைப்பை சுரண்டுதல் போன்ற பல்வேறு தீய குணங்களை, பழக்கங்களை பார்க்கலாம். இது இங்கே மட்டுமல்ல. பெரும் பணமும், புகழும் வந்து சேரும் எல்லாத்துறையிலும் காணக்கூடியதுதான். அரசியலும் அப்படித்தான் என்பதை நாம் அறிவோம்.
தகுதி தேர்வோ, தகுதி நிர்ணயமோ அற்ற இந்த ஓட்டப்பந்தயத்தில், பலரும் கலந்துக்கொள்கிறார்கள். தான் வெற்றிப்பெருவதை விட, முன்னால் ஓடிக்கொண்டிருப்பவனை வீழ்த்தவே பலரும் விரும்புகிறார்கள். தன்னை தாண்டி எவனும் ஓடிவிடாமல் பார்த்துக்கொள்வதன் மூலம், தானே முதலாவதாக இருந்துவிட முடியும் என்ற எண்ணம் பலருக்கும் இருப்பதை காணலாம். நெருங்கிய நண்பர்கள் கூட, உங்களுடைய முயற்சிகளுக்கு துணை நிற்க மாட்டார்கள். உதவி செய்ய மாட்டார்கள். அதைக்கூட பொருத்துக்கொள்ளலாம். பெரும்பாலான நேரங்களில், உங்கள் வாய்ப்புகளை தட்டிப்பரிப்பவர்கள் அவர்களாகத்தான் இருப்பார்கள் என்பது தான் பெரும் துயரம். அதனாலையே, இங்கே பலரால் வெற்றிப்பெற முடியாமல் போகிறது.
வாய்ப்புகளுக்காக காத்திருந்து காத்திருந்து, தங்களுடைய இளமையையும், வாழ்க்கையும் தொலைத்தவர்கள்தான் அதிகம். இனி தனக்கான கதவு திறக்கவே திறக்காது என்ற உண்மையை உணர்ந்தோ, உணராமலோ… காலம் தள்ளும் பலரை நான் சந்தித்திருக்கிறேன். நமக்கு நன்றாகத்தெரியும், இவரால் இனி வாய்ப்புகளைப் பெற முடியாது என்று, ஆனால் அந்த உண்மையை நாம் அவருக்கு சொல்ல முடியாது. பல வருட உழைப்பை, காத்திருத்தலை… இங்கே அவர் செலவிட்டிருப்பார், எப்படியாவது அவருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துவிடாதா என்ற ஆசை நம்மிடமும் இருக்கும், பெரும்பாலும் அது நிராசையாக ஆகிவிடுவதை பல வருடங்களாக பார்த்து வருகிறேன். விட்டில் பூச்சியாய் பலரும் இருப்பதை பார்க்க துயரமாக இருக்கிறது.
கலையைவிட, வணிக கணக்குகள் அதிகம் கொண்ட இடம் இது. யாரும் யாருக்கும் உதவி செய்திட முடியாது. எல்லோருக்கும் எப்படியாவது தங்களை தக்க வைத்துக்கொள்ள வேண்டிய நிர்பந்தம் இருக்கிறது. அதனால், யாரையும் பழித்தல் ஆகாது. யாரையும் குற்றம் சுமத்திட முடியாது. தனி மனிதர்களை மட்டுமல்ல. சங்களையும் குற்றம் சொல்ல முடியாது. சங்களின் கைகள் நீளமுடியாது தூரமும், பல்முனை பரவலும் கொண்ட பெரும் பரப்பு இது.
எனில், இங்கே எப்படிதான் வெற்றிப்பெருவது? திரைத்துறைக்கு வரலாமா… கூடாதா?
வரலாம்…!
கனவுகளை மட்டும் சுமந்துக்கொண்டு வராதீர்கள். தகுதிகளையும் வளர்த்துக்கொண்டு வாருங்கள். கூடவே ஒரு கடிகாரத்தையும் கட்டிக்கொண்டு வாருங்கள்.
எது தகுதி? சினிமாவிற்கு என்ன தகுதி வேண்டும்?
கலைக்கு என்ன படிப்பு? கலையை கல்லூரியில் போதித்துவிட முடியுமா? என்ற வாதத்தை நான் பலமுறை கேட்டிருக்கிறேன். திரைத்துறையில் பரவலாக பேசப்படும் வாதம் அது.
கலைக்கு வேண்டுமானால், படிப்பு அவசிமில்லாமல் இருக்கலாம். ஆனால், திரைப்படத்திற்கு உண்டு. திரைப்படம் என்பது, எத்தனை சதவிதம் கலையோ, அதே அளவு தொழில்நுட்பமும் கூட… தொழில்நுட்பம் கொண்டு, கலை படைத்திடல் வேண்டும். தொழில்நுட்பம் என்றானபோது, அதை படித்து தேற வேண்டும் தானே..!?
தேறிவிட்டு, இங்கே வாருங்கள். போர்க்களத்தில் ஆயுதம் இன்றி நிற்பதை விட, பெரும் தவறு அனுபவம் இன்றி நிற்பது. அனுபவமே கற்றல். கற்றலை துரிதப்படுத்த படிப்புகள் உதவும்.
மேலும், எதற்கும் ஒரு எல்லைக்கோடு வரைந்துக்கொள்ளுங்கள். எல்லை இல்லா கனவுகள், தடையில்லா வாய்ப்புகள், முறையில்லா உறவுகள், உண்மையில்லா நட்புகள், கட்டற்ற சுதந்திரம்… உங்களை பாழ்படுத்திவிடும் சாத்தியம் அதிகம் இங்கே. உங்கள் நேரத்தை, இளமையை, ஆரோக்கியத்தை பணயம் வைத்து விளையாடும் இந்த விளையாட்டு, அத்தனையும் வீணடித்துவிடுவதை, விழிப்புணர்வோடு கண்காணியுங்கள்.
கனவுகளுக்கும் எல்லை உண்டு…
கலையாத கனவும் துயரமே.
அடையாத கனவும் பாரமே…!
கனவுகளை விட வாழ்க்கை முக்கியம். நீங்கள் இந்த மண்ணில் விழுந்தது, திரைப்படமெடுக்க அல்ல, வாழ்ந்து… கரைய என்பதை நினைவில் கொள்ளுங்கள். வாழ்வு ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நொடியும் கரைந்துக்கொண்டிருக்கிறது.
இங்கே வெற்றிப்பெற…உங்கள் தகுதி, மேன்மை, உழைப்பு, கனவு மட்டும் போதாது…
இது ஒரு போர்களம். எந்த விதிகளும் இதற்கு இல்லை. பிழைத்திருத்தல் மட்டுமே குறிக்கோளாக கொண்ட பெரும் கூட்டத்தின் போர்க்களம் இது. அதில் இறங்குவது மட்டுமல்ல…. உயிரோடு வெளியேறுவதும் வெற்றியே…! சரியான நேரத்தில், சரியான தருணத்தில் வெளியேற… துணிவும், வாய்ப்பும் இருந்தால் மட்டும் இங்கே வாருங்கள். இல்லை என்றால், வெளியே நின்று வேடிக்கைப்பாருங்கள். கைத்தட்டி ரசியுங்கள். மகிழ்ந்திருங்கள். உள்ளே கால் வைக்காதீர்கள்.
இது சதுப்பு நிலமும் கூட…!