பெரும்பாலான படங்களில் சாதுவான அப்பாவிப்பெண்ணாக நான் நடித்திருந்தாலும், நிஜத்தில் நான் ரொம்ப போல்டான பொண்ணு’ என்று ஷாக் கொடுக்கிறார் நடிகை சோனியா அகர்வால்.
செல்வராகவன் இயக்கிய காதல் கொண்டேன் படத்தின் மூலம் அறிமுகமானவர் சோனியா அகர்வால். இவர் பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர். ‘7 ஜி ரெயின்போ காலனி’, ‘திருட்டுப் பயலே’, ‘கோவில்’, ‘மதுர’, ‘புதுப்பேட்டை’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். இப்போது ‘கிராண்ட்மா’ என்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார். இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று பிரசாத் லேப்பில் நடந்தது.
அவ்விழாவில் நடிகை சோனியா அகர்வால் கலந்து கொண்டு பேசியதாவது:-இந்த படத்தில் நான் ஆசிரியை வேடத்தில் நடித்திருக்கிறேன். பல படங்களில் நான் சாதுவான பெண்ணாகவே நடித்து உள்ளேன். இயல்பாக நான் மிகமிக துணிச்சலான பெண். ஆனால் நேரில் பார்த்தால் அப்படி தெரியாது.
ஒரு ஊரில் இருந்து இன்னொரு ஊருக்கு காரில் தனியாகவே பயணம் செய்திருக்கிறேன். காரை நானே ஓட்டுவேன். யாருக்கும் பயப்படமாட்டேன். நான் பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது என்னைக் கேலி செய்த ஒரு மாணவனை கன்னத்தில் அறைந்து நான் துணிச்சலான பெண் என்பதை நிரூபித்தேன். [அந்த மாணவன் பெயர் செல்வராகவன் என்பதாக தகவல்]
எனது தாய்மொழி பஞ்சாபி. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் 40-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறேன். அடுத்து ‘கிராண்ட்மா’ படம் திரைக்கு வர உள்ளது.
எனக்கு ஒரே ஒரு தம்பி மட்டும் இருக்கிறார். அவர் இசையமைப்பாளராக பணிபுரிகிறார். எனக்கு இசையில் ஆர்வம் உண்டு என்றாலும், சொந்த குரலில் பாடி நடிக்கவில்லை. அடுத்து ஒரு படத்தில் பாடகியாக நடிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன்’என்கிற சோனியா பாடகியாக நடிக்கும் படத்தில் மட்டும் சொந்தக்குரலில் பாட ஆசைப்படுகிறாராம்.